ADDED : மே 03, 2026 11:25 PM

- நமது நிருபர் -
ஹூப்பள்ளியின், கே.எம்.சி.ஆர்.ஐ., மருத்துவமனையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், திறக்கப்பட்ட தாய்ப்பால் வங்கிக்கு, பெண்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குழந்தை பிரசவித்த பெண்கள், தாமாக முன் வந்து, தாய்ப்பால் தானம் செய்கின்றனர். பல பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றி உள்ளனர்.
பச்சிளம் குழந்தைகளுக்கு, தாய்ப்பால் இன்றியமையாதது; ஆரோக்கியத்தை அளிக்கிறது. ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றுவதில் முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், பிறக்கும் போதே தாயை பறிகொடுத்த குழந்தை, குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பது இல்லை.
சில நேரங்களில், குழந்தை பிரசவித்த பின், தாய் நோயால் பாதிக்கப்பட்டால் தாய்ப்பால் கொடுக்க முடியாது. இத்தகைய குழந்தைகளின் நலனுக்காக, சில அரசு மருத்துவமனைகளில், தாய்ப்பால் வங்கி திறக்கப்பட்டுள்ளது.
பெங்களூரின் வாணி விலாஸ் உட்பட, சில மருத்துவமனைகளில் இந்த வசதி உள்ளது. குழந்தை பிரசவித்த பெண்கள், தங்களின் குழந்தை குடித்தது போக, மிச்சமான தாய்ப்பாலை மற்ற குழந்தைகளுக்கு தானம் செய்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஹூப்பள்ளியின் கே.எம்.சி.ஆர்., மருத்துவமனையில், தாய்ப்பால் வங்கி துவக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் 7,147 பெண்கள் 1,530 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளனர்.
இது, 2,599 பச்சிளம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றியது. பெண்களின் தியாக உணர்வுக்கு, இது சிறந்த எடுத்துக்காட்டு. சுயநலமே முக்கியமான இந்த காலத்தில், தாங்களாக முன் வந்து தாய்ப்பால் தானம் செய்யும் பெண்கள் வணக்கத்துக்கு உரியவர்கள்.
கே.எம்.சி.ஆர்.ஐ., மருத்துவமனை இயக்குநர் ஈஸ்வர ஹொசமனி கூறியதாவது:
தாய்ப்பால் அமிர்தத்துக்கு சமமானது. பிறந்த குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதில், முக்கிய பங்கு வகிக்கிறது. சில நேரங்களில், குழந்தை பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்காது. தாயை இழந்த குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்காது.
இத்தகைய குழந்தைகளுக்கு, தாய்ப்பால் வங்கி வரப்பிரசாதமாகும். குழந்தைகளின் நலனில் எங்கள் மருத்துவமனை, அதிக அக்கறை காட்டுகிறது. குழந்தை பெற்ற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பலரும் ஆர்வமாக முன் வந்து, தாய்ப்பால் தானம் செய்கின்றனர். இவர்களிடம் தாய்ப்பால் சேகரித்த பின், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பேக்டீரியாக்களை நீக்கி, பிரிட்ஜில் வைத்து பாதுகாக்கப்படும். தேவையான குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
