தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது!

உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது!

உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது!


PUBLISHED ON : மே 14, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 14, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபால் மாரிமுத்து, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., உருவாக்கி கட்டிக்காத்த அ.தி.மு.க., ஜெயலலிதாவால் வலிமை பெற்றது. அவரது ஆளுமைக்கு கட்டுப்பட்டு, அவர் காலால் இட்ட பணியை தலையால் செய்தனர், கட்சி தலைவர்களும் தொண்டர்களும்!

அவரோடு முடிந்து விட்டது, அ.தி.மு.க.,வின் சகாப்தம். இப்போது அது மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்.

உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது என்ற உண்மையை மறந்து, தன்னை ஜெயலலிதாவுக்கு இணையாக நினைத்துக் கொண்டு இறு மாப்புடன் செயல்பட்டார், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி.

இதோ... அ.தி.மு.க., வின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் தொடர் தோல்விகளை கண்டு வருகிறார். தி.மு.க.,விற்கு சிம்ம சொப்பனமாக இருந்த கட்சியை, இன்று மூன்றாம் இடத்துக்கு கொண்டு வந்தது தான், பழனிசாமியின் அரசியல் சாணக்கியத்தனம் போலும்!

பதவி வெறியில், அ.தி.மு.க.,வை சிதைத்துவிட்டு, இப்போது, 'சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவையாக அ.தி.மு.க., எழும்' என்று, 'டயலாக்' அடிக்கிறார்.

பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுவதற்கு பழனிசாமி என்ன எம்.ஜி.ஆரா இல்லை ஜெயலலிதாவா?

கவர்னர் மீது பழி போடலாமா?

எஸ்.ஆர்.த்ராவிட், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சட்ட சபை தேர்தலில், தனிப் பெரும்பான்மை பெற்று, மிகப்பெரிய கட்சியாக உருவாக்கி இருக்கிறோம்; ஆகவே, ஆட்சி அமைக்கும் உரிமை கோருகிறோம்' என்று ஒரு கடிதத்தை எழுதி, கவர்னரிடம் கொடுத்திருந்தாலே போதும்; தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், எளிதாக முதல்வராகி இருப்பார்.

ஆக்கப் பொறுத்தவர், ஆறப்பொறுக்காத கதையாக, கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரும்முன், காங்கிரசை கூட்டணியில் சேர்த்து, அவர்களுடைய பெயரை யும் லிஸ்டில் சேர்த்து, 112 என்று கொடுக்கப் போய், 'பெரும்பான்மைக்கு தேவையான, 118 பேர் கொண்ட பட்டியலை கொடுங்கள்' என்று கவர்னர் கூறி விடவே, உதிரி கட்சிகளின் கதவை தட்டி, அவர்களிடம் சமரசம் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டார், விஜய்.

தன் வாய் அசைவிற்கு அவர்களை பாட வைப்பதை விட்டு தற்போது, அவர்களின் வாயசைவிற்கு நடனமாட வேண்டிய நிலையில் விஜய் இருக்கிறார்.

இன்றைய நிலையில், எவரும் உடனடி தேர்தலை விரும்ப மாட்டார்கள்; பல பேர் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் போகலாம் அல்லது நடுநிலை வகித்து இருப்பர். அதன்பின் ஆறு மாதம் போதாதா... விஜய் தன் ஆட்சியை நிலைப் படுத்திக்கொள்ள?

தவறை, த.வெ.க.,வினர் தங்கள் பக்கத்தில் வைத்து கொண்டு, கவர்னர் மற்றும் பா.ஜ., மீது பழி போடலாமா?

 கி.வீரமணியிடம் ஜாக்கிரதை முதல்வரே!


அ.ராசைய்யா, தஞ்சாவூரில் இருந்து எழுதுகிறார்: முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்... தேர்தல் முடிந்த பிறகு அனைத்து மத கோவில்களுக்கும் சென்று வந்து, உங்களை பற்றி ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தினீர்கள். அதேபோல், பதவியேற்பு உறுதிமொழியையும், 'ஆண்டவர் பெயரால்' எடுத்துக்கொண்டது, இறைவனை நம்பும் மக்களிடம் பெரும் மதிப்பை பெற்றிருக்கிறீர்கள். அதே நேரத்தில், பதவியேற்ற மாலையில் தி.க., தலைவர் வீரமணியை பெரியார் திடலில் சந்தித்ததால் என்னவோ, அடுத்த நாள் சட்டசபையில், 'உளமார...' என்று சொல்லி எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றீர்கள். வீரமணியின் பாதிப்பு அதில் நன்கு தெரிந்தது.

தி.மு.க., தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும், பல மேடைகளில் வீரமணியை அருகில் வைத்திருந்தது ஒரு காரணம். ஹிந்து கடவுள்களை கேவலமாக பேசும் வீரமணி அருகில் இருந்ததால், பல ஹிந்துக்கள் தி.மு.க.,வுக்கு ஓட்டு போடவில்லை.

கருணாநிதி, வீரமணியை, ஈ.வெ. ரா., பிறந்தநாள் அன்றோ, நினைவு நாள் அன்றோ அல்லது அவரது பெயரில் விழா நடந்தால் மட்டுமே ஊறுகாய் போல் உடன் சேர்த்து தொட்டுக் கொள்வார்.

ஆனால் அவரது மகன் ஸ்டாலின், 'அந்த ஊறுகாயை' சாதத்தில் பிசைந்து சாப்பிட்ட காரணத்தால், ஹிந்துக்களின் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டார்.

கடந்த, 1991ல், 164 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு, 1994 ஆகஸ்ட்டில் பெரியார் திடலில், 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற விருதை கொடுத்தார் வீரமணி.

இவரது நட்பின் பாதிப்பால், 1996ல் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., 4 இடங்களில் தான் வெற்றி பெற்றது என்பதை, விஜய் நினைவில் கொள்ள வேண்டும். 'கூடா நட்பு கேடாக முடியும்' என்பதைப் போல தான், வீரமணி உடனான நட்பும்.

எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள், முதல்வர் விஜய்!

ஆணவமாக பேசலாமா?


ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியலில், இதுவரை இல்லாத வகையில் ஓர் அசாதாரண சூழ்நிலை நிலவி வந்த நிலையில், ஒருவழியாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், முதல்வராகப் பதவியேற்று உள்ளார்.

அதேநேரம், இரண்டு எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், 'இது திருமா காலம்; அவர் துணை முதல்வராக வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம்; மேலும் உயர்வோம்' என்று கொக்கரிக்கின்றனர்.

தனித்து நின்று இரண்டு எம்.எல்.ஏ.,க்களை உருவாக்கியிருந்தால், வி.சி.க.,வைப் பாராட்டியிருக்கலாம்; தி.மு.க.,வின் தயவில் வெற்றி பெற்றவர்களுக்கு இத்தனை வாய் சவடால் தேவையா?

கடந்த 2016 தேர்தலில், 'மக்கள் நல கூட்டணி' அமைத்து போட்டியிட்டபோது, ஜெயலலிதா அலையில் காணாமல் போன வி.சி.க.,வால், ஒரு தொகுதியிலாவது, 'டிபாசிட்' வாங்க முடிந்ததா?

எந்த அரசியல் பின் புலமும் இல்லாமல், எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று, தன் தனிப்பட்ட செல்வாக்கால், 108 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் விஜய், 22 கூட்டணி கட்சிகளின் தயவால், வெறும் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் திருமாவிடம் கையேந்தி நிற்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது என்பதற்காக, வி.சி.க.,வினர் ஆணவமாக பேசலாமா?

இதைவிட கொடுமை, தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி அமைக்க பேச்சு நடந்ததாகவும், திருமாவளவனை முதல்வராக அமர்த்த பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்காமல், அதிக தொகுதிகளில் வென்ற விஜய் கட்சி, ஆட்சியில் அமர்ந்து விட்டது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us