sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

தலையங்கம்

/

நேபாளத்தில் நிலைமை சீராக சீர்திருத்தங்கள் அவசியமாகும்!

/

நேபாளத்தில் நிலைமை சீராக சீர்திருத்தங்கள் அவசியமாகும்!

நேபாளத்தில் நிலைமை சீராக சீர்திருத்தங்கள் அவசியமாகும்!

நேபாளத்தில் நிலைமை சீராக சீர்திருத்தங்கள் அவசியமாகும்!

2


PUBLISHED ON : செப் 15, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 15, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் அண்டை நாடான நேபாளத்தில், கடந்த 4ம் தேதி, 26 சமூக வலைதளங் களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸாப் போன்ற பிரபலமான சமூக வலைதளங்கள் இவற்றில் அடக்கம். இதையடுத்து, தலைநகர் காத்மாண்டுவில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் குவிந்து போராட்டங்களை நடத்தினர்.

அப்போது, இளைஞர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 51 பேர் உயிரிழந்தனர்; 1,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போராட்டத்தின் போது, வன்முறை நிகழ்ந்ததுடன், பொதுச் சொத்துக்களுக்கு தீ வைப்பு, சூறையாடல் உள்ளிட்ட காட்சிகளும் அரங்கேறின. பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி, தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, நாட்டின் இடைக்கால பிரதமராக பதவியேற்றார். நேபாள பார்லிமென்ட் கலைக்கப்பட்டதுடன், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது.

நேபாளத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் போது அரங்கேறிய காட்சிகள், வங்கதேச நாட்டில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தையும், 2022ல் இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தையும் நினைவூட்டின.

நேபாள நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், அதற்கேற்ற வகையில் வேலைவாய்ப்புகள் இல்லை. இளைஞர்கள் வேலை தேடி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு செல்லும் நிலைமையே உள்ளது. அதுமட்டுமின்றி, நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்தபின், எந்த ஒரு அரசும் முழுமையாக ஐந்தாண்டுகள் பதவியில் இருந்தது இல்லை.

நேபாளத்தில் ஊழல் மற்றும் வேலை இல்லா திண்டாட்டத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது, அரசியல் நிலையற்ற தன்மை தான். இங்கு, 2008 முதல், 16 பேர் பிரதமராக பதவியேற்றுள்ளனர். அரசியல்வாதிகளுக்குள் ஏற்பட்ட போட்டியால் அடிக்கடி ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும், அரசியல் உள்குத்து வேலைகள் தொடர்ந்ததும், மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

மேலும், நேபாளத்தை பொறுத்தவரை, பொழுதுபோக்கு அம்சங்களை விட சமூக ஊடகங்களுக்கே மக்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அவற்றின் வாயிலாக, நாட்டு நடப்புகளை அறிந்து கொள்வதுடன், அவர்களின் அன்றாட வாழ்விலும், அவை முக்கிய பங்காற்றி வருகின்றன.

அத்துடன், அரசியல்வாதிகள் அவர்களின் உறவினர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்களின் வாரிசுகள் தங்களின் ஆடம்பர வாழ்க்கையை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் ஊழல்கள் குறித்த வீடியோக்களும், அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரவி வந்தன. அவை, நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் தெளிவுபடுத்தி வந்தன. இதனால், இளைஞர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இவற்றுக்கு எல்லாம் அரசியல் ரீதியாக தீர்வு காண முற்படாமல், நாட்டின் பிரதமராக இருந்த சர்மா ஒலி, சமூக ஊடகங்களுக்கு தடை விதித்து தீர்வு காண முற்பட்டதால், பிரச்னை வெடித்து விபரீதமானது. இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள், வறுமையின் பிடியில் சிக்கி, உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டு வரும் நிலையில், ஆட்சியில் இருந்தவர்களும், அவர்களின் உறவினர்களும் செல்வ செழிப்பில் திளைத்தது இளைஞர்களை ஆத்திரம் அடையச் செய்தது. இவை எல்லாம், போராட்டம் நடக்க முக்கிய காரணங்கள்.

எனவே, தற்போது பதவியேற்றுள்ள இடைக்கால பிரதமரும், அவரின் தலைமையிலான அரசும், பார்லிமென்ட் தேர்தல் நடத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில், ராணுவத்தின் உதவியுடன் சட்டம் - ஒழுங்கை சீர்செய்யவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஊழலை தடுக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நேபாளத்தில் நிலைமை சீரடைய, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளும் உதவ வேண்டும்.






      Dinamalar
      Follow us