தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ உலக கோப்பை கனவை நெஞ்சில் சுமந்து...

 உலக கோப்பை கனவை நெஞ்சில் சுமந்து...

 உலக கோப்பை கனவை நெஞ்சில் சுமந்து...

1


UPDATED : ஜூன் 14, 2026 03:08 AM

ADDED : ஜூன் 14, 2026 03:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2026 03:08 AM ADDED : ஜூன் 14, 2026 03:06 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் ஜூவாலை உலகமெங்கும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. மெஸ்ஸி, ரொனால்டோ என உலக ஜாம்பவான்களின் ஆட்டத்தைக் கண்டு ஒட்டுமொத்த தேசமும் சிலிர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், 'ஒருநாள் இந்த உலகக் கோப்பை மேடையில் நம் இந்திய தேசியக் கொடியையும் பறக்கவிடுவோம்' என்ற அசுரக் கனவோடு களமிறங்கியிருக்கிறார்கள் திருப்பூரைச் சேர்ந்த கால்பந்து இளம் நட்சத்திரங்கள். தேசத்தின்

கால்பந்து வரைபடத்தில் டாலர் சிட்டியின் முத்திரையைப் பதிக்கத் துடிக்கும் இந்தப் புயல்களின் நிஜக்கதை இதோ...

'சக்கரம்' கட்டிய கால்கள் தியானேஷ் நம்பிக்கை


திருப்பூர், 15 வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையத்தைச் சேர்ந்த தியானேஷ், லிட்டில் கிங்டம் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். இன்று மாவட்டத்தின் சிறந்த கால்பந்து வீரராக உருவெடுத்து, இந்தியாவின் 'டாப் -10' அணிகளில் ஒன்றான பெங்களூரு பி.எப்.சி. அணிக்குத் தேர்வாகி சாதனை படைத்துள்ளார். இம்மாத இறுதியில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடக்கவுள்ள உயர்தரப் பயிற்சியில் பங்கேற்கத் தயாராகி வருகிறார்.

இதற்கான பின்னணி

தியானேஷின் தந்தைஅனிஷ் நெகிழ்ச்சியோடுபகிர்ந்துகொள்கிறார்:''யு.கே.ஜி. படிக்கும்போதே அவனுக்குக் கால்பந்து மீது ஒரு ஈர்ப்பு வந்தது. பந்தைத் தட்டித் தட்டி விளையாடத் தொடங்கினான். நான்கு ஆண்டுகள் இடைவிடாத கடுமையான பயிற்சிக்குப் பிறகு, பஞ்சாபின் புகழ்பெற்ற மினர்வா கிளப்பில் (தேசிய அளவிலான கால்பந்து பயிற்சி அமைப்பு) ஒரு மாதம் தங்கிப் பயிற்சி பெறும் அரிய வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. ஆனால், அங்கிருந்த கடுமையான சீதோஷ்ண நிலை அவனது உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. பாதியிலேயே திரும்ப வேண்டியதாயிற்று.அந்த ஏமாற்றம் அவனை முடக்கவில்லை; மாறாக அவனது ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கியது. எந்த ஊரில் போட்டி நடந்தாலும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பந்தின் பின்னால் ஓடிவிடுவோம். அவனது தொடர் பயிற்சிதான் இன்று இந்த உயரத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.'

தந்தையின் வார்த்தைகளுக்கு வலுசேர்க்கும் விதமாகப் பேசுகிறார் தியானேஷ். அவரது கண்களில் ஒரு முதிர்ந்த வீரரின் தீர்க்கம் தெரிகிறது:

'இந்திய அணியின் முன்னணி வீரர்களை உருவாக்கிய பெங்களூரு பி.எப்.சி. அணியின் பயிற்சிக்குத் தேர்வாகி இருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. 2034ம் ஆண்டு இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடக்கும்; அதுவரை நான் ஓயமாட்டேன், தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பேன்' என்கிறார் உறுதியுடன்.

சவால்களை உதைத்தமிர்துளாவின் கால்கள்


திருப்பூர் மாவட்டம், பெதப்பம்பட்டி என்.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மிர்துளா, அசாம், மஹாராஷ்டிரா, ஜார்கண்ட் எனப் பல மாநிலங்களில் நடந்த கால்பந்து போட்டிகளில் தமிழக அணி சார்பில் களம் கண்டு முத்திரை பதித்து வருகிறார். இவரது அக்கா பிளஸ் 2 மாணவியான ஸ்ருதியும் ஒரு சிறந்த கால்பந்து வீராங்கனைதான் என்பது கூடுதல் சிறப்பு.

தங்கள் வெற்றிக் கதையைப் பகிர்ந்துகொள்கிறார் மிர்துளா:

'நான் ஐந்தாம் வகுப்பிலும், அக்கா ஆறாம் வகுப்பிலும் இருந்தபோது இந்த விளையாட்டைத் தொடங்கினோம். அக்கா விளையாடுவதைப் பார்த்துப் பார்த்துதான் நான் கால்பந்தின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். உடுமலை அருகேயுள்ள பொன்னேரி, அய்யம்பாளையம் புதூர் என்ற ஒரு சிறிய கிராமம்தான் எங்களுடைய ஊர். அப்பா, அம்மா விவசாயக் கூலிகள். குடும்பச் சூழ்நிலை நெருக்கடியாக இருந்தாலும், எங்களை விளையாட அனுப்புவதில் அவர்கள் ஒருபோதும் தயங்கியதில்லை.

நாங்கள் தமிழக அணிக்கு மூன்று முறை தேர்வாகக் காரணம் எங்கள் பள்ளியின் உடற்கல்வி இயக்குனரும், பயிற்சியாளருமான கணேசன்தான். அவ்வளவு துடிப்புடன், உத்வேகத்துடன் எங்களுக்குப் பயிற்சி அளிப்பார். தஞ்சாவூரில், இந்தியப் பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடந்த மாநில அளவிலான தகுதிப் போட்டியில் பங்கேற்றது என் வாழ்நாளின் மறக்க முடியாத அனுபவம். முதல்வர் கோப்பை கால்பந்து போட்டி எங்களுக்கு மிகச் சிறந்த பயிற்சிக் களமாக அமைந்தது. எந்த விளையாட்டாக இருந்தாலும், அதில் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்தால்தான் எதிர்காலம் இருக்கும்.'

இவர்களின் கால்களில் உதைபடும் பந்து, நிச்சயம் ஒருநாள் உலகக் கோப்பை மேடையைத் தொடும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us