தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ தி.மு.க.,வின் கொள்ளை வெளிச்சத்திற்கு வரட்டும்!

 தி.மு.க.,வின் கொள்ளை வெளிச்சத்திற்கு வரட்டும்!

 தி.மு.க.,வின் கொள்ளை வெளிச்சத்திற்கு வரட்டும்!

4


PUBLISHED ON : ஜூன் 01, 2026 12:35 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 01, 2026 12:35 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லால்குடி வெ.நாராயணன், மாம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில் மின்வாரியத்தில் அறிவிக்கப்பட்ட, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 100-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் விஜயின் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின், இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார், மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார்.

கடந்த ஆட்சியில் மின் பகிர்மானக் கழகம், உற்பத்தி கழகம் ஆகியவற்றில் விடப்பட்ட டெண்டர்கள், அதன் உண்மையான மதிப்பை விட, 30 சதவீதம் வரை கூடுதலாக மதிப்பிடப்பட்டு, கமிஷன் அடிப்பதற்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.

​அந்த டெண்டர்களை ரத்து செய்து, 30 சதவீதம் குறைவான மதிப்பீட்டில் அதாவது, 1,400 கோடி ரூபாய்க்கே புதிய டெண்டர்கள் கோரப்பட உள்ளன. இதன்வாயிலாக, சாமானிய மக்களின் வரிப்பணம், 600 கோடி ரூபாய் வீணாகாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மின் வாரியத்தில் மட்டுமே ஒரு டெண்டரில், 600 கோடி ரூபாய் முறைகேடு என்றால், கடந்த தி.மு.க., ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சி மற்றும் இதர துறைகளில் விடப்பட்ட ஆயிரக்கணக்கான டெண்டர்களில் இன்னும் எவ்வளவு பெரிய கமிஷன் வேலைகள் நடந்திருக்கும்!

'தவறு செய்யவும் மாட்டேன்; செய்யவும் விட மாட்டேன்' என்று முதல்வர் விஜய் சூளுரைத்ததற்கு இணங்க, இந்த மின் வாரிய டெண்டர் ரத்து செய்துள்ளது, ஒரு நல்ல தொடக்கம் என்றே கூற வேண்டும். இதுபோன்ற கமிஷன் வேலைகள் எந்தெந்த துறைகளில், யார் யாரால் செய்யப்பட்டன என்பதை, அரசு முழுமையாகத் தணிக்கை செய்து, அந்த விபரங்களை மக்கள் முன், 'வெள்ளை அறிக்கை'யாக வைக்க வேண்டும்.

அப்போதுதான், கடந்த கால ஆட்சியாளர்களின் பகல் கொள்ளை மக்களுக்கு முழுமையாகத் தெரியும்!

சிறுமைப்படுத்தும் செயல்கள் மாறவில்லை!


எஸ்.செபஸ்டின், சிவகாசியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில், பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எட்டு பேருக்கு இடம் கொடுத்து உள்ளது குறித்து, அனைத்து ஊடகங்களும் பிரதானப்படுத்தி செய்தி வெளியிடுகின்றன.

சமூக வலைதளங்களிலும், 'பார்த்தீர்களா... நாங்கள் தலித்துகளுக்கு எத்தனை அமைச்சர் பதவி கொடுத்துள்ளோம்' என்பது போல், த.வெ.க., வினர் பேசுகின்றனர்.

தலித்துகள் என்ன வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்களா அல்லது சக மனிதர்களுக்கு அப்பாற்பட்டவர்களா?

தேவர், கவுண்டர், வன்னியர் போன்ற ஜாதிகளில் பலர் அமைச்சர்களாக கோலோச்சினர்; அப்போது எல்லாம் இப்படித்தான் தண்டோரா போட்டனரா?

சமீபகாலமாக, ஊடகங்கள் தலித்துகளை வேறுபடுத்தி காண்பிக்கின்றன. இது, அம்மக்களை பெருமைப்படுத்தவா அல்லது பிற சமூக மக்களிடம் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தவா என்று தெரியவில்லை.

இதுபோன்று தான், பள்ளியில் படிக்கும் காலத்தில், 'ஸ்காலர்சிப்' போன்ற அரசின் சலுகைகளை பெற, அனைத்து மாணவர்கள் மத்தியிலும், பட்டியலின மாணவர்களை கையை உயர்த்தவும், எழுந்து நிற்கவும் கூறுவர், ஆசிரியர்கள்.

உடனே வகுப்பில் உள்ள அனைவரும், சம்பந்தப்பட்ட மாணவரை ஒரு பார்வை பார்ப்பர். அது எத்தனை அவமானமாக இருக்கும் என்பது, தலித் மாணவர்களுக்குத் தான் தெரியும்.

'உங்களில் ஒருவன் அல்ல; இவன் தாழ்த்தப்பட்டவன்' என்று கூறுவது போன்றது தான் இச்செயல்.

இதில் எங்கிருக்கிறது சமூகநீதி?

ஒரு சாதாரண உதவியைக் கூட, 'வலது கரம் கொடுப்பது, இடது கரத்திற்கு தெரியக் கூடாது' என்றனர் நம் முன்னோர். காரணம், உதவி செய்வதால் கொடுப்பவனுக்கு தான் உயர்ந்தவன் என்ற எண்ணமும், வாங்குவதால், தான் தாழ்ந்தவன் என்ற எண்ணமும் வந்து விடக் கூடாது என்பதால்!

ஆனாலும், இங்கு பள்ளியிலிருந்து சட்டசபை வரை, 'நீ தாழ்த்தப்பட்டவன்; உங்களை உயர்த்த நாங்கள் என்னவெல்லாம் செய்கிறோம் பாருங்கள்' என்பது போன்று தான், ஆட்சியாளர்களின் செயல்கள் உள்ளன.

அந்த எண்ணத்தின் வெளிப்பாடு தான், கடந்த தி.மு.க., ஆட்சியில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, பொது மேடை என்றும் பாராமல், ஒரு பெண்ணைப் பார்த்து, 'நீ எஸ்.சி., தானேம்மா... எஸ்.சி.,' என்று ஏளமாக பேசியது.

'நாங்கள் தான் உங்களை எல்லாம் படிக்க வைத்தோம், உடை உடுத்த வைத்தோம்' என்றும், 'ஈ.வெ.ராமசாமி இல்லை என்றால், நீங்கள் எல்லாம் கோவணத்துடன் தான் அலைந்திருப்பீர்கள்' என்று பேசவும் காரணம்!

இதுதான் திராவிட கட்சிகளின் சமூகநீதி!

நாடு சுதந்திரம் அடைந்து, 78 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது; ஆனாலும், பட்டியலின மக்களை சிறுமைப்படுத்தும் செயல்கள் மட்டும் மாறவில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது!

காலத்தின் கட்டாயம்!


பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை சேர்ந்த, பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு துாக்கு தண்டனை வழங்கப் பட்டுள்ளது.

குற்றம் நடந்து, 76 நாட்களில் வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரிய விஷயம்.

அதேநேரம், எப்போதாவது இப்படி ஒரு வழக்கில் விரைந்து நீதி வழங்கப்படுவதால், குற்றங்கள் குறையப் போவதும் இல்லை; சட்டம் - ஒழுங்கு மேம்படப் போவதும் இல்லை.

உதாரணமாக, ஊழல் வழக்கில் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு பெரும்பாலும் தண்டனையே கிடைப்பதில்லை. வாய்தா மேல் வாய்தா வாங்கியே பல ஆண்டுகளுக்கு வழக்கை இழுத்தடிக்கின்றனர்; இறுதியில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி, நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்து விடுகிறது.

ஊழல் வழக்கு தொடரப்பட்டு ஓரிரு ஆண்டுகளில் தண்டனை வழங்கினால், அந்நபர் தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் பதவிக்கு வந்து, ஊழல் செய்வது தடுக்கப்படும்.

அவருக்கு கிடைக்கும் தண்டனை மற்றவர்களுக்கும் பாடமாக அமையும். அதன் காரணமாக, ஊழல் குறையும்!

அதை விடுத்து, வழக்கு தொடரப்பட்டு, 20, 30 ஆண்டுகள் விசாரணை நடந்து, அதன்பின் தண்டனை வழங்குவதில் என்ன சிறப்பு இருக்கிறது?

எனவே, அனைத்து வகை குற்றவாளிகளுக்கும் விரைவில் தண்டனை கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிர்கள் செழித்து வளர களை எடுப்பது போல், பொதுமக்கள் பாதுகாப்புடன் வாழ, குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கி, அவர்களை சமூகத்திலிருந்து அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்! lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us