PUBLISHED ON : ஏப் 22, 2026 02:39 AM

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில், மதுரையில் தொழில் துறை வல்லுநர்களுக்கான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது.
இதில் பங்கேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய வர்த்தக துறை அமைச்சர் பீயூஷ் கோயல் பேசுகையில், 'நான் சிறுவனாக இருக்கும் போது இந்த கோவில் நகரான மதுரைக்கு வந்துள்ளேன். எப்பேர்ப்பட்ட மதுரை... ஆனால், இன்று குப்பைகள் சூழ்ந்துள்ளன. தொழில் துறையினர் நிம்மதியாக தொழில் செய்ய முடியவில்லை; ரவுடிகள் ராஜ்யத்தால் வியாபாரிகள், வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது' என்றார்.
பின், 'நீங்கள் நிம்மதியாக தொழில் செய்வதற்கு தி.மு.க., அரசு துணை நிற்கிறதா?' என்று கூட்டத்தினரிடம் கேட்டார். 'இல்லை... இல்லை...' என, கும்பலாக கூறினர்.
தொடர்ந்து பீயூஷ் கோயல் பேசுகையில், 'மதுரைக்கு மேயர் இருக்கிறாரா...' என்று கேட்டார். கூட்டத்தினர், 'மதுரைக்கு நோ மேயர்... நோ மேயர்' என்று சத்தமாக தெரிவித்தனர்.
கூட்டத்தில் இருந்த ஒருவர், 'மதுரையை பத்தி நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்காரே...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.
