ADDED : மே 26, 2026 07:27 AM

மணக்க மணக்க சித்ரா பில்டர் காபி போட்டுக்கொண்டிருந்தபோதே, ஹாலில் வந்து அமர்ந்தாள் மித்ரா.
''அக்கா... தேர்தல் பீவரெல்லாம் முடிஞ்சு, புது மினிஸ்டர்களும் பதவியேத்துட்டாங்க''
''ஆமா மித்து... திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ. சத்தியபாமா, கண்டிப்பா மினிஸ்டர் போஸ்ட் கிடைச்சிரும்ன்னு கனவு கண்டுட்டு இருந்தாங்க.
''கட்சில அவங்க சீனியர்... நல்ல போஸ்ட்லயும் இருந்தாங்க. ஆனா, பாருங்க... அவங்களுக்கு அந்த லக் அடிக்கல!
''அவிநாசி எம்.எல்.ஏ. கமலிக்குத்தான் ஜாக்பாட் அடிச்சிருக்கு. சென்ட்ரல் மினிஸ்டர் முருகனையே ஜெயிச்சுக் காட்டுனது தான் இவங்களுக்கு முக்கியக் காரணம்.
''இந்த அமைச்சரவையிலேயே ரொம்ப யங் மினிஸ்டர் இவங்கதான். அமைச்சர் ஆன ஜூனியர் இவங்கதான் என்ற பெருமை கிடைச்சிருக்கு.
''ஆனா, சத்தியபாமா மாதிரி சீனியர் வாய்ப்பு கிடைக்காம அப்செட் ஆனது செங்கோட்டையன் தரப்புக்கு சற்று விரக்தியைத் தந்திருக்கு...
''அரசியல்ல எந்த நேரத்துல யாருக்கு லக் அடிக்கும்ன்னே சொல்ல முடியாது. ஏன்னா, த.வெ.க.வைப் பொறுத்தவரை விஜய் ஒருத்தர் தான் அதிகார மையம்''
சொல்லி முடித்தாள் சித்ரா.
த.வெ.கவில் ஐக்கியம் ''ஆமாக்கா... இப்போ திருப்பூர்ல சத்தமில்லாம எல்லாரும் உள்ளாட்சி தேர்தல் சீட் கணக்கைப் போட்டுப் பார்த்து த.வெ.க.வுல ஐக்கியமாகிட்டு வர்றாங்களாம்.
''அதுலயும் ம.தி.மு.க. அங்க கூண்டோட காலி ஆயிடுச்சாமே! மாவட்டச் செயலாளர் நாகராஜ் உள்பட ரெண்டு மாநகராட்சி கவுன்சிலர்கள் த.வெ.க.வுல இணைஞ்சுட்டாங்க.
''அ.தி.மு.க. கீழ்மட்ட நிர்வாகிகள் கொத்து கொத்தா த.வெ.க.வுல தஞ்சம் அடையுறாங்க. அவங்க செங்கோட்டையனைச் சந்திச்சு தங்களை சேர்த்துக்கச் சொல்றாங்களாம்.
''அவரும் 'மாவட்ட செயலாளரைப் பாருங்க, என்கூட எடுத்த போட்டோவை சோஷியல் மீடியாவுல போடுங்க'ன்னு சொல்லி அனுப்பிடுறாராம்.
''ஆனா, உள்ளாட்சி தேர்தல் சீட் பத்தி அவங்க கேட்டா, தன் தரப்பு ஜூனியரான சத்தியபாமாவையே அமைச்சராக்க முடியலையேன்ற கவலையில செங்கோட்டையன் எந்த உறுதியும் தர மாட்டேங்குறாராம்.
காங்கிரஸ் குஷி ''அப்படியே த.வெ.க. கூட்டணில சேர்ந்து மினிஸ்டர் பதவி வாங்குன குஷியில காங்கிரஸ் காரங்க மிதக்குறாங்க பாத்தியாக்கா.
''புதுசா மினிஸ்டர் ஆகியிருக்கற விஸ்வநாதன், ராஜேஷ்குமார் ரெண்டு பேரையும் பாக்குறதுக்காக பதவியேற்ற மறுநாளே சென்னைக்கு வண்டி கட்டிட்டாங்க.
''மினிஸ்டர்ஸ் தரப்பு 'அப்புறமா பாக்கலாம்'ன்னு சொல்லியும், திருப்பூர்க் காரங்க அசைஞ்சு கொடுக்காம ஒரு நாள் முழுக்க காத்துக் கிடந்து வாழ்த்துச் சொல்லிட்டுத்தான் ஊர் திரும்பியிருக்காங்க.
''உள்ளாட்சித் தேர்தலுக்கு இப்பவே 'அடி' போடுறாங்க போல''
சிரித்துக்கொண்டே சொன்னாள் மித்ரா.
மாஜி எம்.எல்.ஏ. பல்டி ''கட்சியை விட்டு விலகுறதுல முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ் செஞ்ச காரியம் தான் செம காமெடி மித்து'' என்று அடுத்த டாபிக்குக்குத் தாவினாள் சித்ரா.
''அவரு போன வாரம் திடீர்னு தி.மு.க.வை விட்டு விலகுறதா அறிவிச்சுட்டு, அறிவிச்ச வேகத்திலேயே உடனடியா பல்டி அடிச்சுட்டாரு.
''இவ்வளவு எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற மனுஷன் இப்படி அவசரப்பட்டு முடிவைத் திரும்பப் பெறணுமா'ன்னு எல்லாரும் சிரிக்கிறாங்க.
''அவரு விலகுறதா சொன்ன அடுத்த நிமிஷமே, சில பேரு 'மாவட்ட செயலாளர்' போஸ்ட்டை நாம பிடிச்சிரலாம்னு குதிச்சு, ஒரே நாள்ல அவங்க வேஷமெல்லாம் கலைஞ்சு போச்சு''
சித்ரா புன்னகைத்தவாறே சொன்னாள்.
என்ன நடக்குதோ! ''மித்து... தாராபுரம் எம்.எல்.ஏ. சத்தியபாமா உள்பட மூணு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீர்னு ராஜினாமா பண்ணீட்டு த.வெ.க.ல இணைஞ்சுட்டாங்க... இதனால திடீர்னு மாவட்டத்துல அரசியல் வட்டாரங்கள்ல பரபரப்பு நிலவுது...
''மாவட்டத்துல இடைத்தேர்தல் நடக்கறது உறுதியாயிருச்சு... குதிரை பேரம் நடந்ததா அ.தி.மு.க.ல இருந்து குற்றச்சாட்டு வச்சிருக்காங்க...''
''ஆமாக்கா... அடுத்தடுத்து பெரும் அரசியல் திருப்பங்களும் இருக்கும் போல... தேர்தல் ரிசல்ட்டை வச்சு, செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கூடி ஒரு ரகசிய அலசல் நடத்தினாங்களாம்.
''நிர்வாகிகள் எல்லாரும் தி.மு.க.வுக்குத்தான் சப்போர்ட் பண்ணியிருக்காங்க, ஆனா, கீழ்மட்ட ஊழியர்கள் அப்படியே த.வெ.க.வுக்கு ஓட்டுப் போட்டுட்டாங்கன்னு ஒரு நிர்வாகி போட்டுடைச்சிருக்கார்.
''அஞ்சு பேரு செய்ய வேண்டிய வேலையை, ஒரே ஒருத்தர் தலையில கட்டுனா வர்ற எரிச்சல்லதான் ஓட்டை மாத்திக் குத்திட்டாங்களாம்.
டாக்டர் முரண்டு ''அக்கா... போன வாரம் உடம்புக்கு முடியாத ஒரு பெரியவரை, சமூக ஆர்வலர் திருப்பூர் ஜி.ஹெச்.ல கொண்டு வந்து சேர்த்திருக்காருக்கா, ஆனா அவரு மறுநாளே இறந்துட்டாரு.
''அப்புறம் சமூக ஆர்வலர் 'அறக்கட்டளை பேர்ல வாங்கி அடக்கம் செஞ்சுக்கிறோம்'னு சொன்னதுக்கு, அங்கிருந்த ஒரு டாக்டர் 'தனி நபரா வாங்கிக்கோங்க'ன்னு தேவையில்லாம முரண்டு பிடிச்சிருக்காரு.
''சாயங்காலம் வரைக்கும் பிரேத பரிசோதனை அறைக்கு வெளியவே காக்க வச்சு, கடைசில தனி நபராவே எழுதிக்குடுத்துட்டு சடலத்தை வாங்கிட்டுப் போயிருக்காரு.
''கொடுவாய் பக்கத்துல போன வாரம் ஒரு அரசு பஸ்சோட மேற்கூரை அப்படியே காத்துல பறந்து விழுந்துச்சுல்ல, இந்த விவகாரம்தான் இப்போ போக்குவரத்து கழகத்துல ஹாட் டாபிக்.
''சோஷியல் மீடியாவுல போட்டு நாறடிச்சிருவான்னு பயந்து, டிரைவரும் கண்டக்டரும் எப்படியோ கஷ்டப்பட்டு பஸ்சை டிப்போவுக்கு கொண்டு வந்து நிறுத்திட்டாங்க.
''இதை அதிகாரிகள் குத்தம் சொன்னப்போ... 'டிபார்ட்மென்ட் பேரு கெட்டுப் போகக்கூடாதுன்னு தானே கொண்டுவந்தோம்... அது தப்பா?'ன்னு எதிர் கேள்வி கேட்டு வாயடைக்க வச்சிருக்காங்க''
மித்ரா உண்மையை வெளிப்படுத்தினாள்.
அள்ளும் கலெக்ஷன் ''பொதுவா, எலக்ஷன் முடிஞ்சதும் திருப்பூர் கலெக்டருக்கும் டிரான்ஸ்பர் வரும்ன்னு பேச்சு வந்துச்சுல்ல மித்து...
''அதுக்குள்ள, அதிகாரிகள் அவசர அவசரமா பி.டி.ஓ. டிரான்ஸ்பர் லிஸ்ட்டைத் தயாரிச்சு, கலெக்டர் கையெழுத்துக்கு அனுப்பி வச்சிருக்காங்க.
''இப்போ பஞ்சாயத்துகள்ல பிரசிடென்ட் யாரும் இல்லாததால், பி.டி.ஓ.க்கள் வச்சதுதான் சட்டம், அதனால கலெக் ஷனும் அள்ளலாம்.
''நல்ல வருமானம் உள்ள ஊராட்சிகளைக் கேட்டு வாங்குறதுக்காக, சில பி.டி.ஓ.க்கள் இந்த அதிகாரிகளைப் பலமாகக் கவனிச் சிருக்காங்களாம்.
''அவிநாசி யூனியன் ஆபீஸ்ல ராத்திரி 8:00 மணிக்கு மேலயும் அதிகாரிகள் செம பிஸியா வேலை பார்க்குறாங்களாம்.
''பகல் முழுக்க வராத சுறுசுறுப்பு, ராத்திரி நேரத்துல 'கமிஷன்' பிரிக்குறதுக்காக மட்டும்தான் வருதாம்''
சலித்துக் கொண்டாள் சித்ரா.
பார் கட்டுப்பாடு ''மித்து, பல்லடம் எம்.எல்.ஏ.வைப் பத்தி ஒரு டாக் ஓடுதே, கேட்டியா... அவரு இப்போ எங்க போனாலும் யார்கிட்டயும் சரியா பேசுறதே இல்லையாம்.
''எம்.எல்.ஏ.வுக்குப் பதிலா ஒரு மாவட்ட நிர்வாகிதான் எல்லா இடத்துலயும் முன்னாடி நின்னு பேசுறாராம். போன் பண்ணாக்கூட டக்குனு கட் பண்ணிடுறாராம்.
''திராவிட கட்சிகளோட கன்ட்ரோல்ல இருந்த பார்கள் இப்போ ஆளுங்கட்சி நிர்வாகிகள் கன்ட்ரோலுக்கு மாறிக்கிட்டு இருக்கு.
''பல்லடம் பார் ஓனருங்க சில பேரு, தங்களுக்கு பிரச்னை வந்துடக்கூடாதுங்கிறதுக்காக இப்போதே ஆளுங்கட்சி தரப்புக்கிட்ட ரகசியமா 'டீல்' பேசிட்டு இருக்காங்களாம்''
சித்ரா தெளிவாகச் சொன்னாள்.
''திருப்பூர் வடக்கு, தெற்கு எம்.எல்.ஏ. ஆபீஸ் விஷயத்துல, பொதுப்பணித்துறை இன்னும் ஆபீஸை ரெடி பண்ணாம இழுத்தடிக்குதுங்க்கா.
''இதுல தெற்கு எம்.எல்.ஏ.-வை பார்க்கப் போனா பயங்கர கெடுபிடியாம்; அவரைச் சுத்தி நிக்கிற ரசிகர் மன்றத்துக்காரங்களைத் தாண்டிப் போறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுதாம்.
ஆபீசே சிரிக்குது... ''பாலியல் புகார் விவகாரம் மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலகத்தையே கலங்கடிச்சுடுச்சு... அலுவலரை கரூருக்கு டிரான்ஸ்பர் செஞ்சிருக்காங்க. அங்க இருக்குற ஒரு ஜூனியர் ஆபீசரோட கூத்தையும் கேளுங்கக்கா.
''அவரு வீட்டுக்கே சரியா போறது இல்லையாம்; அவரோட மனைவி நேரா ஆபீஸ்க்கே வந்து, 'இவருக்கு எத்தனை மணி வரைக்கும் தான் வேலை?'ன்னு எல்லார் முன்னாடியும் விசாரிச்சுட்டுப் போயிருக்காங்க.
''ஆபீஸ்ல எல்லாரும் இதைப் பார்த்துச் சிரிக்கிறாங்க''
''ஹஹஹா... அந்தக்கா செம உஷார்தான் மித்து. அடுத்த வாரம் மத்த மேட்டரை அலசுவோம்''
சித்ரா சொல்ல, மித்ரா தன் ஸ்கூட்டரைக் கிளப்பினாள்.
