PUBLISHED ON : செப் 16, 2025 12:00 AM

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான, பனமரத்துப்பட்டி ஏரியில் தியான மண்டபம், பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன், 50 ஏக்கரில் 'பசுமை வனம்' அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் ராமச்சந்திரன், பனமரத்துப்பட்டி ஏரியில் செடிகளை நடவு செய்து, திட்டத்தை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க., பிரமுகர் ஒருவர், 'இங்கு முனியப்பன் கோவில் இருக்கு; ஒரு நாளைக்கு கிடா வெட்டி எல்லாருக்கும் கறி சோறு போடலாம்' என, அருகில் இருந்த கட்சியினரிடம் கூற, அவர்களும் ஆமோதித்தனர்.
இதை கேட்ட மாநகராட்சி பணியாளர் ஒருவர், 'கட்சிக்காரங்க கறி சோறு போடுறதோட நிறுத்திக்கிட்டா பரவாயில்ல... தியான மண்டபம், பூங்காவை கட்டிட்டு, அதை, 'பார்' ஆக மாத்தாம இருந்தா சரி தான்' என முணுமுணுக்க, சக பணியாளர்கள் சத்தமின்றி சிரித்தனர்.