சமூக வலைதளங்களை பயன்படுத்த குறைந்தபட்ச வயது நிர்ணயம்: யுஏஇ புதுக் கட்டுப்பாடு
சமூக வலைதளங்களை பயன்படுத்த குறைந்தபட்ச வயது நிர்ணயம்: யுஏஇ புதுக் கட்டுப்பாடு
ADDED : ஜூன் 18, 2026 05:39 PM

துபாய்: ஐக்கிய அரபு எமீரேட்சில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதாக 15 நிர்ணயம் செய்து ஐக்கிய அரபு எமீரேட்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.
சமூக வலைதளங்கள் வாயிலாக ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க ஆஸ்திரேலியா, மலேஷியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இன்னும் பல நாடுகள் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்க பரிசீலனை செய்து வருகின்றன.
இதனிடையே அரபு நாடுகளில் முதலாவதாக ஐக்கிய அரபு எமீரேட்ஸ், சமூக வலைதளங்களை பயன்படுத்த குறைந்தபட்ச வயதாக 15 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2024 ம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், குழந்தைகள் தினமும் 3 மணி நேரம் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமீரேட்ஸ் கொண்டு வந்துள்ள சட்டத்தின்படி, 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களில் புதிதாக கணக்கு துவக்கவும் முடியாது. ஏற்கனவே இருக்கும் கணக்கை பயன்படுத்தவும் முடியாது. வயது வாரியாக தகவல்கள் காட்டப்பட வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களுடன் கலந்துரையாட கட்டுப்பாடு, மொபைல்போன் திரைநேரம், மற்றும் ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்ய பெற்றோர் கண்காணிப்பு உள்ளிட்டவை சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இதற்கான சட்டத்திற்கு ஐக்கிய அரபு எமீரேட்ஸ் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. புதிய விதிமுறைகளை பின்பற்ற ஏதுவாக நடவடிக்கை எடுக்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஓராண்டு காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
