ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : பல்துறை ஜாம்பவானாக உருவாகும் 'கிராசிம்'
ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : பல்துறை ஜாம்பவானாக உருவாகும் 'கிராசிம்'
ADDED : மே 31, 2026 01:06 AM

ஆதித்யா பிர்லா குழும நிறுவனமான 'கிராசிம் இண்டஸ்ட்ரீஸ்' என்றாலே 'அல்ட்ராடெக் சிமென்டின் 56 சதவீத பங்குகள், விஸ்கோஸ் ஸ்டேபிள் பைபர்' மற்றும் கெமிக்கல்ஸ் தயாரிப்பில் உலகளாவிய முதலிடம் ஆகிய மூன்று விஷயங்கள்தான் நினைவுக்கு வரும்.
இதனால், சந்தையில் இந்நிறுவன பங்கு மதிப்பு பல ஆண்டுகளாக 50 சதவீதம் வரை 'ஹோல்டிங் கம்பெனி டிஸ்கவுன்ட்' அடிப்படையில் குறைத்தே மதிப்பிடப்பட்டு வந்தது. மேலும், 'வோடபோன் ஐடியா' போன்ற குழுமத்தின் பிற தேவைகளுக்கு இதன் முதலீடுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டும் இருந்தது.
ஆனால், தற்போது 'பிர்லா ஓபஸ் (பெயின்ட்ஸ்) மற்றும் பிர்லா பிவோட்' (ஆன்லைன் வர்த்தகம்) ஆகியவற்றின் வாயிலாக, கிராசிம் ஒரு முழுநேர உற்பத்தி நிறுவனமாக மாறியுள்ளது.
இத்துடன், அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவின் மின் உற்பத்தி திறனும் 2022ல் 550 மெகாவாட்டில் இருந்து, 2026 நிதியாண்டு முடிவில் 2 கிகாவாட்டாக (2,000 மெகாவாட்) உயர்ந்து சந்தையின் பார்வையை மாற்றியுள்ளது.
பெயின்ட்ஸ் சந்தையில் பிர்லாவின் வியூகம் ஏசியன் பெயின்ட்ஸ் 60 சதவீத சந்தை பங்கை வைத்திருந்தது. இந்த சூழலில், 2024ல் நுழைந்த பிர்லா ஓபஸ், கடந்த மே மாத நிதி முடிவுகளின்படி, 10 சதவீத வருவாய் சந்தை ப ங்கை தாண்டியது.
எனவே, 'பெர்ஜர் பெயின்ட்ஸை' வீழ்த்தி, இந்தியாவின் 2வது பெரிய பெயின்ட் நிறுவனமாக மாறியுள்ளது. 3 ஆண்டுகளில் 10,000 கோடி ரூபாய் வருவாய் மற்றும் 2வது பெரிய லாபகரமான நிறுவனம் என்ற இலக்குடன் முதலில் சந்தையை கைப்பற்றும் நிதானமான வியூகத்தை இது கையாள்கிறது.
தற்போது 35 மாநிலங்களின் 11,500 நகரங்கள், 50,000+ ஆக்டிவ் டீலர்கள், 1,200 ஷோரூம்கள் மற்றும் 7.50 லட்சம் கான்ட்ராக்டர்களை தன்வசப்படுத்தியுள்ளது. காரக்பூர் ஆலை (அக்டோபர் 2025) உட்பட 6 ஆலைகள் வாயிலாக, இந்தியாவின் 24 சதவீத உற்பத்தி திறனை இது பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தின் 21 8 தயாரிப்புகளில் 1,850க்கும் மேற்பட்ட அளவுகளில் பெயின்ட் ரகங்களை விற்பனை செய்கிறது.
கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டில் மூலப்பொருள் விலை 20 - 25 சதவீதம் உயர்ந்ததால், விலையை 2 முதல் 6 சதவீதம் வரை உயர்த்தியபோதும் இதன் விற்பனை பாதிக்காமல் சீராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் வர்த்தகத்தில் 'பிர்லா பிவோட்' கட்டுமான பொருட்களுக்கான ஆன்லைன் மொத்த வர்த்தக தளமான 'பிர்லா பிவோட்' 2026 நிதியாண்டின் 3வது காலாண்டிலேயே 8,500 கோடி ரூபாய் வருவாய் இலக்கை தொட்டுள்ளது.
இது, 2027க்குள் திட்ட மிட்ட இலக்கை விட அதிகம் என்பதுடன், இதன் 4வது காலாண்டு வருவாய் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
பிர்லா குழுமத்தின் மீதான நம்பிக்கையை பயன்படுத்தி சிமென்ட், இரும்பு, கெமிக்கல்ஸ் போன்ற 40,000க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை பில்டர்கள் மற்றும் எம். எஸ்.எம்.இ.,களுக்கு நேரடி யாக சப்ளை செய்கிறது.
அல்ட்ராடெக்: 20 கோடி டன் உற்பத்தி கிராசிமின் மிகப்பெரிய பலமான அல்ட்ராடெக் சிமென்ட், ஏப்ரல் 2026ல் ஆண்டுக்கு 20 கோடி டன் உற்பத்தி திறனை எட்டியுள்ளது. மார்ச் 2028க்குள் 24 கோடி டன்னாக உயர்த்த இலக்கு உள்ளது.
ஒரு டன் சிமென்டுக்கான லாபத்தை 1,253 ரூபாயாக உயர்த்தியதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி செலவையும் டன்னுக்கு 185 ரூபாய் வரை குறைத்துள்ளது.
பசுமை மின்சார பயன்பாட்டை 2025 நிதியாண்டில், 33 சதவீதமாக உயர்த்தி, 2030-க்குள் 85 சதவீதமாக மாற்ற இலக்கு வைத்துள்ளது. சமீபத்தில் ஒரு பங்கிற்கு 240 ரூபாய் டிவிடெண்டு அறிவிக்கப்பட்டதன் வாயிலாக, தாய் நிறுவனமான கிராசிமிற்கு வரி விலக்குக்கு முன்னதாக கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கவுள்ளது.
பாரம்பரிய தொழில்கள் நிலை கிராசிமின் பழைய தொழில்களும் சீராக இயங்குகின்றன. டெக்ஸ்டைல்ஸ் பைபர் பிசினஸ், 2026 நிதியாண்டின் 3வது காலாண்டில், 48 சதவீத வளர்ச்சியுடன் 491 கோடி ரூபாய் எபிட்டா லாபத்தை தந்துள்ளது. ஆண்டுக்கு 1.10 லட்சம் டன் திறன் கொண்ட 'ஹரிஹர் லியோசெல்' ஆலை விரிவாக்கம் இதற்கு உதவும்.
கெமிக்கல்ஸ் பிரிவில் காஸ்டிக் சோடா விற்பனை 3.21 லட்சம் டன் என்ற உச்சம் தொட்டாலும், மூலப்பொருள் விலையால் ஸ்பெஷாலிட்டி பிரிவின் லாபம் சற்று குறைந்தது. எபோக்சி ரெசின்கள் ஏற்றுமதி வாயிலாக, கொரிய நிறுவனங்களுக்கு போட்டியாக இது வளர திட்டமிட்டுள்ளது.
டிசம்பர் 2025 முடிவில், நிறுவனத்தின் நிகர கடன் 6,882 கோடி ரூபாயாக இருப்பதால், நிதி நிலைமை வலுவாக உள்ளது. அல்ட்ராடெக் டிவிடெண்டு தொகையான 2,880 கோடி ரூபாயை ஆதித்யா பிர்லா கேபிட்டலில் முதலீடு செய்ய எடுத்த முடிவு முதலீட்டாளர்களிடம் கேள்விகளை எழுப்பினாலும், சொந்த வளர்ச்சி பணிகளுக்கே நிதி பயன்படுத்தப்படும் என நிர்வாகம் விளக்கியுள்ளது.
முக்கிய சவால்கள் பெயின்ட்ஸ் பிரிவில் நீடிக்கும் நஷ்டம்: பிர்லா ஓபஸ் பெரிய அளவில் வளர்ந்திருந்தாலும் எபிட்டா அளவில் நஷ்டத்திலேயே உள்ளது. 2028 அல்லது 2029ம் நிதியாண்டுக்கு முன்பே இது லாப பாதைக்கு திரும்புவது சந்தேகமே.
சீனாவின் தாக்கம்: பழைய தொழில்களான பைபர் மற்றும் கெமிக்கல்ஸ் முழு உற்பத்தி திறனை எட்டிவிட்டதால், இனி லாபம் உலக சந்தையின் விலையை பொறுத்தே அமையும். குறிப்பாக, சீன சந்தையின் மந்தநிலை லாபத்தைக் குறைக்கலாம்.
குழும நிறுவன முதலீடுகள்: கிராசிமின் பணத்தை குழுமத்தின் பிற நிறுவனங்களுக்கு (உதாரணமாக ஆதித்யா பிர்லா கேபிட்டல்) பயன்படுத்துவது முதலீட்டாளர்கள் மத்தியில் 'ஹோல்டிங் கம்பெனி டிஸ்கவுன்ட்' அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ஒரே நேரத்தில் பல சவால்கள் பெயின்ட்ஸ், சிமென்ட், ஆன்லைன் வர்த்தகம், பசுமை மின்சாரம் என, பல தொழில்களை ஒரே நேரத்தில் வேகமாக விரிவுபடுத்துவதை ஒருங்கிணைப்பது நிர்வாகத்திற்கு பெரிய சவாலாகும்.
உண்மையான மதிப்பு என்ன? பங்குச்சந்தை தற்போது கிராசிமின் மதிப்பை அதன் துணை நிறுவனங்களின் (அல்ட்ராடெக் போன்றவை) பங்குகளை வைத்தே கணக்கிடுகிறது. ஆனால், 'பிர்லா ஓபஸ்' நிலையான வளர்ச்சியை காட்டி, லாப பாதைக்கு திரும்பும்போது, கிராசிமின் மதிப்பு பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.
லார்ஜ்கேப் சந்தையில் ஒரே நிறுவனத்தின் கீழ் சிமென்ட், பெயின்ட்ஸ், பைனான்ஸ், பசுமை மின்சாரம் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் என பல்வேறு துறைகளில் முதலீடு செய் யும் பலனை இது தருகிறது.
நீங்கள் கிராசிமை வெறும் முதலீட்டு நிறுவனமாக பார்க்கிறீர்களா அல்லது நேரடியாக தொழில் செய்யும் ஒரு பல்துறை ஜாம்பவானாக பார்க்கிறீர்களா என்பதை பொறுத்தே உங்கள் முதலீடு அமைய வேண்டும்.
பொறுப்பு துறப்பு இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
