ADDED : ஏப் 23, 2026 04:13 AM

- நமது நிருபர் -
கர்நா டகாவின் கடலோர மாவட்டமான உத்தரகன்னடா, ஆன்மிகம், சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனது. அதிலும் இங்குள்ள யானை குகை சுற்றுலா பயணியருக்கு அதிகம் பிடித்த இடமாக அறியப்படுகிறது. இதற்கு காரணம் இந்த குகை 2,700 ஆண்டுகளுக்கு முன்பு உருவானதே. யானா குகை பாறைகள், கரியக்கல் சுண்ணாம்பு பாறைகளால் உருவானது.
ஒரு குகை 394 அடி நீளமாக உள்ளது. இதற்கு பைரேஸ்வர ஷிகாரா என்று பெயர். இந்த குகைக்குள் சிவன் கோவில் உள்ளது. இயற்கையாகவே உருவான சிவலிங்கத்தின் மீது, பாறையின் மேற்பகுதியில் இருந்து தண்ணீர் விழும். இன்னொரு பாறை மோகினி ஷிகாரா. இது 295 அடி உயரம் கொண்டது. அடர்ந்த வனப்பகுதி வழியாக டிரெக்கிங் சென்று, யானா குகைக்கு செல்வதை சுற்றுலா பயணியர் அதிகம் விரும்புகின்றனர்.
இப்படி சிறப்பு பெற்ற யானா பாறைகளுக்கு, புதிய அங்கீகாரம் கிடைத்து உள்ளது. அதாவது இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், யானா பாறைகளை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, புவி பாரம்பரிய தலம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இதற்கான கடிதத்தை இந்திய புவியியல் ஆய்வு நிறுவன தலைமை இயக்குநர் அசித் சாஹா, கர்நாடக அரசின் தலைமை செயலர் ஷாலினிக்கு அனுப்பி வைத்து உள்ளார்.
அந்த கடிதத்தில், 'யானா பாறைகள் போன்ற இயற்கை சொத்துக்கள் ஒரு முறை அழிக்கப்பட்டு விட்டால், மீண்டும் உருவாக்க முடியாது. இதுபோன்ற பாறைகள் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலா பயணியரை ஈர்க்கவும் உதவும்' என்று குறிப்பிட்டு உள்ளார்.
