இந்தியா நெருங்கிய கூட்டாளி; வரி விதித்தது குறித்து ஐநா சபையில் அமெரிக்க அமைச்சர் பேச்சு
இந்தியா நெருங்கிய கூட்டாளி; வரி விதித்தது குறித்து ஐநா சபையில் அமெரிக்க அமைச்சர் பேச்சு
ADDED : செப் 24, 2025 09:13 AM

நியூயார்க்: ''இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் காரணத்தினால் தான் அதிபர் டிரம்ப் கூடுதல் வரி விதித்தார்,'' என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
உக்ரைன் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் அமைச்சர்கள் கூட்டத்தில் மார்கோ ரூபியோ பேசியதாவது: அதிபர் டிரம்ப் உலக அமைதியை மீட்டெடுக்க முக்கிய கவனம் செலுத்தினார். இதுவே அவரது முதன்மையான நோக்கமாக இருந்தது. பல இடங்களில் அது பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் டிரம்ப் முக்கிய பங்கு வகித்தார்.
தாய்லாந்து மற்றும் கம்போடியா, காங்கோ மற்றும் ருவாண்டா, அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா உள்ளிட்ட பல மோதல்களைத் தீர்ப்பதில் டிரம்ப் முக்கியமான பங்கை வகித்து இருக்கிறார்.
உக்ரைனில் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் மிகப்பெரிய சவால் நீடிக்கிறது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு அதிபர் டிரம்ப் அயராது உழைத்துள்ளார்.இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் காரணத்தினால் தான் அதிபர் டிரம்ப் கூடுதல் வரி விதித்தார்.
ஐரோப்பாவில் இன்னும் ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் உள்ளன. பாதுகாப்பு உத்தரவாதங்களில் நாங்கள் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளோம். இந்த மோதல் முடிந்த பிறகு உக்ரைனின் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு உத்தரவாதங்களில் பணியாற்ற நாங்கள் ஒப்புக்கொண்டோம். போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக நடக்கும் பேச்சுவார்த்தைகள் மிகவும் அவசியம். இவ்வாறு மார்கோ ரூபியோ பேசினார்.