அந்த வகையில், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள புகழ்பெற்ற லலித் கலா அகாடமியில், 'எல்லோரா நுண்கலை அகாடமி' சார்பில் பிரம்மாண்ட ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது. கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இக்கண்காட்சி, காண்போரின் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைந்துள்ளது.
இந்தக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான கதையையும், ஆழமான வாழ்வியலையும் பேசுகின்றன. பசுமையான காடுகள், கொட்டும் அருவிகள், பறவைகளின் நடமாட்டம் என இயற்கையின் அழகை அப்படியே அச்சு அசலாகப் பிரதிபலிக்கும் ஓவியங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.மனிதர்களின் முக பாவனைகள், உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை, குழந்தைகள் மற்றும் முதியவர்களின் தத்ரூபமான ஓவியங்கள் என மனித உணர்வுகளை அகம் உருகும் வண்ணம் கலைஞர்கள் தீட்டியுள்ளனர்.
கண்காட்சி தொடங்கிய நாள் முதலே, சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள், ஓவியக் கலைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து ஓவியங்களைக் கண்டு ரசித்து வருகின்றனர். பல நுணுக்கமான ஓவியங்களின் முன்னால் நின்று அதன் அழகைப் பாராட்டுவதோடு, தங்களுக்குப் பிடித்த ஓவியங்களை மக்கள் புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.கலை உலகிற்குப் பெருமை சேர்க்கும் இந்த அரிய ஓவியக் கண்காட்சி இன்று திங்கட்கிழமை வரை மட்டுமே நடைபெற உள்ளது.
பரபரப்பான சென்னை வாழ்க்கையில், மனதிற்கு அமைதியையும் ஒரு புதிய தேடலையும் தரும் இடமாக இந்த ஓவியக் கண்காட்சி அமைந்துள்ளது. எல்லோரா நுண்கலை அகாடமியின் இந்த முயற்சி, வளர்ந்து வரும் பல ஓவியர்களுக்கு ஒரு சிறந்த தளமாக அமைந்திருப்பதோடு, மக்களிடையே கலை ரசனையை வளர்க்கும் உன்னத பணியையும் செய்துள்ளது என்றால் அது மிகையாகாது. ஓவியங்களை நேசிக்கும் ஒவ்வொருவரும் தவறவிடக்கூடாத ஒரு நிகழ்வு இது!
-படங்கள்:யுவராஜ்