வர்த்தக பிரச்னைகளுக்கு தீர்வு: சீன அதிபருடன் டிரம்ப் பேச்சு
வர்த்தக பிரச்னைகளுக்கு தீர்வு: சீன அதிபருடன் டிரம்ப் பேச்சு
ADDED : செப் 19, 2025 10:46 PM

வாஷிங்டன் : வர்த்தக பிரச்னைகளுக்கான தீர்வு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் தொலைபேசியில் விவாதித்தனர்.
சீனாவின், 'பைட்டான்ஸ்' என்ற நிறுவனத்தின், 'டிக்டாக்' செயலியை, கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இசை, நடன வீடியோக்களை போடும் இந்த தளத்தின் பயனர்களின் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.
இந்த தகவல்களை சீன அரசு பயன்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக, டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க வர்த்தகத்தை விற்பனை செய்யும்படி, 'பைட்டான்ஸ்' நிறுவனத்துக்கு அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வந்தார். இல்லையெனில் டிசம்பரில் தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க - சீன அதிபர்கள் ஜூன் மாதத்திற்கு பின் மீண்டும் தொலைபேசியில் பேச்சு நடத்தினர். வர்த்தக பிரச்னை, அமெரிக்காவில் டிக் டாக்கை தொடர அனுமதிப்பதற்கான ஒப்பந்தம், சீன சந்தையை அமெரிக்க நிறுவனங்களுக்கு திறப்பது ஆகியவை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
அக்டோபர் 30 - நவம்பர் 1 வரை தென்கொரியாவில் ஆசிய --பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடக்கிறது. அங்கு அதிபர்கள் டிரம்ப் மற்றும் ஜின்பிங் நேரில் சந்திக்க உள்ளனர். அதற்கான முன் தயாரிப்பாக இந்த தொலைபேசி உரையாடல் பார்க்கப்படுகிறது.