பாரம்பரிய கட்டடக்கலையை இளம் தலைமுறையினருக்கு கற்று தரும் டாக்டர் சம்பா
பாரம்பரிய கட்டடக்கலையை இளம் தலைமுறையினருக்கு கற்று தரும் டாக்டர் சம்பா
ADDED : மே 17, 2026 11:21 PM

- நமது நிருபர் -:
பாரம்பரியத்தை பாதுகாக்கவும், இயற்கையோடு இணைந்த நகரங்களை வடிவமைப்பது குறித்தும், இளம் கட்டட கலைஞர்களுக்கு டாக்டர் சம்பா கற்றுத்தருகிறார்.
மைசூரை சேர்ந்தவர் டாக்டர் சம்பா. பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா பொறியியல் கல்லுாரியில் பட்டம் பெற்றவர். டில்லி மற்றும் மைசூரு பல்கலைக்கழகத்தில் 'சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல், நகர்ப்புற வடிவமைப்பு' துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.
கட்டட கலையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், தற்போது மைசூரு கட்டடகலை பள்ளியின் டீனாகவும், இயக்குநராகவும் உள்ளார்.
இங்கு பயிலும் மாணவ - மாணவியருக்கு, பாரம்பரியத்தை பாதுகாக்கவும், இயற்கையோடு இணைந்த நகரங்களை வடிவமைப்பது குறித்தும் பாடம் எடுக்கிறார்.
டாக்டர் சம்பா கூறியதாவது:
இயற்கையோடு பின்னி பிணைந்துள்ள கிராமப்புற சூழலில் கட்டப்பட்ட பாரம் பரிய முற்ற வீடுகளை பார்த்து, கட்டட கலை மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.
மன்னர்களின் தொலைநோக்கு பார்வையால் மைசூரு நகரம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது, மைசூரு நகரின் பாரம்பரியம், கட்டட கலையை வேறு கோணத்தில் என்னை பார்க்க வைத்தது. இதுவே, கட்டட வடிவமைப்பு மற்றும் பாரம்பரிய ஆய்வுகள் செய்ய, கட்டட படிப்பை தேர்ந்தெடுக்க என்னை துாண்டியது.
மைசூரு நகரில் அக்ரஹாரங்கள் முதல் கடிகார கோபுரங்கள், நுழைவு வாயில்கள் வரை, பெயர் பலகைகள் இல்லாமலேயே அடையாளம் காணக்கூடிய அளவுக்கு இந்நகரம் தனித்துவமாக அமைந்து உள்ளது. நம் பாரம்பரியத்தின் மீது நாம் பெருமிதம் கொண்டாலும், அதை பாதுகாப்பது நமது பொறுப்பு என்பதை உணர வேண்டும்.
பாரம்பரிய கட்டடங்கள் சிதைந்து வருவது குறித்து பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு மட்டுமே வருகிறது. அதனை பாதுகாப்பது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இத்தகைய கட்டடங்களை பாதுகாக்க அரசு, வல்லுநர்கள், சமூகத்தினரின் ஒத்துழைப்பு அவசியம்.
என்னை பொறுத்த வரை பாரம்பரியம் என்பது கட்டடங்களையும் தாண்டியது.
அது கலாசாரம், கைவினை, மரபுகள், வாழ்க்கை முறைகளை உள்ளடக்கியது. மைசூரில் கட்டட கலை என்பது நகர்ப்புற அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது.
இங்கு படிக்க வரும் மாணவர்களிடம், 'பெரும்பாலும் சைக்கிளை பயன்படுத்துங்கள். அவ்வாறு பயணிக்கும் போது நகரின் திட்டமிடல், கைவினைத்திறன் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும்' என்று கூறி வருகிறேன்.
என் தொழில் வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில், பெங்களூரு, கோவாவில் உள்ள கட்டட கலைஞர்களுடன் பணிபுரிந்தேன்.
அங்கு, 'வெறும் கட்டடம் மட்டும் கட்டுகிறோம் என்று எண்ணாமல், நகர்ப்புற சூழலின் ஒரு பகுதியாக பார்க்க வேண்டும்' என்பதை கற்றுக் கொண்டேன். அந்த அனுபவத்தால் தனியாக நிறுவனம் துவக்கி, தமிழகம், கேரளா முழுதும் பணிகள் செய்ய உதவின.
இவ்வாறு அவர் கூறினார்.
18_Article_0001, 18_Article_0002
சம்பா. (அடுத்த படம்) கட்டட வடிவமைப்பு தொடர்பாக மாணவ - மாணவியருடன் கலந்துரையாடிய சம்பா.
