PUBLISHED ON : மே 12, 2026 05:29 AM

- ராஜ்தீப் சர்தேசாய்,
மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்
தமிழக அரசியலுக்கு எப்போதும் ஒரு சினிமா தன்மை உண்டு. அண்ணாதுரை முதல் எம்.ஜி.ஆர்., வரை, ஜெயலலிதா முதல் கருணாநிதி வரை, இங்கு சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல என்பதை தமிழகம் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. உணர்ச்சி, அடையாளம் மற்றும் அரசியல் அணிதிரட்டல் ஆகிய மூன்றும் இங்கு ஒன்றாக இணைந்துள்ளன.
இருப்பினும், தற்போது தமிழகத்தில் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் எழுச்சி, தவிர்க்க முடியாத ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் வருகையால் பயத்திலும் கலக்கத்திலும் இருப்பவர்கள் யார் என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது. உண்மையிலேயே விஜயை கண்டு அஞ்சுவது யார்?
கலக்கம்
கடந்த அரை நுாற்றாண்டுகளாக தமிழக அரசியலை வரையறுத்து வந்த வசதியான இருமுனை ஆதிக்கம், இனி உத்தரவாதம் அளிக்காது என்பதை திடீரென உணர்ந்த தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வின் ஆளுமைமிக்க அதிகார வர்க்கமா? அல்லது விஜய் - காங்கிரஸ் கூட்டணி தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தென் மாநில அரசியல் எதிர்சக்தியை உருவாக்கிவிடும் என பா.ஜ., கவலைப்படுகிறதா?
அல்லது வாரிசு அரசியலை ஏற்கனவே ஏற்றுக்கொண்ட இளைஞர்கள், விஜயை வெறும் நடிகராக பார்க்காமல் ஒரு கலாசார பிம்பமாக பார்ப்பதை உணர்ந்த உதயநிதி போன்ற அடுத்த தலைமுறை வாரிசுகள் அஞ்சுகின்றனரா? ஒன்று மட்டும் உறுதி, அது விஜயை சுற்றியுள்ள இந்த கலக்கம் உண்மையானது.
அவரை வெறும் திரை நட்சத்திரம் என நிராகரிக்க நடக்கும் தொடர் முயற்சிகளிலும், அவரது ஒவ்வொரு அறிக்கையும் தீவிரமாக அலசி ஆராயப்படுவதிலும், அவரது அரசியல் வருகையின் போது நிலவிய மர்மமான நிறுவன தயக்கங்களிலும் இதை நீங்கள் உணர முடியும்.
இந்த விஷயத்தில் தற்போது தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக உள்ள ராஜேந்திர அர்லேக்கரின் பங்கை எடுத்துக் கொள்ளுங்கள். முறையாக அழைக்கப்படுவதற்கு முன் சென்ற விஜயிடம், அவர் மீண்டும் மீண்டும் ஆதரவு கடிதங்களை சமர்ப்பிக்குமாறு கேட்ட விதம், ஒரு முக்கியமான அரசியலமைப்பு கேள்வியை எழுப்புகிறது. சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கப்படாமல், மக்கள் பவனில் நிரூபிக்கப்பட வேண்டும் என்பது எப்போது தீர்மானிக்கப்பட்டது?
நிச்சயமற்ற நிலை ஏற்படும்போது, பெரும்பான்மை குறித்த சோதனை சட்டசபையில் தான் நடைபெற வேண்டும் என்றும், கவர்னர்கள் நடுநிலை அரசியலமைப்பு அதிகாரிகளாக செயல்பட வேண்டுமே தவிர, அரசியல் 'கேட்கீப்பர்'களாக இருக்கக்கூடாது என்றும் நம் நாட்டின் பார்லிமென்ட் மரபுகள் தெளிவுபடுத்துகின்றன.
இதனால் தான், விஜய் அரசியலுக்கு வருவதில் நிலவிய தயக்கம் மிகப்பெரிய அரசியல் அர்த்தத்தை ஏற்படுத்தியது. இது, வெறும் அரசியல் சார்ந்த நடைமுறை எச்சரிக்கையா? அல்லது கவனமாக பராமரிக்கப்பட்டு வரும் அரசியல் சமன்பாடுகளை ஒரு வசீகரமான வெளியாள் வந்து கலைத்துவிடுவாரோ என்ற சங்கடம் ஆளும் வர்க்கத்தின் சில பிரிவினருக்கு இருந்ததா?
இறுதியில், 'சமன்பாடுகளை சிதைத்துவிடுவார்' என்ற அந்த அச்சம் தான், 'விஜய்' எனும் பிம்பத்தின் மையப்புள்ளியாக இருந்தது.
தமிழக அரசியல், பல ஆண்டுகளாக ஒரு நிலையான கட்டமைப்பிற்குள் இயங்கி வந்தது. தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தன. தேசிய கட்சிகள் இரண்டாம் பட்ச சக்திகளாகவே இருந்தன. அரசியல் வாரிசுரிமை போட்டி கடுமையாக இருந்தபோதிலும், அது பழக்கமான திராவிட கட்டமைப்புக்கு உள்ளேயே இயங்கியது. இந்த சூழலை விஜய் சீர்குலைத்துள்ளார்.
அ.தி.மு.க.,வைப் பாருங்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின், அக்கட்சி மாநிலம் தழுவிய ஒரு பெரிய ஆளுமையை கண்டறிய போராடுகிறது. உட்கட்சி பூசல், தலைமை குறித்த நிச்சயமற்ற தன்மை போன்றவை, ஒரு காலத்தில் பலமாக இருந்த அந்த அமைப்பை வலுவிழக்கச் செய்துள்ளது. தற்போதைய சூழலில் அக்கட்சி எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும் என்பது கேள்விக்குறியே.
ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., பலமான சக்தியாக இருந்தாலும், நீண்ட கால ஆளுங்கட்சிக்கே உரிய ஆட்சி எதிர்ப்பு சுமையை அக்கட்சி சுமக்கத் தொடங்கியுள்ளது. வாரிசு அரசியல், ஓரிடத்தில் அதிகாரம் குவிதல் போன்றவை காலப்போக்கில் கூர்மையடைவது தவிர்க்க முடியாதது. இங்கு தான், அரசியல் ரீதியாக விஜய் முக்கியத்துவம் பெறுகிறார். எந்தவிதமான கடந்த கால அரசியல் சுமையின்றி அவர் களத்தில் இறங்கியுள்ளார்.
அவர் சித்தாந்த பிடிவாதங்களை விட, முன்னேற்றம் குறித்து பேசுகிறார். ஒரே நேரத்தில் நகர்ப்புற இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஊரக மக்களை ஈர்க்கும் வல்லமை படைத்தவராக உள்ளார். மிக முக்கியமாக, பெரும்பாலான அரசியல்வாதிகள் பல ஆண்டுகள் செலவழித்து உருவாக்கிய, 'மக்களுடனான உணர்வுபூர்வமான' பிணைப்பை விஜய் ஏற்கனவே பெற்றுள்ளார்.
அடையாளம்
அவரது ரசிகர் மன்றங்கள், வெறும் மன்றங்களாக இல்லாமல் சமூகத்துடன் பின்னி பிணைந்துள்ளன. சினிமா பிம்பமும், அரசியல் திரட்டலும் வேரூன்றியுள்ள தமிழகத்தில், இது மிகப்பெரிய பலம். பா.ஜ.,வும் விஜயை உன்னிப்பாக கவனிக்க பல காரணங்கள் உண்டு.
திராவிட அரசியலில் ஏற்பட்டுள்ள பிளவை பொதுவெளியில் அக்கட்சி வரவேற்கலாம். ஆனால், இறுதியில் விஜய் தன்னை எங்கும் நிலைநிறுத்திக் கொள்வார் என்பது, பா.ஜ.,வுக்கு தனிப்பட்ட கவலையை தரக்கூடும்.
காங்கிரசுடனும் பிற எதிர்க்கட்சிகளுடனும் விஜய் காட்டும் இணக்கம், அவர் ஒரு பிராந்திய தலைவராக மட்டுமல்லாமல், தென் மாநிலங்களின் ஒரு வலிமையான குரலாக உருவெடுக்கக்கூடும் என்பதை காட்டுகிறது. கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமை, அதிகார குவியலுக்கு எதிரான உணர்வு ஆகியவற்றை பிரதிபலிக்கும் தென்னக அரசியல் அடையாளமாகக்கூட அவர் மாறலாம்.
ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி உடனான அவரது சுமுகமான உறவு, தென் மாநில எதிர்க்கட்சிகளின் ஒரு மையப்புள்ளியாக விஜயை மாற்றக்கூடும். இந்த தென்னக கூட்டணி, பா.ஜ.,வுக்கு கவலையை ஏற்படுத்தும். ஏனெனில், தமிழகம் போன்ற மாநிலங்கள் எப்போதும் ஹிந்துத்வா அரசியலுக்கு சவாலான நிலப்பரப்பாகவே இருந்துள்ளன.
தமிழகத்தில் பா.ஜ.,வின் சவால் என்பது வெறும் தேர்தல் சார்ந்தது மட்டுமல்ல; அது கலாசாரம் சார்ந்ததும் கூட. திராவிட அரசியல் எப்போதும் மத திரட்டலை விட, மொழி அடையாளம் மற்றும் மாநில தன்னாட்சிக்கே முக்கியத்துவம் அளித்துள்ளது. இந்த அரசியல் இலக்கணத்தை விஜய் இயல்பாகவே புரிந்து வைத்துள்ளார். இன்னொரு பக்கம் உள்ள உதயநிதிக்கு, விஜய் வெறும் அரசியல் எதிரி மட்டுமல்ல; அவர் ஒரு கலாசார போட்டியாளர்.
விஜய் ஒருவேளை எம்.ஜி.ஆர்., போல வெற்றி பெற்றால், அது தமிழகத்தின் அரசியல் வரைபடத்தையே முற்றிலும் மாற்றிவிடும். தமிழகத்தில் வசீகரமும், பிம்பங்களை உருவாக்குவதும் முக்கியம். அதனால் தான், விஜயின் எழுச்சி இவ்வளவு தீவிரமாக கவனிக்கப்படுகிறது. ஆனால், விஜயின் ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர்., காலத்து ஆதிக்கத்தை கற்பனை செய்வதற்கு முன், ஒரு எச்சரிக்கையையும் கவனிக்க வேண்டும்.
நம் நாட்டில் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர்களின் வரலாறு சீரற்றது. சினிமா புகழை தரும்; ஆனால், அது நிர்வாகத் திறனையோ அல்லது ஆழமான கட்சி அமைப்பையோ தந்துவிடாது. இங்கு தான், விஜயின் உண்மையான சவால் தொடங்குகிறது.
வெறும் குறியீடுகள் மற்றும் முழக்கங்களை தாண்டி, அவரால் நகர முடியுமா? அடிமட்ட அளவில் வலுவான கட்டமைப்பை கட்சியில் அவரால் உருவாக்க முடியுமா? சினிமா வட்டாரத்தை தாண்டி, நம்பகமான அரசியல் ஆளுமைகளை விஜயால் ஈர்க்க முடியுமா? ஜாதிய ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார வளர்ச்சி, கூட்டாட்சி, மொழி அரசியல், வேலைவாய்ப்பு போன்ற சிக்கலான விவகாரங்களில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க முடியுமா?
முன்னுரிமை
மிக முக்கியமாக, தான் ஒரு ஆட்சி எதிர்ப்பு பிம்பம் மட்டுமல்ல; ஒரு மாற்று ஆட்சி நிர்வாகி என்பதை மக்களிடம் அவரால் நிரூபிக்க முடியுமா? ஏனெனில், ஒரு அமைப்பை சிதைப்பது எளிது. அதற்கு பதிலாக சிறந்த மாற்றத்தை உருவாக்குவது மிக கடினம். இதில், மற்றொரு சுவாரஸ்யமான நிகழ்வும் உள்ளது. அவரது முழுப்பெயரையும் பாருங்கள், 'சந்திரசேகர் ஜோசப் விஜய்!'
மத அடையாளம் அரசியலில் மேலோங்கியிருக்கும் இந்த சூழலில், வேறு எந்த பெரிய மாநிலத்திலாவது இத்தகைய பன்முக அடையாளங்களை கொண்ட ஒரு தலைவரை மக்கள் இவ்வளவு இயல்பாக ஏற்றுக்கொள்வரா? இது, தமிழகத்தின் ஆழமான ஒரு பண்பை எடுத்துரைக்கிறது. அரசியல் போர்களும் சமூக முரண்பாடுகளும் இருந்தாலும், தமிழகம் வரலாற்று ரீதியாக மதப் பிரிவினைகளை தாண்டி, மொழி மற்றும் பிராந்திய அடையாளத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளது.
விஜயின் ஆளுமை இதைத்தான் பிரதிபலிக்கிறது. நம் நாட்டில், பல மாநிலங்களில் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர்கள் இருந்தாலும், தமிழகம் அவர்களுக்கு வளமான மண்ணாக இருக்கிறது. வலிமையான சினிமா கலாசாரம், நீண்ட திராவிட அரசியல் வரலாறு, உறுதியான பிராந்திய உணர்வு மற்றும் ஆளுமையின் வசீகரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வாக்காளர்கள். இந்த தனித்துவமான கலவை மிகவும் அரிதானது.
இருப்பினும், பெரும்பாலான புதிய அரசியல்வாதிகள் செய்ய தவறும் ஒன்றை விஜய் சாதித்துவிட்டார்; ஒவ்வொரு முக்கிய அரசியல்வாதியையும் அவர் தனக்கு எதிர்வினையாற்ற வைத்துவிட்டார். அரசியலில், மக்களின் முக்கியத்துவத்தை உணர்வதே முதல் வெற்றியாகும். விஜய்க்கு மிகப்பெரிய சோதனையே இனி தான் வரப்போகிறது.
அவர், சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்து ராஜதந்திரியாக மாற முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ரசிகர் பட்டாளத்தை அவர் ஓட்டுகளாக மாற்றிஉள்ளார். ஆனால், அந்த ஓட்டுகள், நீடித்த அரசியல் சக்தியாக மாறுமா என்பது விஜய் முன் இருக்கும் சவால்களில் ஒன்று. சினிமாவில், 'ரீ டேக்' எடுக்க முடியும்.
ஆனால், அரசியலில் அது சாத்தியமா? இது தொடக்கம் தான், திரைப்படங்களில் சொல்வது போல் படம் இன்னும் பாக்கி இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
