இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தல்
இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தல்
ADDED : செப் 12, 2025 07:35 AM

தோஹா: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மேற்காசிய நாடான கத்தார் மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலை தொடர்ந்து, ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நேற்று அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் அந்த நாட்டின் அமீர், ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானியை ஷெபாஸ் ஷெரீப் சந்தித்து பேசினார். இஸ்ரேலின் தாக்குதல், பிராந்திய அமைதி மற்றும் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
கத்தார் அமீருடன் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இஸ்ரேல், வளைகுடா நாடுகளில் நடத்தும் கொடூரமான தாக்குதலை நிறுத்த வேண்டும். இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொள்ள, இஸ்லாமிய நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
பாகிஸ்தான் அரசும், மக்களும் கத்தார் மீதான இந்த தாக்குதலால் வருத்த மடைந்துள்ளனர். இது, சர்வதேச சட்ட மீறல். கத்தாரின் வேண்டுகோளின்படி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பாக அவசர கூட்டம் ஏற்பாடு செய்ய பாகிஸ்தான் கோரியுள்ளது.
வரும் 15-ல் கத்தார் நடத்தும் அரபு -இஸ்லாமிய உச்சி மாநாட்டை வரவேற்கிறோம். இதை இணைந்து நடத்தவும், ஆதரிக்கவும் பாகிஸ்தான் தயாராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.