தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ அரசியலுக்கு முழுக்கு போட தயாராகும் அமைச்சர்?

 அரசியலுக்கு முழுக்கு போட தயாராகும் அமைச்சர்?

 அரசியலுக்கு முழுக்கு போட தயாராகும் அமைச்சர்?


PUBLISHED ON : பிப் 05, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2026 03:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''கா ஞ்சிபுரம் கைநழுவிடுமோன்னு பயப்படுறாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''எந்த கூட்டணியில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''பா.ம.க.,வின் அன்புமணி அணி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சேர்ந்திருக்கே... அன்புமணி கட்சி சார்பில், காஞ்சிபுரம் தொகுதியில போட்டியிட விருப்ப மனு குடுத்தவங்களிடம், சமீபத்துல நேர்காணல் நடந்துச்சு பா...

''இதை பார்த்துட்டு, அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சியில இருக்காங்க... 'கடந்த, 10 வருஷமா இந்த தொகுதியில் தி.மு.க.,தான் ஜெயிக்குது... அதனால, இந்த முறை நாமே போட்டியிட்டு, தி.மு.க.,வை வீழ்த்தணும்'னு அ.தி.மு.க.,வினர் காத்துட்டு இருக்காங்க பா...

''முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் இங்கே போட்டியிட தயாரா இருக்காரு... அதனால, 'காஞ்சிபுரம் தொகுதியை பா.ம.க.,வுக்கு தராம நாமே போட்டியிடணும்'னு, தலைமைக்கு, அ.தி.மு.க.,வினர் தகவல் அனுப்பிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''பட்டப்பகல்லயே பொது இடத்துல விபச்சாரம் நடக்கறது ஓய்...'' என்ற அதிர்ச்சி தகவலை கூறினார், குப்பண்ணா.

''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னை, தாம்பரம் போஸ்ட் ஆபீசை ஒட்டியிருக்கற, பஸ் ஸ்டாண்ட் இடத்தை, 'பார்க்கிங்' மாதிரி பலரும் பயன்படுத்தறா... இங்க தினமும் ஏகப்பட்ட கார்கள், வேன்களை பலரும் நிறுத்தறா ஓய்...

''இந்த வண்டிகளோட வண்டியா ஆட்டோவை நிறுத்தி, திரைகளை இழுத்து விட்டுண்டு, அதுக்குள்ள விபச்சாரம் நடக்கறது... அந்த பக்கம் போலீசாரும் ரோந்து போறது இல்ல... இதனால, ஆட்டோ விபச்சாரம் அமோகமா நடக்கறது ஓய்...

''ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடற இடத்துல, இப்படி நடக்கறது போலீசாருக்கு தெரியாமலா இருக்கும்... இனியாவது போலீசார் உஷாராகி, இந்த நுாதன விபச்சார இடத்தை தடுக்கணும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''அரசியலுக்கு முழுக்கு போட தயாராயிட்டாரு வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.

''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''கடலோர தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரை தான் சொல்லுதேன்... அ.தி.மு.க.,வுல இருந்து தி.மு.க.,வுக்கு வந்த இவர், சமீபகாலமா கடும் முதுகுவலியால அவதிப்படுதாரு வே...

''பெரும்பாலும், வீட்டுல ஓய்வுல இருக்கிறவர், தன் தொகுதியில் நடக்கிற நிகழ்ச்சிகள்ல மட்டும் தலைகாட்டுதாரு... இதுக்கு இடையில, அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கு கோர்ட்ல இறுதிக்கட்டத்தை எட்டுது... இன்னொரு பக்கம், அமலாக்கத் துறை நெருக்கடியும் இருக்கு வே...

''தன் வாரிசுகளை அரசியலுக்கு கொண்டு வர அவர் எடுத்த முயற்சிகளுக்கு, அவங்க சம்மதிக்கல... இதனால, தன் விசுவாசி ஒருத்தரை தலைமைக்கு அடையாளம் காட்டிட்டு, அரசியலுக்கு முழுக்கு போட போறதா தகவல்கள் பரவுது வே...

''ஆனா, அமைச்சர் தரப்போ, 'எனக்கு உடல்நிலை பாதிப்பு இருக்கிறது உண்மை தான்... ஆனாலும், தலைமை சொல்ற பணிகளை செஞ்சுட்டு தான் இருக்கேன்... எனக்கு நெருங்கியவங்களே, என்னை ஓரம்கட்டிட்டு, முன்னேற துடிக்காவ... அவங்க தான், இந்த மாதிரி தவறான தகவல்களை பரப்புதாவ'ன்னு புலம்புது வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''சொல்லுங்கோ அனிதா... ராதாகிருஷ்ணன் சார்ட்ட பேசிட்டேன்... காரியம் முடிஞ்சிடும்...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us