PUBLISHED ON : செப் 18, 2025 12:00 AM

வயதுக்கும் சாதனைக்கும் இடையிலான தொடர்பு இல்லை. ஆர்வமும், விடாமுயற்சியும், மன உறுதியும் இருந்தால் எந்த சாதனைகளையும் செய்யலாம். வயது தடையாக இருக்காது என்பதை பலர் நிரூபித்துள்ளனர். இவர்களில் ஒருவரே சுமதி. அவரது சாதனை அசாத்தியமாகத் தோன்றும்.
திருமணத்திற்கு பின் 35 ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். பிள்ளைகள் திருமணமான பின் மீண்டும் சொந்த ஊருக்கு வந்து வீடு கட்டி வசிக்கிறார். பல ஆண்டுகள் மும்பையில் இருந்தாலும், நவீன வாழ்க்கைக்கு மாறவில்லை; தன் வீட்டை கிராமிய மணத்துடன் வைத்துள்ளார்.திறமையை வெளிப்படுத்த வயதும் முதுமையோ தடையாக இருக்காது என்பதற்கு இவர் சிறந்த எடுத்துக்காட்டு.
தினமும் இரண்டு மணி நேரம் கலைப்பொருட்களை உருவாக்குவதில் ஈடுபடுகிறார். அவரது வீட்டுக்குள் சென்றால், புதிய உலகில் வந்த உணர்வு ஏற்படும். ஒவ்வொரு பொருளும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.இவரது படைப்புகளைப் பார்க்க பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுப்புற கிராமத்தினர், சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இங்குள்ள கலைப்பொருட்கள் அனைவரையும் ஈர்க்கின்றன.
சுமதியம்மாவை தங்கள் ஊருக்கு கிடைத்த பெருமையாகக் கருதுகின்றனர் கிராமத்தினர். இந்த வயதிலும் அவரது கலைத்திறனைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். தேவையற்ற பொருட்களை வீதியில் வீசி அசுத்தமாக்குகிறோம்; இத்தகைய பொருட்களுக்கு சுமதி கலை வடிவம் கொடுக்கிறார். அவரது பணியை நாங்கள் பாராட்டுகிறோம். இவர் மற்றவருக்கு முன்னுதாரணமாக வாழ்கிறார். இவரைப் போன்று அனைவரும் செயல்பட்டால், வீடும்,நாடும் அழகாகும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்றனர்.