PUBLISHED ON : மே 25, 2026 01:08 AM

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., கீர்த்தனாவுக்கு, தொழில் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பிரசாரத்தின் போதே, 'பட்டாசு ஆலை விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுப்பேன்' என கூறியிருந்தார்.
அமைச்சரானதும், பட்டாசு ஆலை உரிமையாளர்கள், வியாபாரிகளுடன் சிவகாசியில் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். பட்டாசு உற்பத்தியாளர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்த நிலையில், கீர்த்தனா எதுவும் பேசாமல் கூட்டத்தை முடித்தார்.
உற்பத்தியாளர்கள் சிலர், அமைச்சரை பேசுமாறு கூறினர். அதற்கு அவர், 'உங்களிடம் மிக விரிவாக பேச வேண்டும் என்றுதான் ஆசை. விட்டிருந்தால் ஒரு மணி நேரம் கூட பேசியிருப்பேன். ஒரு சில காரணங்களால், பின்பு பேசுவோம்' என்றபடியே புறப்பட்டார்.
பட்டாசு உற்பத்தியாளர் ஒருவர், 'அட, ஒரு மணி நேரம் எல்லாம் பேச வேண்டாம்... உங்க கோரிக்கைகளை பரிசீலனை பண்றேன்னு கூடவா சொல்ல தெரியாது...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.
