பிரிட்டன் பார்லி.,யை கலைக்க சொன்ன எலான் மஸ்க் பேச்சுக்கு கண்டனம்
பிரிட்டன் பார்லி.,யை கலைக்க சொன்ன எலான் மஸ்க் பேச்சுக்கு கண்டனம்
ADDED : செப் 16, 2025 06:41 AM

லண்டன்: 'பிரிட்டன் பார்லிமென்டை கலைக்க வேண்டும்' என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு, அந்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிபோவதாகவும், அவர்களை திருப்பி அனுப்பும் படியும் வலியுறுத்தி, வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில், 'யுனைட் தி கிங்டம்' என்ற பெயரில் லண்டனில் பேரணி நடந்தது. இதில், 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இதற்கு போட்டியாக, 'பாசிசத்துக்கு எதிரான அணிவகுப்பு' என்ற பெயரில், 'ஸ்டாண்ட் அப் டு ரேசிசம்' என்ற குழு போராட்டம் நடத்தியது. இதில், 5,000 பேர் பங்கேற்றனர்.
இரு தரப்பும் மோதலில் ஈடுபடாமல் தடுக்க 1,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததில், 26 போலீசார் காயமடைந்தனர். இது தொடர்பாக, 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
யுனைட் தி கிங்டம் பேரணியில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் பணக்காரர்களில் ஒருவரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் உரையாற்றினார்.
அப்போது, 'பிரிட்டன் பார்லி.,யை கலைக்க வேண்டும். அங்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும். இடதுசாரி கட்சிகள் கொலைகார கட்சிகள்' என, அவர் பேசினார்.
இநநிலையில், எலான் மஸ்க்கின் இந்த பேச்சுக்கு பிரிட்டன் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 'வன்முறையைத் துாண்டும் வகையில் பேசிய எலான் மஸ்க்கை கண்டிக்க வேண்டும்.
அவரது பேச்சு பொருத்தமற்றது. அவருக்கு எதிராக தடை விதிக்கப்பட வேண்டும்' என, அவர்கள் கொதித்தெழுந்தனர்.