PUBLISHED ON : செப் 28, 2025

அன்புள்ள அம்மாவுக்கு,
நான், 44 வயது பெண். கணவர் வயது: 55. அரசு துறையில் பணிபுரிகிறார். நான், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டேன்.
எங்களுக்கு ஒரே மகன். கல்லுாரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறான். மாமியார் எங்களுடன் தான் வசிக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார், மாமனார். என் அண்ணன் குடும்பத்துடன் வெளியூரில் வசிக்கின்றனர், என் பெற்றோர்.
தெளிந்த நீரோடையாக சென்று கொண்டிருந்த என் மண வாழ்க்கை, கடந்த 10 ஆண்டுகளாக தத்தளிக்கிறது. காரணம், கணவரின் சபல புத்தி.
எங்கு சென்றாலும், வயது வித்தியாசம் இல்லாமல், மற்ற பெண்களை முறைத்து முறைத்து பார்க்கிறார். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்கு சென்றாலும், அங்கு வரும் பெண்களை பார்த்துக் கொண்டிருப்பார். இது சகிக்காமல், அவருடன் சண்டை போடுவேன்.
கணவரின் இக்குணத்தால், இப்போதெல்லாம் அவருடன் வெளியே செல்வதையே தவிர்க்கிறேன். சகஜமாக பேசவும் முடிவதில்லை.
பணிவாகவும், கோபமாகவும், அவரிடம் இதுபற்றி கூறி, 'இந்த பழக்கம் எனக்கு பிடிக்கவில்லை...' என, பலமுறை கூறியும், அவர் திருந்துவதாக இல்லை. மற்ற எந்த விஷயத்திலும், அவரை குறை சொல்ல முடியாது. எனக்கு, மகனுக்கு மற்றும் வீட்டுக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வார்.
இவரது இந்த பலவீனத்தால், மகனின் எதிர்காலம் பாதிக்குமோ என, பயப்படுகிறேன்.
வேலை விஷயமாக அடிக்கடி வெளியூரும் சென்று விடுவார். போன இடத்தில் ஏதாவது பிரச்னை வந்துவிடுமோ என, அஞ்சுகிறேன்.
கணவரது, அந்த பழக்கத்தை எப்படி நிறுத்துவது என்று, ஆலோசனை தாருங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு,
ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு தாம்பத்ய ஆசை, கீழிருந்து மேலாக பயணித்து மூளையின் ந்யூரான் செல்களில் கூடாரமிட்டு விடும். உன் கணவர் மட்டுமல்ல, 90 சதவீத பூமர் ஆண்கள், பெண்களை பராக்கு பார்க்கவே செய்கின்றனர்.
கடுமையான நீரழிவு நோயாளி, இனிப்பு வகைகளை வெறித்து வெறித்து பார்க்கிறார் என்றால், கடை உரிமையாளருக்கு எதாவது நஷ்டமா? கடையின் இனிப்பு வகைகள் குறைந்து விடுமா? கடைக்கு அழைத்து செல்லும் மனைவிக்கு எதாவது கை நஷ்டமா? மூன்று தரப்புக்கும் நஷ்டமில்லை.
உன் கணவர், பெண்களை முறைத்து பார்க்கும் போது, உன் பார்வையால், அவரை கட்டுப்படுத்து.
உன் கணவர் முறைக்கும் போது, எல்லா பெண்களும் பொறுமையாக இருக்க மாட்டார்கள்.
'என்னய்யா பட்டிக்காட்டான் மாதிரி முறைக்கிற? கண்முழிய நோண்டிருவேன் எட்டிப் போய்யா...' என, வசவுவர்.
காறித் துப்புவர், சிலர்; கால் செருப்பை எடுத்துக் காட்டுவர், சிலர்.
கணவரை, கைக்குள் வைத்துக் கொள்ளும் விதமாக உன், 'பர்சனாலிட்டி'யை மேம்படுத்து.
வெளியே அவரை அழைத்து செல்லும் போது, அவரது கண்கள் எங்கு பார்க்கின்றன என்பதை அறிய முடியாதபடிக்கு குளிர்கண்ணாடி அணிவி.
யாரையும், 20 நொடிக்கு மேல் பார்த்தார் என்றால், இடுப்பில் ரகசியமாக கிள்ளு. காலை மிதி.
முறைபடும் பெண்ணிடம், 'விடாதே நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு வார்த்தை கேளு...' என சமிக்ஞை செய். 'புருஷா... நீ பார்க்கும் பெண்களில், உன் மருமகள் வயது பெண்களும் இருக்கின்றனர் திருந்து...' என, எள்ளி நகையாடு.
ஒரு மனநல ஆலோசகரிடம் கணவரை அழைத்துப் போய், வேப்பிலை அடி.
— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.