
பண்டைய தமிழகத்தில், மக்கள் என்ன சாப்பிட்டார்கள்?
ஐந்திணைகள் என்ற பிரிவினையில் அமைந்திருந்த நிலப்பகுதிகளில் மக்கள் வாழ்ந்தார்கள். அங்கே கிடைத்த அல்லது விளைந்த பொருட்களையே உண்டார்கள். அவற்றில் முக்கியமானவை:
குறிஞ்சி (மலை, மலை சார்ந்த இடம்): இவர்கள் வாழ்ந்தது குளிர் பிரதேசம் ஆகையால், திணை, மலைநெல், மூங்கில் அரிசி, கிழங்கு வகைகள் ஆகியவற்றை உண்டார்கள். எ.டு: ஊட்டி, கொடைக்கானல்.
முல்லை (காடு, காடு சார்ந்த இடம்): மரங்கள் நிறைந்த மலையடிவாரப் பகுதியில் வாழ்ந்த இம்மக்கள் வரகு, சாமை போன்றவற்றைப் பயிரிட்டனர். காட்டு விலங்குகளின் இறைச்சியும் இம்மக்களின் உணவாகின. எ.டு: திருப்பத்தூர், நாட்றம்பள்ளி
மருதம் (வயல் மற்றும் வயல் சார்ந்த இடம்): நீர் வளமும் விவசாய அறிவும் அதிகம் பெற்றிருந்த இம்மக்கள், செந்நெல், கரும்பு மற்றும் வெண்ணெலரிசியை உணவாக அதிகம் உண்டனர். எ.டு: தஞ்சை, மதுரை.
நெய்தல் (கடல், கடல் சார்ந்த இடம்): உப்பு வளம் நிறைந்த இந்த இடத்தில் அதைச் சேகரித்து விற்பதால் பெறும் பொருளால் கிடைக்கும் உணவுப்பண்டங்கள், மற்றும் மீனவத் தொழில் மூலம் கிடைக்கும் மீன் முதலான கடல்சார் உயிரினங்களே இவர்கள் உணவு. எ.டு: தூத்துக்குடி, சென்னை.
பாலை (வறண்ட நிலப்பகுதி): விளைச்சலோ, இயற்கை வளங்களோ அதிகமற்ற இப்பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரம், கிடைப்பதைக் கொண்டே அமைந்திருந்தது. (முல்லையும் குறிஞ்சியும் திரிந்த பகுதியே பாலை)
பண்டமாற்று முறையிலும் நெல், உப்பு, தயிர், தேன், போன்றவை பிற நிலங்களுக்குச் சென்றன.
- பவித்ரா ஸ்ரீனிவாசன்

