ADDED : ஜூன் 10, 2026 10:46 PM

- நமது நிருபர் -:
அனைத்து பருவ காலங்களை விட, மழைக்காலம் பலருக்கும் மிகவும் பிடித்தமானது. மழை பெய்வதை பார்ப்பதே தனி அழகாகும். குறிப்பாக, நீர்வீழ்ச்சிகளை பார்ப்பது, மனதுக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கும். மழைக்காலம் வந்துவிட்டால் போதும், நீர் வீழ்ச்சிகள், மலைப்பிரதேசங்களுக்கு பலரும் சுற்றுலா செல்வர்.
கர்நாடகாவின் சிக்கமகளூரு, உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, குடகு, மாண்டியா உட்பட பல்வேறு மாவட்டங்களில், நீர்வீழ்ச்சிகள் உள்ளன. மழை காலத்தில் இங்கு படையெடுக்கும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை, அதிகமாக இருக்கும். இவர்கள் விரும்பி பார்க்கும் நீர்வீழ்ச்சிகளில், மாகோடு நீர்வீழ்ச்சியும் ஒன்றாகும். இது அருகருகில் பாயும், இரட்டை நீர்வீழ்ச்சியாகும்.
கர்ஜனை உத்தர கன்னடா மாவட்டம், எல்லாபுரா தாலுகாவில் மாகோடு நீர்வீழ்ச்சி உள்ளது. பெட்தி ஆற்றில் இருந்து இந்த அழகான நீர் வீழ்ச்சி விழுகிறது. 650 அடி உயரத்தில் இருந்து கீழே பாய்கிறது. ஆக்ரோஷமான கர்ஜனையுடன் கீழே பாய்ந்து, வருவோர் பார்க்க, அற்புதமான காட்சியாக இருக்கும்.
அடர்த்தியான வனப்பகுதியில், பளீர் என்ற வெண்மை நிறத்தில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. நீர் வீழ்ச்சியை காண்பதற்கு வசதியாக, நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
மாகோடு நீர்வீழ்ச்சியின் 'வியூ பாயின்ட்' வரை, வாகன பார்க்கிங் வசதியும் உள்ளது. கோடைக்காலத்தில் இங்கு நீர் வரத்து குறைவாக இருக்கும். மழை பெய்யும் காலத்தில், ஜூலை முதல் டிசம்பர் வரை நீர்வீழ்ச்சியை காண வருவோர் எண்ணிக்கை அதிகம் இருக்கும்.
ஹோம்ஸ்டேக்கள் இயற்கையை ரசிக்க விரும்புவோர், மன அமைதியை தேடுவோருக்கு மாகோடு நீர்வீழ்ச்சி பெஸ்ட் சாய்ஸ். இதை 'மினி நயாகரா' என்றும் அழைக்கின்றனர். இங்கு ஆனந்தமாக பொழுது போக்கலாம்.
நீர்வீழ்ச்சி அருகில் தரமான ஹோட்டல்கள், ஹோம்ஸ்டேக்கள், காட்டேஜ்கள் உள்ளன. ஆனால் இவற்றில் தங்க, அறைகளை முன் பதிவு செய்ய வேண்டும்.
சில நாட்கள் இங்கு தங்கினால், மாகோடு உட்பட சுற்றுப்பகுதிகளில் உள்ள நீர்வீழ்ச்சிகளை காணலாம். வியூ பாயின்டில் நின்று பார்த்தால், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, மலை, அடர்ந்த வனம் என, பசுமையான காட்சிகள் மனதை குஷிபடுத்தும்.
