/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.50,000 மிச்சமாகும்; ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால் என்னென்ன பலன்?
/
குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.50,000 மிச்சமாகும்; ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால் என்னென்ன பலன்?
குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.50,000 மிச்சமாகும்; ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால் என்னென்ன பலன்?
குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.50,000 மிச்சமாகும்; ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால் என்னென்ன பலன்?
PUBLISHED ON : செப் 23, 2025 12:00 AM

''சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி.,யின் மறுசீரமைப்பு அமலுக்கு வந்ததை அடுத்து, மாதம் 1 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் நடுத்தர குடும்பத்திற்கு ஆண்டுக்கு, 50,000 ரூபாய் செலவு மிச்சமாகும். உதிரிபாகங்களை கொள்முதல் செய்து முழு பொருட்களாக உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உள்ளீட்டு வரியில் பாதிப்பு இருந்தால், உரிய ஆவணங்களுடன் ஜி.எஸ்.டி., துறையை அணுகினால் விரைவில் தீர்வு கிடைக்கும்,'' என, ஆடிட்டர் எஸ்.சுந்தர் ராமன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக அறிவித்த ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு அமலுக்கு வந்துள்ளது. இது, மறுசீரமைப்பு மட்டுமல்ல, ஒரு புரட்சிகரமான விஷயம். நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயன் தரக்கூடியது.
நிர்வாக வெற்றி
கடந்த, 2017ல், 17 விதமான வரிகளை ஒருங்கிணைத்து, ஜி.எஸ்.டி., கொண்டு வரப்பட்டது. ஒரு மாநிலத்திற்கும், மற்றொரு மாநிலத்திற்கும் இடையே வரி போர் இருந்தது. புதுச்சேரியில் விலை குறைவு என்பதால், பலரும் அங்கு கார் வாங்குவர்.
புதுச்சேரியில் கார் வாங்கினால், தமிழகத்தில் நுழைவு வரி விதிக்கப்பட்டது. இதுபோல, இரு மாநிலங்களுக்குஇடையே வரி பயங்கர வாதம் இருந்தது.
பல வரிகளும் ஜி.எஸ்.டி.,யின் கீழ் வரும் போது, அது பயங்கரவாதத்தின் முற்றாக இருந்தது. 2017ல் ஜி.எஸ்.டி., அமலான போது, ஒவ்வொரு பொருளுக்கும், வரி நிர்ணயம் செய்யப்பட்டது.
இது, ஏற்கனவே அந்த பொருட்களுக்கு இருந்த மதிப்பு கூட்டப்பட்ட வரி எவ்வளவு இருந்தது; உற்பத்தி, கலால் வரி எவ்வளவு இருந்தது என்பதை சேர்த்து, 17 சதவீதம் வந்தால், ஜி.எஸ்.டி.,யில், 18 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. அது, 5 சதவீதமாக வந்தால், ஜி.எஸ்.டி.,யில், 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
இதுபோல எளிய முறையில் ஜி.எஸ்.டி., நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் தான் இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஒரே ஜி.எஸ்.டி., வரி விகிதத்தை கொண்டு வர முடியவில்லை. எனவே, 5, 12, 18, 28 ஆகிய வரி விகிதங்கள் ஜி.எஸ்.டி.,யில் இடம் பெற்றன.
இப்படி இருந்தாலும் சராசரி ஜி.எஸ்.டி., 15.50 சதவீதம் இருந்தது. தற்போது இந்த வரி, 11.50 - 12 சதவீதமாக குறைந்து உள்ளது.
ஒரு விற்பனையில் ஜி.எஸ்.டி., சுமை, 15.50 சதவீதத்தில் இருந்து, 11.50 - 12 சதவீதமாக குறைந்துள்ளது. இதை, அரசின் வெற்றியாக கூறலாம். ஒரு விற்பனையில் ஜி.எஸ்.டி., சுமை குறைந்திருப்பதை, பொருளாதார வளர்ச்சி, அரசு நிர்வாகத்தின் வெற்றியாக கூறலாம்.
இந்த சாதனைக்கு பின்தான், ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பை அரசு கொண்டு வந்துள்ளது. ஏன் முன்கூட்டியே இதை கொண்டு வரவில்லை என்று கேட்கலாம். இதற்கு முதலில் சராசரி வரியை குறைக்க வேண்டும். அதற்கு பின்தான், மறுசீரமைப்பை கொண்டு வர வேண்டும்.
தொலைநோக்கு பார்வை
நான்கு வரி விகிதங்கள் இருந்த நிலையில், 12 சதவீத பட்டியலில் இருந்த 99 சதவீத பொருட்கள், 5 சதவீதத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல, 28 சதவீதத்தில் இருந்த அனைத்து பொருட்களும், 18 சதவீதத்திற்கு வந்துள்ளன.
இந்தியா போன்ற, 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நாட்டில், ஜி.எஸ்.டி., இரண்டே இரண்டு வரி விகிதங்களாக தான் வந்துள்ளது. இது, வரி விதிப்பில் எளிய நடைமுறையாக இருக்கும். எந்த பொருட்கள் ஜி.எஸ்.டி., விகிதங்களில் வருகின்றன என்பதை பார்ப்பது சுலபம்.
அதிக வரி விகிதங்கள் இருக்கும்போது, எந்த பொருட்கள் எந்த வரியில் வருகின்றன என்பதில் நமக்கே குழப்பம் ஏற்படும். உதாரணமாக, பஜ்ஜி, போண்டா மாவு என்று இருந்தது. இதை, 'ரெடிமேட் புட்ஸ்'சில் எடுக்க வேண்டுமா அல்லது சாதாரணமாக மாவில் எடுக்கலாமா என்ற குழப்பம் இருந்தது.
இதை ரெடிமேடில் எடுத்தால், 12 சதவீதத்திலும், மாவாக எடுத்தால், 5 சதவீத்திலும் வரும். இதுமாதிரி, பல பொருட்களின் வரி விகிதங்களில் குழப்பம் இருந்தது.
இந்த பிரச்னைகள், ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு வாயிலாக சரிசெய்யப்பட்டுள்ளன. இது, அதிகாரிகள், வணிகர்களுக்கு எளிமையாக இருக்கும். ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால் வரி விகிதங்கள் குறைந்துள்ளன, அரசுக்கு இழப்பு ஏற்படும், இதை எப்படி ஈடுகட்டும் என்ற கேள்வி எழலாம்.
இதில் தான் ஒரு பெரிய பொருளாதாரம் இருக்கிறது. ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு என்பது தொலைநோக்கு பார்வையுடன் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதனால், அரசுக்கு ஆண்டுக்கு, 50,000 கோடி ரூபாய் இழப்பு இருக்கிறது. அதன், 'ரெக்கவரி' என்பது, அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில் சரியாகி விடும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் தான் இதை கொண்டு வந்துள்ளனர்.
எப்படி என்று பார்த்தால், ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் ஒரு நடுத்தர குடும்பம்,அதில், 50 சதவீத வருவாயில் வீட்டு கடன், கார் கடன் போன்றவற்றை செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். மீதமுள்ள, 50 சதவீதத்தை மளிகை உள்ளிட்ட வீட்டு செலவுகளுக்கு பயன்படுத்துவர்.
இதில், சராசரியாக முன்னர் செலுத்திய ஜி.எஸ்.டி.,க்கும், மறுசீரமைப்புக்கு பின் செலுத்தக்கூடிய ஜி.எஸ்.டி.,க்கும், 40,000 முதல், 50,000 ரூபாய் வரை சேமிப்பு கிடைக்கும். மாதம் சராசரியாக, 4,000 ரூபாய் - 5,000 ரூபாய் சேமிப்பு இருக்கும்.
இந்த சேமிப்பை, வங்கியில் வைப்பு நிதி உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம். இல்லை எனில் குழந்தைகள் படிப்புக்கு லேப்டாப் போன்றவை வாங்குவர். இதனால், விற்பனை கூடும். இந்த விற்பனை கூடுவது என்பது, ஒட்டுமொத்த விற்பனை சங்கிலியில் கூடும்.
வளர்ச்சி
ஏற்கனவே, ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய்க்கு வரி செலுத்துவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனுடன், ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பாலும், 50,000 ரூபாய்க்கு சேமிப்பு கிடைக்கும். இந்த பிரிவில், ஒரு கோடி மக்கள் உள்ளனர்.
ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், 2 லட்சம் கோடி ரூபாய் உயரும். இதனால், உலக பொருளாதாரத்தில் நான்காவது இடத்தில் உள்ள இந்தியா, விரைவாக இரண்டாவது இடத்திற்கு வரும்.
எனவே, தமிழகம் உட்பட மாநில அரசுகளுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படாது. இது, மக்களுக்கு பயன் அளிக்கிறது. எண்ணெய், ஷாம்பு, சோப், தையல் இயந்திரம், டிராக்டர் உள்ளிட்ட பல பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., வரி, 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைந்துள்ளது.
ஜி.எஸ்.டி., அமலுக்கு வரும்போது, ஜி.எஸ்.டி., பதிவு பெற்ற வணிகர்களின் எண்ணிக்கை, 65 லட்சமாக தான் இருந்தது.
இதில், தமிழகத்தில் 5 லட்சம் பேர் இருந்திருப்பர். தற்போது, 1.51 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். ஏனெனில் அனைத்து வணிகர்களும் வரி ஏய்ப்புக்கு இடம் அளிக்காமல், ஜி.எஸ்.டி., வரி கட்டமைப்புக்குள் வந்து விட்டனர். இது, 151 சதவீத வளர்ச்சி.
இதேபோல், 2018ல் ஜி.எஸ்.டி., வரி வசூல், 7.19 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, தற்போது, 22.08 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில் எந்தவித ஒரு முடிவுக்கும் மத்திய அரசு மட்டுமின்றி, அனைத்து மாநில அரசுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.
ஜி.எஸ்.டி., விகிதங்களை குறைத்த நிலையில் ஒவ்வொரு வணிகரும், பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., குறைப்பை வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும். மேலும், பல துறையினருக்கும் பயன் அளிப்பதாக இருக்கும்.
உள்ளீட்டு வரி
வணிகர்களின் விற்கும் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்கள், மூலப்பொருட்கள் கொள்முதல் செய்யும்போது, ஜி.எஸ்.டி., செலுத்தி வாங்கியுள்ளனர். ஜி.எஸ்.டி., மறு சீரமைப்பால் கொள்முதல் ஜி.எஸ்.டி.,யும், விற்பனை ஜி.எஸ்.டி.,யும், 95 சத வீதம் குறைந்துள்ளது.
ஆனால், சில இடங்களில் மட்டும் விடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடுத்துக்காட்டகாக, ஒரு வணிகரின் கொள்முதல் ஜி.எஸ்.டி., முன்பும், 18 சதவீதம் தான், தற்போதும், 18 சதவீதம் தான். ஆனால், விற்பனை வரி மட்டும், 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், 13 சதவீத உள்ளீட்டு வரி முடங்குவதாக கூறுகின்றனர்.
அதிக மாற்றங்கள் கொண்டு வரும்போது, சில விடுபட்டிருக்கலாம். இதனால், ஒரு தொழில் துறையை அரசு எடுத்துக் கொள்ளவில்லை என்று கருதக்கூடாது. இது தொடர்பாக கோரிக்கைகள் வர வர, அரசு ஆய்வு செய்து, அடுத்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திலேயே நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.