ADDED : செப் 27, 2025 02:12 AM
பீஜிங்:சீனாவின் புதிய விமான தாங்கி கப்பல் 'புஜியான்', மின்காந்த ஏவுதல் முறையில் விமானங்களை வெற்றிகரமாக ஏவியது. இதன் மூலம், இந்த தொழில்நுட்பம் உள்ள உலகின் இரண்டாவது போர் கப்பல் என்ற பெருமையை 'புஜியான்' பெற்றுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவுக்கு சொந்தமானது, மிகவும் மேம்பட்ட விமானத் தாங்கி கப்பல் 'புஜியான்'. இது அக்டோபர் 1ல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. அதன் இறுதி சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
பழைய விமானம் தாங்கி கப்பல்களில் நீராவியால் உந்தப்படும் அமைப்பு இருக்கும். இது குறைந்த துார ஓடுபாதையில் விமானத்தை அதிவேகமாக செலுத்தி உயரே பறக்க உதவும்.
'புஜியான்' கப்பலில் மின்காந்த விமான ஏவுதல் முறை என்ற நவீன அமைப்பு உள்ளது. இது மின்காந்த விசையை பயன்படுத்தி, விமானங்களை மிக வேகமாக புறப்பட செய்யும்.
இது கடந்த 23ம் தேதி சோதித்து பார்க்கப்பட்டது. ஐந்தாம் தலைமுறை ஜெ35, நான்காம் தலைமுறை ஜெ-15டி, கே.ஜெ,600 ஆகிய மூன்று போர் விமானங்கள் இந்த நவீன மின்காந்த ஏவுதல் முறையில் வெற்றிகரமாக சிறிய ஓடுபாதையை கடந்து வானில் பறந்தன.
மின்காந்த ஏவுதல் அமைப்பு கொண்ட முதல் போர் கப்பல், அமெரிக்காவின் ஜெரால்ட் ஆர் போர்ட். இரண்டாவதாக தற்போது புஜியானில் இந்த அமைப்பு உள்ளது.