UPDATED : செப் 16, 2025 06:58 AM
ADDED : செப் 16, 2025 06:06 AM

தோஹா: இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாகவும், எதிர் காலத்தில் இது போன்ற தாக்குதலை தடுக்க வழிமுறைகளை கண்டறியவும், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டை கத்தார் நடத்துகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் இ டையேயான போர் இரண்டு ஆண்டுகளாக நடக்கிறது-. போர் நிறுத்த முயற்சியில், முக்கிய மத்தியஸ்தராக கத்தார் உள்ளது. கடந்த வாரம் கத்தாரின் தோஹாவில், ஹமாஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் நடத்தியதில், 5 ஹமாஸ் தலைவர்களும், கத்தார் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டனர். இதற்கு கத்தார் மற்றும் பிற நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி கூறுகையில், “சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இது அரசு பயங்கரவாதம். போர் நிறுத்தம் குறித்து கத்தார் பேச்சு நடத்திய நேரத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதல், மத்தியஸ்தம் கொள்கை மீதான தாக்குதல்,” என்றார்.
இதற்கிடையே, பயங்கரவாதிகளுக்கு கத்தார் அடைக்கலம் கொடுத்து வருவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாகவும், எதிர் காலத்தில் இது போன்ற தாக்குதலை தடுக்க வழிமுறைகளை கண்டறியவும், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்த கத்தார் அழைப்பு விடுத்துள்ளது.
கத்தார் மீதான தாக்குதல் குறித்து அவசர விவாதத்தை இன்று நடத்தப் போவதாக ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில் தெரிவித்துள்ளது.