தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ லஞ்ச பணத்தை திருப்பி கேட்டு 'கம்பி எண்ணும்' அதிகாரி!

 லஞ்ச பணத்தை திருப்பி கேட்டு 'கம்பி எண்ணும்' அதிகாரி!

 லஞ்ச பணத்தை திருப்பி கேட்டு 'கம்பி எண்ணும்' அதிகாரி!


PUBLISHED ON : மே 26, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 26, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நா ளிதழை மடித்தபடியே, “ரொம்பவும் கறாரா வசூல் பண்றாங்க பா...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

“யாருவே அது...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

“திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தில் ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... இவங்க கட்டுப்பாட்டுல, ஒன்பது ஊராட்சிகள் வருது பா...

“இந்த ஊராட்சிகள்ல நடக்கிற பணிகளுக்கான பில் தொகைக்கு, இந்த பெண் அதிகாரி தான் ஒப்புதல் வழங்கணும்... ஆனா, பில் தொகையில் 20 சதவீதத்தை அட்வான்சா தந்தா மட்டுமே, ஒப்புதல் தர்றாங்க பா...

“தேர்தல் செலவுகளுக்கு ஒவ்வொரு ஊராட்சியிலும், 8,000 முதல் 13,000 ரூபாய் வரை செலவு பண்ணியிருக்காங்க... இந்த பில்களுக்கு ஒப்புதல் வழங்க, பெண் அதிகாரி தலா, 3,000 ரூபாயை கறாரா கேட்கிறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.

“கலாவதி மேடம்... சாயந்தரமா பேசறேன்...” என மொபைல் போனை, 'ஆப்' செய்தபடியே வந்த குப்பண்ணா, “உள்ளாட்சி துறையில் கமிஷன் வசூல் இன்னும் நீடிக்கறது ஓய்...” என்றார்.

“எந்த ஊருலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.

“திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள்ல இருக்கற பேரூராட்சி உதவி இயக்குநர் ஆபீஸ்கள்ல, கமிஷன் கலாசாரம் இன்னும் முடிவுக்கு வரல... பேரூராட்சிகள்ல எந்த பொருட்கள் கொள்முதல் செய்தாலும், 15 சதவீதம் வரை கமிஷன் வெட்டணும் ஓய்...

“குறிப்பா, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வாங்கணும்னா கூட, 15,000 ரூபாயை உதவி இயக்குநர் ஆபீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனா வெட்டணும்... 'அரசு அலுவலகங்கள்ல லஞ்சத்தை ஒழிக்கணும்'னு முதல்வர் விஜய் உத்தரவு போட்டிருக்காரோல்லியோ...

“அதெல்லாம் நடைமுறைக்கு வந்துட்டா, காலம் தள்ள முடியாதுன்னு நினைக்கற பேரூராட்சி உதவி இயக்குநர் ஆபீஸ் அதிகாரிகள், தங்களது தொகுதிக்கு உட்பட்ட த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களை பார்த்து, 'எங்களை பத்தி பொதுமக்கள் புகார் தந்தா கண்டுக்காம இருங்கோ'ன்னு சொல்ல திட்டமிட்டிருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.

“லஞ்ச பணத்தில் கொஞ்சத்தை திருப்பி தந்துட்டு, மாட்டியும் விட்டுட்டாவ வே...” என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

“கடந்த தி.மு.க., ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில, 'பசை'யான இடங்களை வழங்க, துறையின் மேலிட அளவில் வசூல் வேட்டை நடந்துச்சு... அந்த வகையில், ராமநாதபுரத்தில் ஒரு சார் - பதிவாளருக்கு இடமாறுதல் வழங்க, 70 லட்சம் ரூபாய் வாங்கியிருக்காவ வே...

“ஆனா, தேர்தல் வந்துட்டதால உத்தரவு போடாம போயிட்டாவ... இப்ப, ஆட்சி மாறிட்டதால, பணம் குடுத்த புரோக்கரிடம் சார் - பதிவாளர் பணத்தை திரும்ப கேட்டும் கிடைக்கல வே...

“இந்த விவகாரத்துல, சார் - பதிவாளருக்கும், புரோக்கருக்கும் தகராறு ஆயிட்டு... கடைசியா புரோக்கர் தரப்பு,சார் - பதிவாளர் வங்கி கணக்கில், 25 லட்சம் ரூபாயை போட்டிருக்கு வே...

“அதே நேரம், இப்படி பணத்தை போட்டுட்டு, அந்த சார் - பதிவாளரை லஞ்ச ஒழிப்பு துறையிடம் காட்டியும் குடுத்துட்டு... இப்ப, அந்த சார் - பதிவாளர் கம்பி எண்ணிட்டு இருக்காரு வே...” என முடித்தார், அண்ணாச்சி.

“ராமநாதன், நாளைக்கு பார்க்கலாம்...” என, நண்பரிடம் அந்தோணிசாமி விடைபெற, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us