/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
மனதை மகிழ்விக்கும் சித்ரதுர்கா சுற்றுலா தலங்கள்
/
மனதை மகிழ்விக்கும் சித்ரதுர்கா சுற்றுலா தலங்கள்
ADDED : செப் 04, 2025 03:49 AM

கர்நாடகாவின், சித்ரதுர்கா வரலாற்று பிரசித்தி பெற்ற மாவட்டமாகும். இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. வெளி மாநிலங்கள், வெளிநாடுகளின் சுற்றுலா பயணியரை கை வீசி அழைக்கின்றன.
சித்ரதுர்காவை பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் கட்டிய கோட்டைகள், அரண்மனைகள், கோவில்கள், மணி மண்டபங்கள் உள்ளன. அன்றைய மன்னர்களின் ஆட்சி சிறப்பை விவரிக்கின்றன. ஒரு முறை சித்ரதுர்காவுக்கு வந்தால், சுற்றிலும் உள்ள பல இடங்களை பார்த்துவிட்டு, மன மகிழ்ச்சியுடன் திரும்பலாம்.
சித்ரதுர்கா கோட்டை சித்ரதுர்காவுக்கு சென்றால், கற்கோட்டையை மறக்காதீர்கள். இதனை ஏழு சுற்று கோட்டை என, அழைக்கின்றனர். 35 ரகசிய நுழைவாசல்கள் உள்ள, பாதுகாப்பான கோட்டையாகும். ராஷ்ட்ரகூடர்கள், சாளுக்கியர், ஹொய்சாளர்கள், நாயக்கர்கள் சித்ரதுர்கா கோட்டையை கட்டியதாக, வரலாறு கூறுகிறது.
மிகுந்த கலை நயத்துடன் தென்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகியும், வலுவாக இருப்பது ஆச்சரியமான விஷயமாகும்.
அன்றைய தொழில்நுட்ப வல்லுநர்களின் திறனுக்கு உதாரணமாக அமைந்துள்ளது. எதிரிகள் எளிதில் நுழைய முடியாத அளவுக்கு, உறுதியாக கட்டப்பட்டுள்ளது. இங்கு வீர மங்கை, 'உலக்கை' ஓபவ்வா நினைவிடத்தை காணலாம்.
கோட்டையின் உட்புறம் சம்பிகே சித்தேஸ்வரா, ஹிடிம்பேஸ்வரா, கல்குனேஸ்வரா, கோபால கிருஷ்ணா, ஆஞ்சநேயர் உட்பட, பல்வேறு கோவில்கள் அமைந்துள்ளன. ஹிடும்பேஸ்வரர் கோவிலில் பெரிய எலும்பு துண்டை காணலாம். இந்த எலும்பு துண்டு ஹிடும்பாசுரனின் பல் என, கூறப்படுகிறது.
சித்ரதுர்காவில் பார்க்க வேண்டிய இடங்களில், சந்திரவள்ளி குகைகளும் ஒன்றாகும். இந்த குகைகள் 3,000 ஆண்டு பழமையானவை. ஒரு காலத்தில் சந்திரஹாச மன்னர், இப்பகுதியை ஆண்டதால், சந்திரவள்ளி என்ற பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
ஜோகிமட்டி சரணாலயம் சித்ரதுர்காவின் ஜோகிமட்டி வனவிலங்குகள் சரணாலயமும் பிரசித்தி பெற்றது. வன விலங்கு ஆர்வலர்களுக்கு விருப்பமான இடமாகும்.
இந்த சரணாலயம், சித்ரதுர்கா, ஹிரியூர் மற்றும் ஹொளல்கெரே தாலுகாக்களில் விரிந்துள்ளது. இங்கு சிறுத்தைகள, கரடிகள், யானைகள், மயில்கள், நரிகள், காட்டுப்பூனைகள், மலைப்பாம்புகள், முள்ளம்பன்றி உட்பட, பல விதமான விலங்குகள், பறவைகளை கண்டு ரசிக்கலாம்.
- நமது நிருபர் -