PUBLISHED ON : மே 16, 2026 12:00 AM

வேலுார் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ., கார்த்திகேயன் போட்டியிட்டார். இவரை, த.வெ.க., சார்பில் போட்டியிட்ட வினோத் கண்ணன் என்பவர், 6,777 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
கார்த்திகேயன், தனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு சமீபத்தில் நன்றி தெரிவித்தார். கொணவட்டம் பகுதியில் அவர் பேசுகையில், 'நம்மை தீய சக்தி என்று சொன்ன விஜய், இப்போது தி.மு.க., ஓட்டுகளில் வெற்றி பெற்றவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்.
'மாணவர்கள், குழந்தைகள் மூலம் பெரியவர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளனர். 'கொரோனா' காலத்தில் மக்களுக்கு அந்த நடிகர் என்ன செய்தார்? நான் ஆட்சியில் இருக்கும் போது யாரையாவது மிரட்டி இருக்கிறேனா? பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கொடுத்தேன். ஆனாலும், நான் தோல்வி அடைந்தது பற்றி கவலைப்படவில்லை' என்றார்.
இதை கேட்ட ஒருவர், 'இவரது தலைவர் ஸ்டாலினே தோற்ற பிறகு, இவர் எல்லாம் எம்மாத்திரம்...' என , முணுமுணுத்தபடியே அங்கிருந்து கிளம்பினார்.
