படித்தால் உங்கள் மனதுக்குள் பட்டாம் பூச்சிகள் பறக்கும்!
படித்தால் உங்கள் மனதுக்குள் பட்டாம் பூச்சிகள் பறக்கும்!
UPDATED : மே 31, 2026 08:45 AM
ADDED : மே 30, 2026 03:10 PM

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் சினிமா பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய 'பட்டாம் பூச்சி விற்பவன்' என்ற கவிதை நுால் குறித்து, கவிஞர் நா.கி.பிரசாத் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
ஒரு இளைஞர் பிரபல வாரப் பத்திரிகை ஒன்றுக்கு நிருபர் வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்தார். அவரை நேர்காணல் செய்த பத்திரிகை ஆசிரியர், அவருக்கு ஒரு நிபந்தனை விதித்தார்.
'நீங்கள் இயக்குனர் ஷங்கரிடம் ஒரு பேட்டி எடுத்து வரவேண்டும். ஆனால் எங்களது பத்திரிகையின் பெயரை சொல்லாமல் செய்து முடித்தால் உடனே வேலையில் சேர்ந்து கொள்ளலாம்' என்றார்.
இதை கேட்ட அந்த இளைஞர் குழம்பினார். எதற்கும் முயற்சி செய்து பார்க்கலாம் என, முடிவு செய்த அந்த இளைஞர், மறுநாள் இயக்குனர் ஷங்கர் வீட்டுக்கு சென்றார்.
செக்யூரிட்டி உள்ளே விடவில்லை. இறுதியாக 'இந்த புத்தகத்தை மட்டும் அவரிடம் கொடுங்கள்' எனக்கூறி ஒரு புத்தகத்தை கொடுத்தார்.
வாட்ச்மேன் அந்தப் புத்தகத்தை ஷங்கரிடம் கொண்டு போய் கொடுத்தார். புத்தகத்தை வாங்கி தலைப்பை பார்த்த இயக்குனர் ஷங்கர், உற்சாகத்துடன் அந்த இளைஞரை வரவேற்க வாசலுக்கே வந்து விட்டார். பிறகு அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று மகிழ்ச்சியுடன் பேட்டி கொடுத்து அனுப்பினார்.
மறுநாள் அந்த இளைஞருக்கு அந்த பத்திரிகையில் வேலை கிடைத்தது!
அந்த இளைஞர்தான் சினிமா பாடலாசியர் நா.முத்துக்குமார். அந்த புத்தகம்தான் 'பட்டாம்பூச்சிகள் விற்பவன்' என்ற இந்த புத்தகம்.
இன்றைக்கும் புதிதாக கவிதை எழுத வரும் இளைஞர்களுக்கு நா.முத்துக்குமாரின் 'பட்டாம்பூச்சிகள் விற்பவன்' கவிதை நுால் ஓர் உந்து சக்தியாக இருக்கிறது.
எழுத்தாளர் சுஜாதா இந்த புத்தகத்தில் உள்ள 'துார்' என்ற கவிதையை பாராட்டி எழுதியதால், முத்துக்குமாருக்கு சினிமாவில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த கவிதை இதுதான்...
'இன்று வரை அம்மா: கதவுக்குப் பின்னிருந்துதான்: அப்பாவோடு பேசுகிறாள்: கடைசி வரை அப்பாவும்:மறந்தே போனார்...: மனசுக்குள் துார் எடுக்க!':
தனது பிரச்னைகளை தாண்டி, சக உயிர்களின் உணர்வுகளை பாரதியை போல், 'காக்கை குருவி எங்கள் சாதி' என்று சிந்திக்கும் கவிஞர்களே காலம் கடந்து நிற்கின்றனர்.
'பிரிதலும் பிரிதல் நிமித்தமும்' என்ற கவிதையில் வாடகை வீடு மாறும் போது உள்ள தனது கஷ்டத்தோடு, ஒரு நாயின் துயரத்தையும் கவிதையாக்கி இருக்கிறார்.
'சோற்றுக்கு வரும் நாயிடம்: யார் போய் சொல்வது: வீடு மாற்றுவதை':
- இந்த கவிதை வாடகைக்கு குடியிருப்பவனின் மன வேதனையையும், சக உயிர்களின் மீதான அன்பையும் வெளிப்படுத்துகிறது. இந்த கவிதை நுாலில் உள்ள பல கவிதைகள், வாசகர்களின் மனதுக்கு நெருக்கமாய் இருக்கிறது. படிக்கும் மனதுக்குள் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன.
