ADDED : ஜூன் 09, 2026 06:35 AM

''விஜய் கட்சில மத்தக் கட்சிக்காரங்க கொத்துக் கொத்தா சேர்றதைப் பார்த்துட்டு, ஆரம்பத்துல இருந்தே ரசிகர் மன்றத்துல உழைச்ச நம்ம ஊரு இளைஞர்கள் ஆதங்கத்துல இருக்கறாங்களாம்க்கா...''
மித்ராவின் குரலைக் கேட்டு சித்ரா தலையை உயர்த்தினாள்.
''உள்ளாட்சித் தேர்தல்ல நமக்கு சீட் கிடைக்காம மண் அள்ளிப்போட்ருவாங்களோன்னு பயப்படுற அவங்கள்ல ஒரு தம்பி, 'நான் சீட்டுப்போட்டு அஞ்சு லட்சம் சேர்த்து வச்சிருக்கேன். ஆனா அ.தி.மு.க. - தி.மு.க.-வுல இருந்து வர்றவங்க பெரும் கோடீஸ்வரங்களா இருக்காங்க; அவங்களை எதிர்த்து நம்மால சீட் வாங்க முடியுமா'ன்னு ரொம்பவே புலம்புறாரு...
''இருந்தாலும், அமைச்சரவைல ரசிகர் மன்றத்துல இருந்தவங்களுக்கு விஜய் முக்கியத்துவம் கொடுத்ததை வச்சு, நமக்கும் மதிப்பு குறையாதுன்னு ஒரு குரூப் இன்னமும் நம்பிக்கையில இருக்காங்க அக்கா''
''ஆள் சேர்க்குறதுல இன்னொரு கூத்தும் நடக்குது மித்து. தி.மு.க. வர்த்தக அணியில கோலோச்சி, போலி பாஸ்போர்ட் விவகாரம் மற்றும் லேடீஸ் மேட்டர்ல சிக்குன அந்த மோகனமான ராஜா இப்போ த.வெ.க-வுல சேர்ந்துட்டாராம்!
''முன்னாடி மேட்டுப்பாளையம் சந்தை ஏலத்துல தி.மு.க. தலைமை குடும்பத்து பேரச் சொல்லி மோசடி பண்ணினதுக்காக தி.மு.க. மேலிடம் அவரைத் துாக்கியடிச்சு ஜெயில்ல தள்ளுச்சு.
''ஆட்களோட 'ஜாதகம்' தெரியாம த.வெ.க-வுல ஆட்களைச் சேர்க்குறாங்களா, இல்ல தானா கூடுற கூட்டத்துல இதையெல்லாம் கண்டுக்கிறது இல்லையான்னு தெரியல மித்து''
பழனிசாமி நம்பிக்கை ''அக்கா, திருப்பூர் அ.தி.மு.க. கூடாரத்துல 'மாஜி'க்கள் கட்சி மாறிட்டே இருக்காங்க. ஆட்சில இருந்தப்ப சம்பாதிச்சுட்டு, இப்போ வெளியே போறாங்கன்னு விசுவாசிகள் சாபம் விடாத குறையா பேசுறாங்க.
''கட்சியை விட்டு த.வெ.க-வுக்குப் போனவங்க இன்னும் பழைய 'வாட்ஸ் ஆப்' குரூப்ல இருந்துக்கிட்டு, கட்சி விசுவாசிங்க போடுற போஸ்ட்களுக்கு எதிரா ஆவேசமா கமென்ட் பண்றாங்களாம்.
''இதனால மோதல் போக்கு அதிகமாகவும், போன வாரம் கட்சி ஆபீஸுக்கு வந்திருந்த மாவட்ட செயலாளரிடம் பெண்கள் இதுபத்தி புகார் பண்ணிருக்காங்க.
''டென்ஷனான மா.செ., 'முதல்ல அவங்க பேரை டெலிட் பண்ணுங்க'ன்னு ஆர்டர் போட்டுட்டாராம்.''
''மித்து... திருப்பூர் 'மாஜி' ஆனந்தம் த.வெ.க-.வுக்குப் போறார்னு ஒரே பரபரப்பா தகவல் வந்துச்சு... அவரோட ஆதரவாளரைக் கேட்டா, 'உடுமலை ராதாகிருஷ்ணன் கூட போய் சேர்ந்தா, அவர் பதவி வாங்கிட்டுப் போயிடுவாரு, நமக்கு மதிப்பு இருக்காதுங்க'ன்னு மட்டும் சொல்றாங்களாம்.
''மாஜி ரியாக்ஷன் காட்டாம இருக்கிறதைப் பார்த்தா, 'எங்களுக்கே குழப்பமா இருக்கு'ன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க.''
''திருப்பூர்ல இருந்து மாவட்டச் செயலாளரோட சேர்ந்து பொதுச்செயலாளர் பழனிசாமியை நிர்வாகிகள் சந்திச்சாங்களாம்.
''மாவட்டத்துல விசிலுக்கு மாறுனவங்களை நினைச்சு வருத்தப்பட்ட பழனிசாமி, 'உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்ல முகம் தெரியாதவங்களுக்கு மக்கள் ஓட்டுப்போட மாட்டாங்க... உள்ளாட்சி தேர்தல் பணிகளை இப்பவே துவங்கீடுங்க... தொண்டர்கள் நம்மோடு தான் இருக்கிறாங்கன்னு நம்பிக்கையோட சொன்னாராம்''
''பதினைஞ்சு வருஷத்துக்கு அப்புறம் மா.செ. பதவி கிடைச்சதால, திருப்பூர் அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் சிவசாமி மறுபடியும் தீவிர அரசியலுக்கு வந்துட்டாரு.
'''உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகுங்க'ன்னு ஊர் ஊராப் போய் தீவிரமா நிர்வாகிகளைச் சந்திச்சுட்டு இருக்காரு''
பகிர்ந்து கொண்டாள் சித்ரா.
அண்ணாமலை வியூகம் ''அண்ணாமலை இயக்கத்துல நம்ம மாவட்டத்துல இருந்து இணையவழியா நிறைய பேரு சேர்ந்துட்டுத்தான் இருக்காங்க மித்து. பா.ஜ.வுல இருந்து மாஜிக்களும், பல்வேறு நிர்வாகிகளும் ஷிப்ட் ஆகியிருக்காங்க.
''எல்லா தரப்புகள்ல இருந்தும் சேரணும். குறிப்பா இளைஞர்கள் எண்ணிக்கை கூடணும்; கூடும்னு சொல்றாங்க, அண்ணாமலை ஆதரவாளருங்க.
''திராவிடக் கட்சிகளும் பிடிக்காம, விஜய் கட்சியும் பிடிக்காம இருக்குற இளைஞர்களைக் கவர் பண்றதுலதான் அவங்க கவனமா இருக்காங்களாம் அக்கா.''
'ஷார்ப்' ஆக சொன்னாள் மித்ரா.
''விஜய் - அண்ணாமலை கிட்ட அதிகாரிகள், பல்வேறு கட்சிக்காரங்களோட 'சரண்டர்' காலம் இதுபோல... திருப்பூர் மாவட்டப் பொறுப்பு அமைச்சரா நாமக்கல் காரரான அருண்ராஜைப் போட்டது பெரிய விவாதத்தைக் கிளப்பிருக்கு மித்து. நம்ம ஊர் அமைச்சர் கமலியைப் போடல, அனுபவமுள்ள செங்கோட்டையனையும் போடல.
'''வெளியூர் காரரை இங்க போட்டா, அவரால மாவட்டப் பிரச்னைகள்ல அவ்வளவு எளிதா கவனம் செலுத்த முடியாது'ன்னு ஒருதரப்பு பேசிக்கிறாங்க. ஆனா த.வெ.க. தரப் போ வேற மாதிரி சொல்லுது.
''அவரு ஐ.ஆர்.எஸ். ஆபீசரா இருந்தவரு, திருப்பூர் மாதிரி தொழில் நகரங்கள் பத்தி நல்லா தெரியும்; பிரச்னைகளைச் சட்டுன்னு புரிஞ்சுக்குவாரு'ன்னு முட்டுக்குடுக்கிறாங்க அக்கா.''
''அதேநேரம் நீலகிரிக்கு கமலியைப் பொறுப்பா போட்டிருக்காங்க மித்து. அவருக்கு அனுபவமும் இல்லை, அங்க த.வெ.க. ஒண்ணுல கூட ஜெயிக்கவும் இல்ல; எப்படிச் சமாளிப்பாங்கன்னு கேள்வி எழுந்திருக்கு. ஆனாலும் 'யங்ஸ்டரா இருந்தா என்ன, இனி கத்துக்குவாங்க, சாதிப்பாங்க'ன்னு கமலி தரப்பு சொல்லுது''
ஆய்வுக்கூட்ட களேபரம் ''அக்கா, கலெக்டரேட்ல பொறுப்பு அமைச்சர் அருண்ராஜ் தலைமைல நடந்த ஆய்வுக் கூட்டத்துல ஏகப்பட்ட அரசியல் களேபரங்கள் நடந்திருக்கு மித்து.
''அமைச்சர் வர்றதுக்கு லேட் ஆனதால, அவர் வர்றதுக்கு முன்னாடியே கூட்டத்தைத் துவங்கிட்டாங்க. துவக்கத்துல எம்.பி. சுப்பராயன் கலந்துக்கிட்டாரு.
''ஆனா, அமைச்சர் அருண்ராஜ் உள்ளே வந்தவுடனே, எம்.பி. சுப்பராயன் திடீர்னு அங்கிருந்து கிளம்பிட்டாராம்! அதேபோல, யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நடராஜும் கடைசி நேரத்துல இந்தக் கூட்டத்துல கலந்துக்கிட்டாரு. ஆனா, உடுமலை மற்றும் மடத்துக்குளம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரெண்டு பேரும் கூட்டத்துக்கு வரலையாம்.
''முதல்வர் விஜய் 'வெளிப்படையான நிர்வாகம்'னு பேசுறாரு, ஆனா இங்க ஆய்வுக்கூட்டச் செய்தி சேகரிக்கப் போன பத்திரிகையாளர்களை பி.ஆர்.ஓ. குரூப் ரெண்டே நிமிஷத்துல வெளில அனுப்பிட்டாங்க.
''கூட்ட அரங்கு கதவுகளை இறுக்க மூடிட்டு ரகசியக் கூட்டம் மாதிரி நடத்துனாங்களாம். தாராபுரம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதவியை ரிசைன் பண்ணிட்டு த.வெ.க.ல சேர்ந்த சத்தியபாமா; த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் சங்கர், யுவராஜ் எல்லாரும் ஆபீசர்களுக்கு இணையா முன்வரிசையிலயே வந்து கெத்தா உக்காந்திருந்தாங்களாம்''
''அரசு மீட்டிங்லயே த.வெ.க. நிர்வாகிகள் முன்னாடி வந்து உக்காந்து அதிகாரத் தோரணை காட்டுறதை நிறுத்தணும்... பொறுப்பு அமைச்சர் கையிலதான் பொறுப்பு இருக்கு. சரிக்கா... வீட்டுக்கு நா கெளம்புறேன்.''
ஸ்கூட்டியில் புறப்பட்டாள் மித்ரா.
