திருமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா, இந்த ஆண்டு மேலும் சிறப்பாகவும் மகத்துவமிகுந்ததாகவும் நடைபெற்றது. செப்டம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழா, பக்தர்களுக்கு ஆனந்தத் தரிசனத்தோடும், கலாச்சார பரவசத்தோடும் நிகழ்கிறது.
இந்த ஆண்டு விழாவில் முதன்முறையாக, 20 மாநிலங்களின் முப்பத்தேழு கலைக்குழுக்கள் பங்கேற்று வருகின்றன. ஒவ்வொரு நாளும் ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வாகனங்களில் மாடவீதிகளில் புறப்பாடு செய்யும் போது, பல மாநில கலைஞர்கள் தங்களது பாரம்பரிய நடனங்களையும் நாட்டுப்புறக் கலைகளையும் வெளிப்படுத்துகின்றனர். இது பக்தர்களுக்கு தரிசனத்தின் ஆனந்தம் மட்டுமல்ல, கலாச்சார விருந்தும் அளிக்கிறது.
திருமலையில் பக்தர்களுக்காக தினமும் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து பதினாறாயிரம் சிறப்பு தர்ஷன் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. வி.ஐ.பி தர்ஷன் கிடையாது. முப்பத்தாறு பெரிய திரைகள் மூலம் வாகன சேவைகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. தினசரி எட்டு லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. பல வகை உணவுகள் திருமலை முழுவதும் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், அறுபது டன் மலர்களால் அமைக்கப்பட்ட மலர் கண்காட்சி, மூன்றரை கோடி ரூபாய் செலவில், பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த ஆண்டின் நிகழ்ச்சி நிரல் ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சின்ன சேஷ வாகனம், சிம்ம வாகனம், கல்பவிருட்ஷ வாகனம், கருட வாகனம், கஜ வாகனம், சூர்ய பிரபை, சந்திர பிரபை, தேரோட்டம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். நிறைவு நாளான அக்டோபர் 2ஆம் தேதி சக்ரஸ்நானமும் கொடி இறக்குதலும் இடம் பெறும்.
திருமலையில் கலாச்சார நிகழ்ச்சிகள் பக்தர்களை மெய்மறக்கச் செய்கின்றன. தெலுங்கானாவின் பழங்குடியினரின் வீர நடனம், குஜராத்தின் திப்பணி, கர்பா, மகாராஷ்டிராவின் லாவணி, டிரம் கலைகள், ஆந்திராவின் பாரதநாட்டியம், குச்சிப்புடி, கோலாட்டம், அசாமின் பிஹு, போர்டல் நடனம், ஒடிசாவின் சம்பல்புரி, மேற்கு வங்காளத்தின் டாக் இசைக்கருவியுடன் நடக்கும் டாக் நடனம், ஜூமர், ராதா-கிருஷ்ண ரசலீலை, ஜார்கண்டின் முகமூடி அணிந்து நிகழ்த்தப்படும் வீர நடனம், கர்நாடகாவின் ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹாத்தியம் நாடக நடனம், திரிபுராவின் குடை நடனம், திரிபுரா, அசாமின் ஜாக்ரி, சத்ரிய, ஹனுமான் சாலிசா, தீபம் நடனம், கதகளி, நவதுர்கா, கிருஷ்ணலீலா தரங்கிணி போன்றவை பக்தர்களை ஆனந்தத்தில் மூழ்கடிக்கின்றன.
பக்தி பரவசத்துடன் பெருமாளை தரிசிப்பதோடு, ஒரே நேரத்தில் இத்தனை மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகளையும் ரசிப்பது மிக அரிய வாய்ப்பு. இந்த ஆண்டு பிரம்மோற்சவம், கலாச்சாரமும் பக்தியும் இணைந்த மிகப்பெரிய திருவிழாவாகும்.
இந்த விழாவை முன்னிட்டு, 'சுப்பரபாதம் முதல் பிரம்மோற்சவம் வரை' என்ற சிறப்பு நூல் வெளியிடப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல்கள், வாகன அலங்காரங்கள், திருமலைக்கு செல்வது, தங்குவது போன்ற விவரங்கள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக எங்கள் நிருபர் குழு சேகரித்த செய்திகளும் புகைப்படங்களும் இணைந்துள்ள இந்நூல், வாசகர்களுக்கு விழாவின் சிறப்புகளை விரிவாக அனுபவிக்க வழிகாட்டும்.