குளோபல் செஸ்: இந்தியாவின் பிரனவ் வெங்கடேஷ் சாம்பியன்
குளோபல் செஸ்: இந்தியாவின் பிரனவ் வெங்கடேஷ் சாம்பியன்
ADDED : செப் 03, 2025 12:23 AM

புஜைரா: எமிரேட்சில் நடந்த குளோபல் செஸ் தொடரில் இந்தியாவின் பிரனவ் வெங்கடேஷ் சாம்பியன் ஆனார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் புஜைரா குளோபல் செஸ் தொடர் நடந்தது. 70 நாடுகளின் 530 நட்சத்திரங்கள் பங்கேற்றனர். சூப்பர் ஸ்டார்ஸ் பிரிவில் இந்தியாவின் பிரனவ், பிரனேஷ், நிஹால் சரின் உட்பட 44 பேர் களமிறங்கினர்.
இதில், தமிழகத்தை சேர்ந்த பிரனவ், கடந்த ஆண்டு (2024) நடந்த சென்னை செஸ் தொடரில் சாலஞ்சர் பிரிவில் கோப்பை வென்றிருந்தார். இம்முறை மாஸ்டர்ஸ் பிரிவில் பிரனவ் வெங்கடேஷ், 9வது இடம் பெற்றார்.
இருப்பினும், ஜூனியர் உலக சாம்பியன் ஆன 18 வயது பிரனவ், குளோபல் தொடரில் துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டார். 9வது, கடைசி சுற்றில் ஸ்பெயினின் ஆலன் பிஷோட்சை சந்தித்தார். இதில் வென்றால் சாம்பியன் பட்டம் உறுதி என்ற நிலையில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரனவ்.
போட்டியின் 54 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து 9 சுற்றில் ஒன்றில் கூட தோற்காத பிரனவ், 7.0 புள்ளியுடன் (5 வெற்றி, 4 'டிரா') முதலிடம் பிடித்து கோப்பை வென்றார். இவருக்கு ரூ. 20.27 லட்சம் பரிசு கிடைத்தது.
அமெரிக்காவின் பிரண்டன் ஜாக்கப்சன் (6.0), மெக்சிகோவின் மார்டினஸ் (6.0) அடுத்த இரு இடம் பெற்றனர். மற்ற இந்திய வீரர்கள் நிஹால் சரின் 7 (5.5), ஆதித்யா 10 (5.5), பிரனேஷ் 13 (5.0) மெடோன்கா 20 (4.5), நாராயணன் 26 (4.5), அபிமன்யு 32வது (4.0) இடம் பிடித்தனர்.