ADDED : ஏப் 16, 2026 03:54 AM

- நமது நிருபர் -
பூங்கா என்றால் பிடிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. பூங்காவுக்கு சென்று விளையாடுவதை, பெரிதும் விரும்புவர். காலை, மாலையில் நடை பயிற்சி செய்யும் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டிகள் தங்களின் வீட்டில் உள்ள குட்டீஸ்களையும் அழைத்து வருவதுண்டு. பொதுவாக அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், செல்வாக்கு மிக்க புள்ளிகளின் பெயரில், பூங்காக்கள் இருக்கும். ஆனால் கிளிக்காகவே மைசூரில் மிகவும் அபூர்வமான பூங்கா ஒன்ற உள்ளது. இது குட்டீஸ்களுக்கு மிகவும் விருப்பமானது.
இங்கு வந்தால் வீட்டுக்கு செல்ல, மனம் வராது. இது கிளிகள் பூங்காவாகும். இது உருவானதன் பின்னணியில், ஒரு உணர்ச்சி பூர்வமான கதை உள்ளது. அது, மைசூரு நகரின் பெருமைக்குரியது.
மைசூரு நகரின், சரஸ்வதிபுரத்தில் வசிக்கும் லிலி பிரபு என்பவரின் குடும்பத்தினர், கடந்த 1970ல் ஒரு கிளியை வளர்க்க துவங்கினர். இதற்கு, 'கீகீ' என, பெயர் வைத்திருந்தனர். இது வெறும் பறவையாக மட்டுமே இருக்கவில்லை. வீட்டில் ஒரு உறுப்பினராகவே இருந்தது. அனைவருடன் பேசியும், விளையாடியும் அவர்களின் அன்புக்கு பாத்திரமானது. வீட்டில் உள்ள அனைவரும், கிளி மீது அதிகமான அன்பு வைத்திருந்தனர். குடும்பத்தில் பிரிக்க முடியாத அங்கமாக, 29 ஆண்டுகள் வாழ்ந்த கிளி, 1999ல் காலமானது. கிளியின் மறைவு குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருந்தது. அது எப்போதும் தங்கள் கண் முன்னே இருக்க வேண்டும் என்ற விருப்பத்தில், லிலி பிரபு, கிளி வசித்த இடத்திலேயே அதற்கு சிறிய சிலை அமைத்தார். பூங்காவை உருவாக்கினார். அன்று முதல் மக்கள் இந்த இடத்தை, 'கீகீ பார்க்' என, அழைக்க துவங்கினர்,
தற்போது அந்த இடம், கிளிகள் பூங்காவாக மாறியுள்ளது. பூங்காவில் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். அபூர்வமான மரங்கள், பூச்செடிகள் உள்ளன. அமைதியான சூழ்நிலையில் உள்ள பூங்காவில் அமர்ந்து பொழுது போக்குகின்றனர். மனிதர்கள், பறவைகள் இடையிலான பாசப் பிணைப்பின் அடையாளமாக திகழ்கிறது. இங்கு விளையாட வரும் சிறார்களுக்கு, கீகீ பற்றிய கதையை கூறுகின்றனர். பறவைகள் மீதான அன்புக்கு, இப்பூங்கா அடையாள சின்னமாக அமைந்துள்ளது.
செல்வது
எப்படி
மைசூரின் அனைத்து பகுதிகளில் இருந்தும், சரஸ்வதிபுரத்துக்கு அரசு பஸ்கள், வாடகை வாகனங்கள் வசதி உள்ளது. வெளியூர்களில் இருந்து மைசூருக்கு வரும் சுற்றுலா பயணியர், நகர பஸ் நிலையத்தில் இறங்கி, வாடகை ஆட்டோக்களில் கிளி பூங்காவுக்கு செல்லலாம். சிறிது நேரம் இங்கு பொழுது போக்கினால், மனதுக்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் ஏற்படும். குழந்தைகளை அழைத்து சென்றால், மிகவும் மகிழ்வர். பார்வை நேரம்: 6:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை. அருகில் உள்ள தலங்கள்: காரஞ்சி ஏரி, தேவராஜா மார்க்கெட், அக்வேரியம், மைசூரு அரண்மனை.
