தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ மீண்டும் மீண்டும் இதயம் கேட்குமே இமயமலை: ஐந்து டாக்டர்களின் ஆகாய, அதிசய பயணம்

 மீண்டும் மீண்டும் இதயம் கேட்குமே இமயமலை: ஐந்து டாக்டர்களின் ஆகாய, அதிசய பயணம்

 மீண்டும் மீண்டும் இதயம் கேட்குமே இமயமலை: ஐந்து டாக்டர்களின் ஆகாய, அதிசய பயணம்


UPDATED : மே 24, 2026 09:12 AM

ADDED : மே 24, 2026 03:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2026 09:12 AM ADDED : மே 24, 2026 03:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருவியின் வீழ்ச்சி, அண்ணாந்து பார்க்கும் அழகிய மலைத்தொடர், கால்களை நனைத்துச்செல்லும் நதி... இவையெல்லாம் காலத்திற்கும் மனதை விட்டு அகலாத, மறக்க முடியாத அதிசயங்கள். எத்தனை முறை பயணம் செய்தாலும் புதுப்புது அனுபவம் கிடைக்கும். இரண்டாண்டுகளாக இமயமலைக்கு தனது டாக்டர் நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டு வரும் மதுரையைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு நிபுணர் டாக்டர் பழனியப்பன், இந்த முறை சென்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

நாங்கள் 2025ல் இமய மலையின் 3500 மீட்டர் உயர மலையேற்றத்தை மேற்கொண்டோம். தற்போது ஏப்ரல் 28 முதல் மே 7 வரை 4130 மீட்டர் உயரத்தில் உள்ள அன்னபூர்ணா பேஸ் கேம்ப் செல்ல முடிவெடுத்தோம். முதலில் மச்ச புசாரே (பிஷ் டெயில்) என்ற பேஸ் கேம்ப் சென்று, அங்கிருந்து 600 மீட்டர் உயரம் கடந்தால் அன்னபூர்ணா பேஸ் கேம்ப் செல்லலாம். அன்னபூர்ணா, மச்ச புசாரே கேம்ப் இரண்டு சிகரங்களும் உலகில் 10வது உயரமான சிகரங்கள்.

Image 1580046


என்னுடன் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் படித்த நண்பர்களான டாக்டர்கள் விஜய் போஸ் (மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை), செல்வி (மார்பக அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை), பூங்கோதை (இருதய சிகிச்சை நிபுணர் (அமெரிக்கா), ஷோபனா (மகப்பேறு நிபுணர், சென்னை) ஆகியோர் இமயமலை பயணத்தில் பங்கேற்றனர். எங்கள் உடலை சீராக வைத்துக்கொள்ள கடுமையான நடைபயிற்சி, நீச்சல், ஸ்ட்ரெச்சிங் பயிற்சி, உணவு கட்டுப்பாடு அனைத்தையும் முதலிலேயே கடைபிடித்தோம்.

டில்லி வழியாக காத்மண்டு சென்றடைந்தோம். காத்மண்டுவிலிருந்து விமானம் மூலம் பொக்காரோ சென்றோம். பொக்காரோவிலிருந்து ஜீப் மூலம் ஜுனுவிற்கு சென்றடைந்தோம். அங்கே செல்லும் பாதை நெடுக, பெருமழை கொட்டியது. வழியில் எண்ணற்ற அருவிகளும் இருந்ததால் எங்களின் ஆர்வம் அதிகரித்தது.

மலையேற்றம் ஆரம்பம்


ஜூனுவிலிருந்து மலையேற்ற பயணமாக முதல் பாதையை நீண்ட தொங்கு பாலத்தில் ஆரம்பித்தோம். பாலத்திற்கு கீழே பெரிய ஆழமான பள்ளத்தாக்கு... மெதுவாகவும், கவனமாகவும் கொட்டும் மழையோடு இயற்கையை ரசித்தவாறே கடந்தோம். அன்று மாலையில் தங்கும் விடுதியை அடைந்து சில வெந்நீர் ஊற்றுகளை காணச் சென்றோம். எதிர்பார்க்காத அளவிற்கு ஒன்றரை மணிநேரம் செங்குத்தாக நடக்க வேண்டியிருந்தது. அந்த வெந்நீர் ஊற்றை காண்பதே அற்புதமாக இருந்தது.

மறுநாள் காலையில் ஜூனுவிலிருந்து பிரட், ஆம்லெட், தேன் கலந்த இஞ்சி டீ சாப்பிட்டு லோயர் சினுவா நோக்கி புறப்பட்டோம். இது 2860 அடி உயரம் கொண்டது. ஒவ்வொரு நாளும் மதிய உணவாக தால்பாத், பருப்பு, கீரை, முட்டை சாப்பிட்டோம்.

மலையேற்றத்தின் போது முதுகில் உள்ள பையில் ரெயின்கோட், 3 லிட்டர் தண்ணீர் பாட்டில், அவசிய மருந்துகள், உல்லன் சாக்ஸ், கிளவுஸ் 2 செட், கூலிங் கிளாஸ், குல்லா, தொப்பியை சுமந்து செல்ல வேண்டும். அங்கே வானிலை மாறிக்கொண்டே இருக்கும். காலையில் சூரிய ஒளியுடன் துவங்கிய நாள், சற்று தூரம் ஏறியவுடன் மழை நாளாக மாறியது. அதற்கேற்ப உடைகளை மாற்றிக்கொண்டு நடந்தோம். இந்த ஏற்றம் 2350 மீட்டர் உயரம் கொண்டது.

Image 1580047


சட்டென்று மாறுது வானிலை



நிமிடத்திற்கு நிமிடம் மற்றும் ஏற்றத்திற்கு ஏற்றம் வெப்ப சூழ்நிலை மாறிக் கொண்டே இருந்ததுடன், சிகரம் பாறைகள் நிறைந்ததாக இருந்ததால் முதுகில் சுமையுடன் நடைபயணம் சவாலாக இருந்தது. சில நேரங்களில் சோர்வாக இருந்தாலும் மலையேறும்போது அங்கு காண்கின்ற இயற்கை அழகின் உச்சமானது உற்சாகம் தருவதாக அமைந்தது.

பறவைகள் சத்தம், தண்ணீர் ஓடும் சத்தம், பல அருவிகள் நம்முடனே பயணித்து வருவது போன்ற பரவச நிலை, அருவியின் சாரல் மனதிற்கு ஆனந்தத்தை அள்ளித்தரும். அன்று மாலை லோவர் சினுவா வந்தோம். சில்லிடும் குளிர்ந்த நீரில் குளித்த போது, உடல் நரம்புகளை சீண்டி ஆட்டம் காட்டியது.

இந்த சூழலானது எளிய வாழ்க்கை முறை பாடங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. மறுநாள் காலை 7:30 மணிக்கு சினுவாவிலிருந்து புறப்பட்டு 3000 மீட்டர் உயரத்தில் உள்ள ஹிமாலயா ஓட்டலை அடைவதற்கு 12 மணி நேரம் தேவைப்பட்டது.

பனிப்போர்வையுடன் அழகு




அங்குள்ள இயற்கை அழகின் பிரமிப்புடன் அந்த அடிவாரத்தில் இருந்து மேலே அண்ணாந்து பார்க்கும்போது அன்னபூர்ணா 3 மற்றும் மச்ச புசாரே சிகரங்களின் பனிப்போர்வை மூடிய எழில் கொஞ்சும் அழகை பார்க்க முடிந்தது. இதை பார்க்க சுகமாக இருந்தாலும், அந்த இடத்தை அடைவது சுலபமாக இல்லை.

இதுவரை இருந்த இயற்கை சூழலிருந்து இந்த மலையேற்றம் முற்றிலும் மாறுபட்டது. இங்கு பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் சில நேரங்களில் மலையேற்றமானது கடினமான பாறைகளாகவே இருந்தது. பாறை மிகவும் வழுக்கும் தன்மையாக இருந்ததால் ஒவ்வொரு அடியாக கவனமாக நடந்து சென்றோம்.

நான் மெதுவாக மலைஏறிக் கொண்டிருந்த போது எழில் கொஞ்சும் அருவி கொட்டிக் கொண்டிருந்தது. சற்று இளைப்பாறி அதை ரசித்துக் கொண்டிருந்த போது, அந்த அருவி கீழே ஒரு பாறையில் விழுவது போன்று இருந்தது. சற்றுகூர்ந்து உன்னிப்பாக கவனித்தால், அது ஒரு விநாயகர் வடிவம் கொண்ட பாறை.நண்பர்களுக்கு காட்டிய போது மெய்சிலிர்த்தனர்.

கடினமும், சவாலும் நிறைந்த இந்த பயணத்தில் இக்காட்சியானது நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதை மெய்யாக உணர்ந்தோம். அந்த அருவி விநாயகரை தரிசித்த பின்னர் நம்பிக்கையுடன் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

மழை பெய்து கொண்டே இருந்தது. அப்படியே மாலையில் ஹிமாலயா ஓட்டல் வந்த போது, எங்களின் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்தது. உறங்குவதற்கு மட்டுமே அறைக்கு சென்றோம். அங்கிருந்து மேலும் மலையேறும் இடத்தின் தன்மை முற்றிலும் மாறியது. பச்சை மரம், செடிகள் அனைத்தும் பனியால் வளர்வது இல்லை. பாறைகள் மட்டுமே உள்ளது.

அனைத்து இடங்களும் பனி போர்வையால் போர்த்தியது போலவே இருந்தது. பனிக்கட்டிகள் கரைந்து ஆறாக ஓடுகின்றன. இந்த பனிக்கட்டிகள் ஓட்டமானது அவலான்ச்சி எனப்படுகிறது. ஆபத்து நிறைந்த இடத்தை கவனமாக கடந்தோம்.

நாங்கள் மச்சுபூசாரே பேஸ் கேம்ப் வந்த போது குளிர் கடுமையாக இருந்தது. வானிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் ஆக இருந்ததால் அனைவரும் அவரவர் அறைக்கு செல்லவில்லை. பொதுஅறையில் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே இருந்ததை உறுதுணையாக உணர்ந்தோம்.

Image 1580048

இதயம் துடித்ததே




எங்களது அறைக்கு சென்று 2 தெர்மல் பேண்ட், சர்ட் அணிந்தபின் 1 நார்மல் பேண்ட், சர்ட், குல்லா, உல்லன் சாக்ஸ், கிளவுஸ், தங்குவதற்கு ஏதுவாக மைனஸ் 100 டிகிரி வரை குளிர் தாங்கும் அந்த ஸ்லீப் பைக்குள் உறங்கினோம். இந்த மாதிரி உயரமான சிகரங்கள் செல்லும் போது நிறைய உடல் உபாதைகள் உண்டாகும்.

எனவே இதை தடுப்பதற்கு நாங்கள் 6 நாட்களும் அசிட்டாசோலமைடு 250 மி.கி என்ற மாத்திரை உட்கொண்டோம். இதனால் உடலில் அதிகளவில் நீர் பிரியும். எனவே இரவு நேரத்தில் இருமுறையாவது நீரை வெளியேற்ற வேண்டும். அந்த சூழ்நிலையில் செய்வது அசாதாரண விஷயம் தான்.

இரவில் இயற்கை உபாதையை வெளியேற்ற ஒவ்வொரு முறையும் அணிந்திருக்கும் ஆடை தொகுப்பை கழற்றி, இயல்புக்கு மாறி டாய்லெட்டை பயன்படுத்த வேண்டும். ஐஸ்கட்டியாக உறைந்த தண்ணீரை பயன் படுத்திய போது சவாலாக இருந்ததால், அந்த ஓர் இரவை கடப்பது கடினமானதாக இருந்தது. 3000 மீட்டர் உயரம் வரை ஏறுவது கூட சிரமமாக இல்லை.

சிகரத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே செல்லும். பொதுவாக ஆக்சிஜன் அளவு 98 சதவீதம் இருந்தால், உயரத்திற்குச் செல்லும் போது 85 சதவீதம் ஆக இருக்கும்.

இதனால் சிறிது நேரம் நடந்தாலே மூச்சு விட சிரமப் படுவோம். இதயத்துடிப்பு அதிகரிப்பதை டாக்டர்களாகிய எங்களால் உணர முடிந்தது. மேலும், 600 மீட்டர் நடந்து இறுதியாக மச்சபுசாரேவிலிருந்து அன்னபூர்ணா பேஸ் கேம்ப் செல்ல தயாரானோம்.

குளிருடன் பனிப் பொழிவு அதிகமாக இருந்ததால் பாதையை கண்ணால் பார்க்க முடியாத படி பனிமூட்டமாக இருந்தது. மதியம் 1:00 மணியளவில் அங்கு சென்று அடைந்தோம். அன்னபூர்ணா பேஸ் கேம்ப் 4130 மீட்டர் உயரம், அந்த சிகரத்தின் உச்சியில் இரவை கழித்தது ஆனந்தமாக இருந்தது.

மறுநாள் அதிகாலையில் கண்விழித்தபோது, 360 டிகிரி கோணத்தில் மலையைச் சுற்றிலும் பார்க்கும் போது, சூரிய ஒளியில் பொன்நிறத்துடன் தங்கம் ஜொலிப்பது போல அன்னபூர்ணா 1, அன்னபூர்ணா தெற்கு, ஹிஞ்சுலி சிகரம், மச்ச புசாரே, கங்கபூர்ண, அன்னபூர்ணா -3, அன்னபூர்ணா - 4 என ஏழு மலைகள் கண்களுக்கு விருந்தளித்தன.

இதில் மச்ச புசாரே மலையை அடைந்தவர்கள் பெரும்பாலும் அங்கிருந்து மீண்டும் திரும்புவதில்லை. ஆகவே அந்த மலையைக் காண்பதை தெய்வத்திற்கு இணையாக கருதி உடலாலும் மனதாலும் சிலிர்க்கின்றனர்.

ஆறு நாட்கள் சிரமப்பட்டு சிகரத்தில் மலையேறிய பயண அனுபவத்தில் கிடைத்த மனநிறைவுடன், 30 நிமிடங்களில் ஹெலிகாப்டரில் கீழே இறங்கி பொக்காரோ வந்தடைந்தோம்.

அடுத்தாண்டு 5500 மீட்டர் உயர எவரெஸ்ட் பேஸ் கேம்ப் ஏற வேண்டும் என்ற மன உறுதியோடு அவரவர் ஊர் திரும்பினோம்.

இவ்வாறு டாக்டர் பழனியப்பன் இமயமலை பயணத்தை விவரித்தார்.

இவரிடம் பேச 94425 24147.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us