மேற்கத்திய நாடுகளின் வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது: வடகொரிய அதிபர் அறிவிப்பு
மேற்கத்திய நாடுகளின் வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது: வடகொரிய அதிபர் அறிவிப்பு
ADDED : செப் 16, 2025 11:26 AM

பியாங்யாங்; மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் சில ஆங்கில வார்த்தைகளை தங்கள் நாட்டினர் பயன்படுத்தக்கூடாது என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டு உள்ளார்.
உலக நாடுகள் மத்தியில் புதிது, புதியதாய் கட்டுப்பாடுகளை விதிப்பதில் வட கொரியா தனி ரகம். மிகவும் விசித்திரமான நாடு என்று பெயர் பெற்ற இங்கு, வெளிநாடுகளின் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கக் கூடாது, மேற்கத்திய ஆடைகளை அணியக்கூடாது, ஆண்கள் எப்படி சிகையலங்காரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
அதில் லேட்டஸ்ட்டாக மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் சில ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என்று சுற்றுலா தலங்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, ஹாம்பர்கர் (hamburger), ஐஸ்க்ரீம் (ice cream), கரோக்கி (karoke) உள்ளிட் ஆங்கில சொற்களை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
சொற்கள் பயன்பாட்டின் போது மேற்கத்திய நாடுகள் மற்றும் தென் கொரியாவின் தாக்கத்தை தவிர்த்த, அதற்கு இணையான அரசு அங்கீகரித்த சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
வட கொரிய அதிபர் உத்தரவை அடுத்து, அந்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தல வழிகாட்டிகளுக்கு எந்த சொற்களஞ்சியத்தை பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சி வகுப்புகளும் தொடங்கி இருக்கின்றன. இந்த வகுப்புகள் 3 மாதங்கள் வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலா தல வழிகாட்டிகளுக்கு குறிப்பிட்ட அல்லது தடை விதிக்கப்பட்டு உள்ள ஆங்கில வார்த்தைகளுக்கு பதில் வேறு என்ன வார்த்தைகளை பயன்படுத்தி பேச வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதிலும், ஐஸ்கிரிம் என்ற வார்த்தைக்கு பதில் எஸ்கிமோ(Eskimo) என்ற வார்த்தையை பிரயோகப்படுத்த வேண்டும் என்றும், ஹாம்பர்கர் என்ற சொல்லுக்கு பதில் இரண்டடுக்கு இறைச்சி துண்டு, துண்டாக வெட்டப்பட்ட ரொட்டி என்று பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.