PUBLISHED ON : மே 10, 2026 12:00 AM

எஸ்.ஹரிஹர கிருஷ்ணன், திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்திய தேர்தல் ஜனநாயகம் என்பது வெறும் ஓட்டுச்சாவடி நடைமுறைகளால் மட்டும் ஒழுங்குபடுத்தப்பட்டது அல்ல; சட்டங்களாலும், நீதித்துறை தலையீடுகளாலும் படிப்படியாக வலுப்பெற்று வந்திருக்கிறது.
அதற்கு உதாரணமாக கட்சித் தாவல் தடை சட்டத்தை கூறலாம்!
-தேர்தலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சி மாறுவதை கட்டுப்படுத்தும் இச்சட்டம், வாக்காளர்களின் விருப்பத்தை, தனிநபர் தன் அரசியல் லாபத்துக்காக புறக்கணிக்கும் போக்குக்கு, கடிவாளமிட்டது.
அதேபோன்று, ஆட்சி கலைப்பு அரசியலுக்கு மூக்கணாங்கயிறு போட்டது,
1) 994ல் வெளியான ஜனதா தளம் கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை தொடர்பான வழக்கு!
சட்டசபையில் பெரும்பான்மை இருக் கிறதா என்பதை நிரூபிக்க வேண்டிய இடம் கவர்னர் மாளிகை அல்ல; சட்டசபை மட்டுமே என்பதை உறுதிப்படுத்தி, ஆட்சிக்கலைப்பை அரசியல் ஆயுதமாக பயன்படுத்திய வரலாறுக்கு முற்றுப்புள்ளி வைத்தது, இத்தீர்ப்பு!
அதேபோன்று, -----------------------------------பதவி பிரமாணத்திற்கும், நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கும் இடையே அதிக காலதாமதத்தை அனுமதிப்பது, சட்டசபை உறுப்பினர்களை கவர்ந்திழுக்கும் குதிரை பேரத்திற்கு வாய்ப்பளிக்கும் என்பதால், நம்பிக்கை ஓட்டெடுப்பை விரைவாக நடத்த வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தியது, 2018ல் வெளியான பா.ஜ.,வை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடர்பான வழக்கு!
இப்படி சட்டங்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமையை, மேலும் வலுப்படுத்த தற்போதைய சூழ்நிலையில், இரண்டு முக்கியமான சீர்திருத்தங்கள் அவசியமாகின்றன.
ஒன்று, கூட்டணி தாவலுக்கு தடை!
கட்சித்தாவல் தடை சட்டம், தனி நபருக்கு கட்டுப்பாடு விதிக்கிறது; அதே நேரம், தேர்தலுக்கு பின் ஒரு கட்சி முழுமையாக கூட்டணி மாறுவதற்கு தெளிவான சட்டம் இல்லாதது, அதே குதிரை பேரத்தை வேறொரு வடிவில் நடக்க அனுமதிக்கிறது.
தேர்தலுக்கு முன், ஒரு கட்சியில் கூட்டணி வைத்து மக்களிடம் வாக் குறுதி கொடுத்து வெற்றி பெற்ற பின், அக் கூட்டணியில் இருந்து மொத்தமாக விலகுவது என்பது, ஓட்டு போட்ட மக்களை அவமரியாதை செய்வதற்கு சமம்.
இரண்டாவது, ஆட்சி அமைப்பில் அதிக தொகுதிகள் வென்ற கட்சியின் பங்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
எந்த கட்சிக்கும் தனித்து பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை வென்ற கட்சி, ஆட்சி அமைப்பது கட்டாயமாக வேண்டும்.
------------ஒரு முதிர்ந்த ஜனநாயகம் என்பது நிலையான அமைப்பு அல்ல; தொடர்ந்து சீர் திருத்தங்களை ஏற்றுக்கொள்ளும் உயிரோட்டமான கட்டமைப்பு. எஸ்.ஆர்.பொம்மை முதல் எடியூரப்பா வழக்கு வரை, ஒவ்வொரு தீர்ப்பும் நம் ஜனநாயகத்தை இன்னும் நேர்மையானதாக மாற்றியிருக்கின்றன.
இனி வர வேண்டிய சீர்திருத்தங்களும் அதே நோக்கில் அரசியல் சூழ்ச்சிகளிலிருந்து மக்களின் தீர்ப்பை பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும்! lll
விஜய் எனும் ஒற்றை மனிதனும்... திரண்டெழும் 'கூட்டு' வில்லன்களும்!
எல்.முருகராஜ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக
வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், தான் நடிக்கும் திரைப்படத்தில் ஒரு
வில்லனைத்தான் சமாளிக்க வேண்டி இருந்திருக்கும்; ஆனால், அரசியல் களத்திலோ
அத்தனை பேரும், 'வில்லத்தனம்' காட்ட வரிசை கட்டி நிற்கின்றனர்.
'தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டுமே ஊழலில் ஊறிய கட்சிகள்; இவர்களுக்குள்
அண்டர் கிரவுண்டில் ஓர், 'அன்டர்ஸ்டாண்டிங்' இருக்கிறது' என்று, விஜய்
சொன்னபோது பலர் சிரித்தனர். ஆனால், இன்று புதுச்சேரி ரிசார்ட் காட்சிகள்,
அதை ஊர்ஜிதம் செய்துள்ளன.
மக்களின் ஆதரவோடு ஒரு புதிய கட்சி
அரசியலுக்கு வருவதை, இந்த இரு, 'பரம்பரை' அரசியல்வாதிகளால் ஜீரணிக்கவே
முடியவில்லை. 'ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போமே' என்ற பரந்த மனப்பான்மை
இவர்களிடம் மருந்துக்கும் இல்லை. இதுதான் அதிகாரப் பசி என்பதா?
தேர்தல் பிரசாரம் முழுக்க அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சசிகலாவின்
காலில் விழுந்த புகைப்படத்தையே காட்டிக் கொண்டிருந்தாரே உதயநிதி... அதே
பழனிசாமியுடன் இப்போது கைகோர்ப்பதை மக்கள் எப்படி ஏற்பர்?
'பத்து
தோல்வி பழனிசாமி... இந்தத் தேர்தலோடு மொத்தத் தோல்வி பழனிசாமி' என்று
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கொடுத்த சாபமெல்லாம் இப்போது எங்கே போனது? பதவி
என்று வந்துவிட்டால் சாபமெல்லாம் வரமாகி விடுமோ?
தி.மு.க.,
வேண்டாம் என்று நினைப்பவர்கள் அ.தி.மு.க.,விற்கும், அ.தி.மு.க., வேண்டாம்
என்போர் தி.மு.க.,விற்கும் ஓட்டுப் போட்டனர். அம்மக்களை, 'முட்டாள்கள்'
என்று நினைத்துவிட்டனர் போலும்!
'ஓட்டு போட்டதுடன் உன் வேலை முடிந்தது' என, மக்களை கறிவேப்பிலையை விடக் கேவலமாக நினைக்கின்றனர் இந்தத் தலைவர்கள்.
இதில் உச்சகட்ட காமெடி என்னவென்றால், சென்னையில் வெயில் அதிகமாம்...
அதனால் தான் எம்.எல்.ஏ.,-க்கள் புதுச்சேரிக்கு வந்தனராம்... ஓர்
அ.தி.மு.க., நிர்வாகி நா கூசாமல் இப்படிப் பேட்டி கொடுக்கிறார்.
புதுச்சேரி எப்போது கொடைக்கானலாக மாறியது?
தமிழகம் இன்னும் பழைய,
'கூவத்துார்' கூத்தையே மறக்கவில்லை. அதற்குள், அடுத்த கூவத்துாரை
புதுச்சேரியில் அரங்கேற்றுகின்றனர். நாட்டின் உண்மையான எஜமானர்களாகிய
மக்கள் 'பாடம்' நடத்தியும் இவர்கள் திருந்தவில்லை என்பது தான் வேதனை!
lll
ஜனநாயக விரோதம்! வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, தி.மு.க.,விற்கு
ஓட்டுப் போடவில்லை என்ற காரணத்தால், அக்கட்சி ரவுடிகள் சிலர் குடிநீர்
குழாய்களையும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அப்பகுதியின்
குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த 1,000 லிட்டர் சின்டெக்ஸ்
டேங்குகளையும் உடைத்து சேதப் படுத்தியுள்ளனர்.
தி.மு.க., ஆட்சியில் இருந்த போது தான், இதுபோன்ற அடாவடி உடன்பிறப்புகளின் மீது போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
இப்போதாவது, அராஜகத்தில் ஈடுபட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை
எடுக்க வேண்டும்; குடிநீர் இணைப்பு குழாய்களை சரிசெய்து, மீண்டும் மக்கள்
உபயோகத்திற்கு கொண்டு வரும் செலவையும் இக்குண்டர்களிடமே வசூலிக்க
வேண்டும்.
ஜனநாயக நாட்டில் மக்கள் எவருக்கு வேண்டுமானாலும்
ஓட்டுப் போடலாம்; அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது. குறிப்பிட்ட
கட்சிக்குத் தான் ஓட்டுப் போட வேண்டும் என்று அவர்களை வற்புறுத்துவது
அராஜகம்; ஜனநாயக விரோதம்! lll
