பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டு சிறை!
பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டு சிறை!
ADDED : செப் 25, 2025 05:46 PM

பாரீஸ்: சட்ட விதிகளுக்கு புறம்பாக, தேர்தல் நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு, 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
ஐரோப்பிய நாடான பிரான்ஸின் அதிபராக 2007 முதல் 2012 வரை இருந்தவர் நிகோலஸ் சர்கோஸி, 70. இவர், 2007 தேர்தல் பிரசாரத்திற்கு அப்போதைய லிபியா அதிபர் கடாபியிடமிருந்து நிதி பெற்றதாகவும், அதற்காக வேறு சிலருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாகவுமு் குற்றம் சாட்டப்பட்டார்.
மேற்கத்திய நாடுகளுடன் லிபியாவுக்கு நல்லுறவு ஏற்படுத்த உதவி செய்வதாக கூறி, கடாபியிடம் இந்த நிதி பெற்றதாக, சர்கோஸி மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும், அரசியல் நோக்கம் கொண்டவை என்று சர்கோஸி மறுத்தார்.
ஆனால், கடாபியிடம் சர்கோஸி தரப்பினர் பணம் பெற்றதை, கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் உறுதி செய்தார். இது தொடர்பான வழக்கு பாரீஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விசாரித்த நீதிபதி, முன்னாள் அதிபர் சர்கோஸி மீதான சதித்திட்ட குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்று கூறி, அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
முதல் முன்னாள் அதிபர்
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஒருவர், இத்தகைய குற்றச்சாட்டில் சிறை தண்டனைக்கு ஆளாக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்வதாக இருந்தாலும், சர்கோஸி சிறையில் இருந்து கொண்டு தான் அப்பீல் செய்ய முடியும் என்று நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தண்டனை விவரத்தை அறிந்ததும், அங்கிருந்த முன்னாள் அதிபர் சர்கோஸி கொந்தளித்து பேட்டி அளித்தார். ''இன்று நடந்திருப்பது, சட்டத்தின் மிக மோசமான ஆட்சியை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. அவர்கள் நான் சிறையில் தான் படுத்துறங்க வேண்டும் என்று நினைத்தால், நான் அதற்கு தயார்,'' என்றார், சர்கோஸி.