ADDED : மே 11, 2026 02:41 AM

-நமது நிருபர் -:
தாவணகெரே ஹரிஹர் தாலுகாவில், ஹிரேஹலிவன் கிராமத்தை சேர்ந்தவர்கள் சம்பத் குமார் - ரேகா தம்பதி. ஏழ்மையான விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் மகள்களான இரட்டை சகோதரிகளான ஹர்ஷிதா, - அர்பிதா, 17. இருவரும் பார்ப்பதற்கும் ஒரே மாதிரியாக இருப்பர். அதே போல, அவர்கள் செய்யும் செயல்களும் ஒரே மாதிரியாக இருக்கும்.
படிப்பு, விளையாட்டிலும் இருவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் சமீபத்தில் நடந்த பி.யு., பொதுத்தேர்வை எழுதினர். இதில், ஹர்ஷிதா, 513 மதிப்பெண் பெற்றார். அர்பிதா, 512 மதிப்பெண் பெற்றார்.இருவரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து அசத்தினர். இருவரும் ஒரே மாதிரியாக, பொதுத்தேர்வில், 85 சதவீதம் பெற்று சாதித்தனர். இது, அவரது பெற்றோர், ஆசிரியர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஹர்ஷிதா விமான ஓட்டியாகவும், அர்பிதா செயற்கை நுண்ணறிவு ரோபோட்டிக்ஸ் நிபுணராக மாறுவதற்கு திட்டமிட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் டியூஷன் போகாமல் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்தனர்.
இது குறித்து, இரட்டை சகோதரிகள் கூறியதாவது:
நாங்கள் இருவரும் அரசு கல்லுாரியில் படித்தோம். ஏழை விவசாயத்தை குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் இருவரும் ஒரே மதிப்பெண்ணை பெறுவோம் என எதிர்பார்க்கவில்லை. தேர்வு முடிவுகளை பார்த்து ஆச்சரியம் அடைந்தோம்.
எதிர்காலத்தில் படித்து பெரிய இடத்திற்கு சென்று, எங்கள் கிராமத்திற்கு நன்மை செய்வோம். இதுவே, எங்களது லட்சியம். இதில், சமரசம் செய்ய மாட்டோம்.
அனைத்து மாணவர்களும் மன உறுதியுடன் தேர்வை எழுத வேண்டும். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் முயற்சிக்கவும். கல்வியே சிறந்த ஆயுதம். அதை அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
