இனிமே உங்களுக்கு சொல்லாம ஒரு பாடி கூட வெளிய போகாது, டாக்டர்ர்..!
இனிமே உங்களுக்கு சொல்லாம ஒரு பாடி கூட வெளிய போகாது, டாக்டர்ர்..!
UPDATED : ஜூன் 16, 2026 06:54 AM
ADDED : ஜூன் 15, 2026 11:25 PM

வாலாங்குளம் கரையோரம் வாக்கிங் போகலாம் என்றுதான் கிளம்பினார்கள். டூவீலரை நிறுத்த இடமே கிடைக்காததால், செம்மொழி பூங்காவுக்கு செலுத்தினார் சித்ரா. ''என்னக்கா... டாஸ்மாக் ஆபீசர்களை ஒரே நாள்ல வெவ்வேறு இடங்களுக்கு துாக்கி அடிச்சிட்டாங்களே...''
''மித்து, விஜய் கவர்மென்ட் இந்த விஷயத்ல ரொம்ப நிதானமா மூவ் பண்றதா தெரியுது. நம்ம மாவட்டத்ல 69 கடைகளை மூட சொன்னாங்க, இல்லயா. லிஸ்ட்ல இருந்த பல கடைகள்ல சரக்கை எல்லாம் எடுக்காம அப்டியே வச்சிருந்தாங்க, ஆபீசர்ஸ். என்ன அய்டியான்னா, அரசோட கவனம் வேறு பக்கம் திரும்புனதும், பஸ் ஸ்டாண்ட் பக்கத்து கடைகளை மறுபடி திறக்க பச்சைக்கொடி காட்லாம்னு இருந்தாங்க..''
மித்ரா ஆச்சரியம் காட்டவில்லை. “எவ்வளவோ பாத்துட்டோம்.. இதையும் பாத்துருவோம்னு இருந்தாங்களாக்கா..?” என்றார்.
''அதே. உளவுத்துறை மூலமா கோட்டைக்கு இன்பர்மேஷன் போனது. ஆபீசர்களை அலேக்னு துாக்கிட்டாங்க. அவங்களுக்கு பதிலா, குரூப் 1 ஆபீசர்ச போட்டிருக்காங்க. கமிஷன் வாங்குனாங்க, கட்டிங் வாங்குனாங்கன்னு வில்லங்கத்துல சிக்குனா கலெக்டரா பதவி உயர்வு வர்ற சான்ஸ் ஊத்திக்கும்னு தெரிஞ்சு, அவங்க நேர்மையா இருப்பாங்கன்னு சீயெம் நினைக்கிறாராம். டிரான்ஸ்பர் ஆர்டர் வந்ததும் அந்த கடைகள்ல இருந்து மின்னல் வேகத்ல சரக்குகளை எடுத்துட்டாங்க''
''இன் டரஸ்டிங். நம்ம ஸ்டிராங்மேன் வேலுமணி, இப்ப இந்தியாலயே இல்லைனு சொல்றாங்களே... அது என்ன கதை?''
''பொள்ளாச்சியில துரோகி பட்டம் சுமத்துனதுல அண்ணன் ரொம்ப அப்செட் ஆயிட்டாரு. இதயதெய்வம் மாளிகைய புது மா.செ.கிட்ட ஒப்படச்சுட்டார். உள்ள போனா, எந்த சேர்ல உட்கார்றதுன்னு குழப்பம். அதனால, 2 தொகுதிக்கு ஒரு மாவட்டம்னு பிரிச்சு, தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு தொகுதிகளை எனக்கு குடுங்கனு கேட்டுட்டு இருக்கார். இ.பி.எஸ். இன்னும் பதில் சொல்லல..”
”நாட்ட விட்டு போயிட்டதா..”
''இரு, அந்த மேட்டருக்கு தான் வரேன். மனசு அமைதியா இருந்தாதான் கட்சி வேலை பாக்க முடியும்னு சொல்லி, அவரும், மைத்துனரும் குடும்பத்தோட வெளிநாடு போயிருக்காங்களாம். அங்க ஏற்கனவே பெரிய அளவுல அவரோட கால் டாக்ஸி பிசினஸ் நடக்குது. அதை கவனிச்சிட்டு இருக்கறதா சொல்றாங்க. சட்டசபை கூட்டத்துக்கு வர்றதே டவுட்தானாம்..'' ''அரசியல்ல இதெல்லாம் சகஜமக்கா..” என்று சிரித்த மித்ரா, “சிட்டிக்குள்ள போஸ்டர் ஒட்னா பைன் போடுவோம்னு கார்ப்பரேஷன் புது கமிஷனர் சொல்லிருந்தாரே... ''
''போத்தனுார்ல ஒருத்தர் போஸ்டர் ஒட்றத பாத்துட்டார். 10 ஆயிரம் ரூபாய் பைன் போட சொன்னார். அப்புறம் போஸ்டர் ஒட்ற கம்பெனிக்காரங்கள கூப்ட்டு, மீட்டிங் நடத்தி அட்வைஸ் பண்ணியிருக்கார். அங்க, வி.ஐ.பி.களுக்கு போஸ்டர் ஒட்டியே பெருசா வளந்த ஒருத்தர், கமிஷனருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிச்சிருக்கார். அன்னிக்கு ராத்திரியே, கார்ப்பரேஷன் ஊழியர்கள் போஸ்டர் கிழிச்ச எல்லா இடத்துலயும் மறுபடி ஒட்டிருக்காங்க. யாரும் எந்த ஆக்ஷனும் எடுக்கல..''
“இப்படித்தான் புதுசா வர்ற ஆபீசர்ச திசை திருப்புவாங்களாக்கா..” என அப்பாவி போல கேட்ட மித்ராவுக்கு பதில் சொல்லாமல் காந்திபுரம் பாலத்தின் கீழ் யு-டர்ன் போட்டார் சித்ரா.
”முதல்லயே இங்க வராம வாலாங்குளத்துக்கு ஏன் போனோம்னு கேக்கலியே, நீ?” என்றார்.
“இப்ப கேக்றேன், சொல்லுங்க..”
”வாலாங்குளம் பத்தி தினமலர்ல விரிவான கட்டுரை வந்த ஒரே வாரத்துல ரெண்டு முறை ஆய்வு செஞ்சிருக்கார் மாநகராட்சி கமிஷனர். சுத்திகரிப்பு நிலையம் ஏன் வேலை செய்யலைனு சம்பந்தப்பட்ட பொறியாளர்ட்ட கோபப்பட்டாராம். அந்த பெண் அதிகாரி, 'உங்க கேள்வி நியாயம் தான், சார். ஆனா, இதெல்லாம் ஸ்மார்ட் சிட்டி காலத்தில் செஞ்ச வேலைகள். சுத்திகரிப்பு மையம் டிசைனே தப்பா இருக்கு. இத வச்சு சம்பாதிச்சவங்க எல்லாம் நல்லா இருக்காங்க. எங்க மேல கோபத்த காட்றீங்க..'னு கண் கலங்கிட்டாராம். கமிஷனர் சுதாரிச்சுகிட்டு, 'யாரா இருந்தாலும், தப்பு செஞ்சவங்கள விட மாட்டேன்'னு சொல்லி, பொறியியல் பிரிவுல முழு அறிக்கை கேட்டுருக்கார்.”
”சூப்பர். புது கமிஷனர் பத்தி பாசிடிவ் தகவலா வருது. இது நீடிச்சா கோவைக்கு நல்லது..” என்றபடி, வண்டியை விட்டு இறங்கினார் மித்ரா.
சீனியர் ஹெல்மட்டை கழற்றி ஸ்கூட்டரில் மாட்டி விட்டு வரும் வரை காத்திருந்தவர், ---”தேர்தலுக்கு முன்னாடி இங்க வந்தப்போ, உடன்பிறப்புகள் சுறுசுறுப்பா அங்கேயும் இங்கேயும் போய்ட்டு இருந்தாங்க..” என்றார்.
சித்ரா சிரித்தார். “அந்த சீனெல்லாம் ஓவர், மித்து. என்னதான் எக்ஸ் சீயெம் தினமும் அறிக்கை விட்டு உற்சாகப்படுத்த முயற்சி செஞ்சாலும், நிர்வாகிகளால இன்னும் தோல்வில இருந்து மீள முடியல. மொத்த மாவட்டத்தையும் தலைவரின் காலடியில் சமர்ப்பிப்பேன்னு சபதம் போட்ட செந்தில் பாலாஜியே அடக்கிதான் வாசிக்கிறார். அவரோட பார்முலா சிதைஞ்சு போனதால, மறுபடியும் 2 தொகுதிக்கு ஒரு மா.செ. வீதம் நியமிச்சு கட்சியை பலப்படுத்த போறாங்களாம்” என்றார்.
”மேட்டுப்பாளையம்வீடியோ ஏதோ புதுசா வந்திருக்காமே..?”
”அங்க கவிதா கல்யாண சுந்தரம் தோத்துட்டார் இல்லயா.. அவர் பூத் வாரியா பணம் கொடுத்ததை லிஸ்ட் போட்டு பூத் ஏஜென்ட்ஸ் கிட்ட கையழுத்து வாங்கி வச்சிருந்தார். அதாவது நான் செலவு செஞ்சும் தோத்துட்டேன். தோல்விக்கு நான் பொறுப்பில்லைனு காட்ற முயற்சி. நிர்வாகிகள் கடுப்பாயிட்டாங்க. 'தொகுதில அறிமுகம் இல்ல; மக்கள்ட்ட செல்வாக்கு இல்ல. அப்படி ஆள வேட்பாளரா அறிவிச்சது அறிவாலயம் தவறு; இதுல எங்க மேல பழியா?'னு கொதிக்கிறாங்க. இந்த சூழல்லதான், கவிதா வச்சிருந்த லிஸ்ட் சமூக வலைதளங்கள்ல வைரல் ஆகுது. த.வெ.க. ஆளுங்க அத கிண்டலா ஷேர் பண்றாங்க..”
”அமைச்சர விட மா.செ.க்கு செல்வாக்கு அதிகம்னு காட்டினது திமுக. இப்ப தவெக எம்மெல்லேக்கள் பலரும் மா.செ. பதவி கேட்டு ஆனந்துக்கு பிரஷர் குடுக்றதா கேள்விப்பட்டேனே..?”
“நெசந்தான். கோவை எம்.எல்.ஏ. ஒருத்தர், தனக்கு தான் மா.செ பதவி தரணும்னு சென்னைல உக்காந்து டீலிங் பேசிட்டு இருக்காராம். ஏற்கனவே அவருக்கும் அந்த மா.செ.க்கும் ஒத்துப்போகாம, ஆளுக்கு ஒரு கோஷ்டியா வேலை செய்றாங்களாம். சூலூர் தொண்டர்கள் யாரு பின்னாடி போறதுன்னு குழப்பத்துல இருக்காங்க..”
திடீரென மேம்பாலத்தில் ஆம்புலன்ஸ் ஒலி அதிகமாக கேட்டது. இருவரின் பார்வையும் அங்கு திரும்பியது.
“கவர்மென்ட் ஆஸ்பிடல் நியூஸ், சொல்லட்டுமாக்கா?” என்றார் மித்ரா.
சித்ராவின் பதிலை எதிர்பாராமல் தொடர்ந்தார். “மார்சுவரில இருந்து மருத்துவ ஆய்வுக்காக எடுத்துட்டு போற சடலங்கள் பத்தி துறை தலைவர்ட்ட முறையா தகவல் சொல்ரது இல்லயாம். நிர்வாகத்துக்கும் அவருக்கும் இதனால சிறு சிறு பூசல்கள் இருந்துருக்கு. போன மாசம் அப்படி ஒரு சடலம் அவருக்கு சொல்லாம எடுத்துட்டு போனாங்களாம். திரும்ப கொண்டுவந்தப்ப சடலத்துல சில இடங்கள்ல தையல் போட்டிருந்ததாம். துறை தலைமை காண்டாகி, 'இது கொலை செய்யப்பட்டவர் சடலம்'னு பதிவு செய்ய போறதா அறிவிச்சிருக்கார். எல்லாரு அதிர்ச்சில உறைஞ்சு போயிட்டாங்களாம். இனிமேல் உங்களுக்கு தெரியாம ஒரு பாடி கூட வெளிய போகா துனு சொல்லி சமாதானம் செஞ்சாங்களாம்..”
“கேக்கவே பயமா இருக்கு.. வா, சூப் சாப்பிடுவோம்..” என்று உணவகத்துக்குள் மித்ராவை அழைத்து சென்றார் சித்ரா.
