தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஐ.ஜி., உத்தரவை காற்றில் பறக்க விட்ட பெண் அதிகாரி!

 ஐ.ஜி., உத்தரவை காற்றில் பறக்க விட்ட பெண் அதிகாரி!

 ஐ.ஜி., உத்தரவை காற்றில் பறக்க விட்ட பெண் அதிகாரி!


PUBLISHED ON : மே 15, 2026 12:28 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 15, 2026 12:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பில்டர் காபியை உறிஞ்சியபடியே, “ஓட்டுப்பதிவு அப்ப நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை, நேத்துதான் என் கோவை நண்பர் சொன்னார்... கேளுங்கோ ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

“தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில், ராமநாதபுரம்னு ஒரு ஏரியா இருக்கு... இங்க, ஓட்டுப்பதிவுக்கு முதல் நாள் ராத்திரி, பணம் பட்டுவாடா செஞ்ச தி.மு.க., நிர்வாகியிடம் ஒரு இளைஞர் வந்திருக்கார் ஓய்...

“அப்ப, 'சார், எங்க வீட்டுல ஏழு ஓட்டு இருக்கு... எல்லாம் உங்க கட்சிக்கு தான்'னு சொல்லியிருக்கார்... தி.மு.க., நிர்வாகியும், ஓட்டுக்கு 5,000 ரூபாய் வீதம், 35,000 ரூபாயை அவரிடம் குடுத்துட்டார் ஓய்...

“மறுநாள் ஓட்டு போட போன தி.மு.க., நிர்வாகிக்கு பயங்கர அதிர்ச்சி... ஏன்னா, முதல் நாள் அவரிடம் பணம் வாங்கிய இளைஞர், அங்க, த.வெ.க., ஏஜன்டா உட்கார்ந்திருந்தார் ஓய்...

“உடனே, 'என்ன தம்பி இது'ன்னு கேட்க, 'இதெல்லாம் சும்மாங்ணா... எங்க ஓட்டு உங்களுக்கு தான்'னு சொல்லி சமாளிச்சிருக்கார்... ஓட்டுப்பதிவு முடிஞ்சு ரெண்டு நாள் கழிச்சு, அதே தி.மு.க., நிர்வாகி, ஒரு பேக்கரியில டீ குடிச்சுண்டு இருந்திருக்கார் ஓய்...

“அவரிடம் ஒருத்தர் தயங்கி தயங்கி வந்து, 'எங்க வீட்டுல நாலு ஓட்டு... உங்க கட்சிக்கு தான் போட்டோம்ணா'ன்னு இழுத்திருக்கார்... நிர்வாகி, 'அதுக்கென்ன இப்ப'ன்னு கேட்க, 'இல்ல... உங்களை பார்த்தா பணம் தருவார்னு சிலர் சொன்னா'ன்னு கேட்டிருக்கார் ஓய்... 'டென்ஷன்' ஆன தி.மு.க., நிர்வாகி, அவரை அடிக்கவே போயிட்டார்... அக்கம் பக்கம் இருந்தவா, சமாதானப்படுத்தியிருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.

“வாங்க தங்கராஜ்... குல்பி வியாபாரம் எல்லாம் நல்லா நடக்கா வே...” என, நண்பரிடம் விசாரித்த பெரியசாமி அண்ணாச்சியே, ''ரொம்பவே சுத்தல்ல விடுதாரு வே...” என்றார்.

“யாரை சொல்றீங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.

“ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றிய தலைவியா, 2020 - 2025 வரை இருந்தவர், தி.மு.க.,வை சேர்ந்த புல்லாணி... இந்த காலகட்டத்துல, ஒன்றிய பொது நிதியில் செய்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு, இப்ப வரை, 'பில்' ஒப்புதல் தராம அலைக்கழிக்காரு வே...

“இதுக்கு முன்னாடி இங்க பணியில் இருந்த பி.டி.ஓ.,வுக்கும், இவருக்கும் சரிப்பட்டு வராததால, 'எந்த பைல்கள்லயும் கையெழுத்து போடமாட்டேன்'னு சொல்லுதாரு... புல்லாணியின் பதவிக்காலம் முடிஞ்சிட்டாலும், ஒன்றிய நிர்வாகத்தை இன்னும் தன் கையில வச்சிருக்காரு...

“ஆட்சியே மாறிட்ட சூழல்ல, பழைய பில்களுக்கு இவரிடம் எப்படி கையெழுத்து வாங்குறதுன்னு தெரியாம, ஒன்றிய அதிகாரிகள் திருதிருன்னு முழிக்காவ வே...” என்றார், அண்ணாச்சி.

“ஐ.ஜி., உத்தரவை கண்டுக்கல பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

“தி.மு.க., ஆட்சியில், பத்திரப்பதிவு துறையில், 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 'சஸ்பெண்ட்'ல இருந்தாங்க... இதுல, குற்றச்சாட்டுகள் உறுதியாகாதவங்களுக்கு மறுபடியும் பணி வழங்குற பைல்களுக்கு, அப்போதைய அமைச்சர் மூர்த்தி அனுமதி குடுத்துட்டாரு பா...

“அந்த பைல்கள்ல அதிகாரிகள் கையெழுத்து போட்டு, சம்பந்தப்பட்டவங்களை பணியில சேர்க்கணும்... தேர்தல் விதிகள் முடிவுக்கு வந்துட்டதால, பதிவுத்துறை ஐ.ஜி.,யும் பைல்கள்ல கையெழுத்து போட்டுட்டாரு பா...

“ஆனா, இதுல பெரும்பாலான உத்தரவுகளை ஐ.ஜி.,யின் உதவியாளரா இருக்கும் பெண் அதிகாரி நிறுத்திட்டாங்க... அவங்களிடம் கேட்டா, 'ஆட்சி மாறிட்டதால, புது ஐ.ஜி., வருவார்... அவர் வந்த பிறகு பார்த்துக்கலாம்'னு சொல்றாங் களாம் பா...” என முடித்தார், அன்வர்பாய்.

ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, “சுதா மால்யா மேடம்... சொல்லுங்கோ...” என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் நடையை கட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us