தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ கைகள் இல்லாமல் ஓவியத்தில் சாதிக்கும் கவுஷிக்

 கைகள் இல்லாமல் ஓவியத்தில் சாதிக்கும் கவுஷிக்

 கைகள் இல்லாமல் ஓவியத்தில் சாதிக்கும் கவுஷிக்


ADDED : ஜூன் 20, 2026 10:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 10:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

இரண்டு கைகளும் இல்லாத இளைஞர், காலால் ஓவியம் வரைந்து அசத்துகிறார். இந்திய சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். இவரது வாழ்க்கை மற்றவருக்கு, சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தட்சிண கன்னடா மாவட்டம், பண்ட்வால் தாலுகாவின், கஞ்சிகாரபேட் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் ஆச்சார்யா. இவரது மனைவி ஜலஜாக்ஷி. இத்தம்பதியின் மகன் கவுஷிக் ஆச்சார்யா, 20. இவருக்கு பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லை. ஆரம்பத்தில் தங்கள் மகனுக்கு, கைகள் இல்லை என, பெற்றோர் மனம் வருந்தினர்.

ஆனால் அதற்காக மனம் தளரவில்லை. மகனின் எதிர்காலத்தை நினைத்து, கவலைப்பட்டபடி அமர்ந்திருப்பதை விட, மகனை தைரியமாக வளர்க்க வேண்டும் என, முடிவு செய்தனர். மகனை தன்னம்பிக்கையை ஊட்டி வளர்த்தனர்.

குறிப்பாக, கவுஷிக்கின் தாய் ஜலஜாக்ஷி, மகனை பள்ளியில் சேர்க்கும் முன்பே, அவரது கால் கட்டை விரல்களில் பென்சில் பிடித்து, எழுத்துகள் எழுதுவதை கற்றுக்கொடுத்தார். இந்த பயிற்சியே எதிர்காலத்தில் மகனின் வாழ்க்கையை மாற்றி அமைக்க உதவியது.

மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சேர்க்காமல், சாதாரண பள்ளியிலேயே, மகனை சேர்த்தனர். அனைவரையும் போன்று வாழ வேண்டும், மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற மனோபாவத்தை, சிறு வயதிலேயே மகனுக்குள் விதைத்தனர்.

பெற்றோரின் ஊக்கத்தால், கவுஷிக் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் வளர்ந்தார். ஓவியக்கலை போட்டிகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஓவியக்கலையில் அதிக ஆர்வம் கொண்ட கவுஷிக், தன் அண்ணன், உறவினர்கள் ஓவியம் வரைவதை கவனித்து, வீட்டிலேயே தன் காலால் ஓவியம் வரைய துவங்கினார்.

யாருடைய பயிற்சியும் இல்லாமல், தானாகவே ஓவியம் வரைந்தார். எதையும் கண்களால் ஒரு முறை கவனித்தால், அதை அப்படியே வரைவார்.

பென்சில் ஸ்கெட்ச், க்ளே மாடலிங் உட்பட, பல விதமான ஓவியங்கள் வரைவதில் திறன் பெற்றவர். விடுமுறை நாட்களில் நேரத்தை வீணாக்காமல், ஓவிய பயிற்சி பெற்றார். இது, இவரது திறமையை மேலும் வளர்த்தது. ஆரம்பத்தில் பொழுதுபோக்காக இருந்த இவரது ஓவியக்கலை, நாளடைவில் சமூக சேவையாக மாறியது.

பல நேரங்களில் நபர்களின் உருவப்படங்களை வரைந்து, அன்பளிப்பாக வழங்கினார். தன் கலை மூலமாக மற்றவரை சந்தோஷப்படுத்துவது, இவரது குறிக்கோள்.

இவரது திறமையை கண்டு பலரும், இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சிக்கும்படி, ஆலோசனை கூறினர். இந்த ஆலோசனையை சவாலாக ஏற்றுக்கொண்ட கவுஷிக், சாதனை செய்ய உறுதி பூண்டார்.

மஞ்சள் பொடி, கோந்து பயன்படுத்தி, காலால் விவேகானந்தரின் ஓவியத்தை மிகவும் வேகமாக வரைய பயிற்சி பெற துவங்கினார். இரண்டு முறை தோற்று, மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றார்.

மூன்று நிமிடம், 40 நொடிகளில், ஓவியத்தை வரைந்து முடித்து, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்த சாதனைக்கு ஆள்வாஸ் கல்லுாரி நிர்வாகம், பேராசிரியர்கள், குடும்பத்தினர் அளித்த ஒத்துழைப்பே காரணம் என, கவுஷிக் கூறுகிறார்.

கவுஷிக் மூடபிதரேவின், ஆள்வாஸ் கல்லுாரியில், முதலாம் ஆண்டு எம்.எஸ்.டபிள்யூ., படிக்கிறார். கல்வியுடன், ஓவியக்கலையிலும் ஆர்வம் காட்டுகிறார். காலால் வரைந்த ஓவியங்கள், சமூக வலைதளங்களில் பரவியுள்ளன. பலரும் பாராட்டுகின்றனர்.

ஓவியத்தில் மட்டுமின்றி, நடனத்திலும் அவருக்கு விருப்பம் உள்ளது. வரும் நாட்களில் ரியாலிட்டி ஷோக்களில் தன் திறமையை காட்ட வேண்டும் என்பது, அவரது குறிக்கோள். அவரது வாழ்க்கை மாற்றுத்திறனாளி களுக்கு முன்னுதாரணம்.

கவுஷிக் கூறியதாவது:

என் வாழ்க்கையில், என் தாயின் பங்களிப்பை என்றென்றும் மறக்க முடியாது. அவர் எனக்கு காலால் எழுதுவதை கற்று தராவிட்டால், இப்போது இத்தகைய சாதனையை, என்னால் செய்திருக்க முடியாது.

எனக்கு கைகள் இல்லை என்பதை, நான் குறையாகவே நினைக்கவில்லை. என் கலைத்திறன் மூலம், மக்களை மகிழ்விக்க வேண்டும். மேலும் பல சாதனைகள் செய்ய வேண்டும் என்பதே, என் குறிக்கோளாகும்.

சாதனை செய்ய உடல் அல்ல, மனதே முக்கியம். ஊனம் என்பது உடலுக்குத் தானே தவிர மனதுக்கு அல்ல. இன்று இத்தகைய சாதனை செய்துள்ளேன், விருதுகள், சான்றிதழ்கள் பெற்றேன் என்றால், அதற்கு என் பெற்றோரின் ஆதரவே காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us