உலகளாவிய திறமையாளர்களுக்கு கதவை திறந்து விடுகிறது சீனா: அமெரிக்கா இழந்ததை கைப்பற்ற தந்திரம்
உலகளாவிய திறமையாளர்களுக்கு கதவை திறந்து விடுகிறது சீனா: அமெரிக்கா இழந்ததை கைப்பற்ற தந்திரம்
ADDED : செப் 23, 2025 07:37 AM

பீஜிங்: அமெரிக்காவின் எச்1பி விசா குழப்பங் களுக்கு மத்தியில், உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனா 'கே' எனும் புதிய வகை விசாவை அறிமுகப்படுத்துகிறது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்1பி விசாவுக்கான கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தி, வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
எச்1பி விசா வைத்துள்ளவர்களில் இந்தியாவிற்கு அடுத்து சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதையடுத்து, இளம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமையாளர்களை தன் பக்கம் ஈர்க்க, நம் அண்டை நாடான சீனா ஒரு புதிய வகை விசாவை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
எளிய நடைமுறை
சீனாவில் தற்போது 12 வகை சாதாரண விசாக்கள் கிடைத்து வருகின்றன. இந்த விசாக்களுடன் கே எனும் வகை விசாவை சேர்க்க அந்நாடு முடிவு செய்துள்ளது.
இந்த விசா மற்ற விசாக்களுடன் ஒப்பிடுகையில், எண்ணிக்கை, செல்லுபடியாகும் காலம், தங்கும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான இளம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு அதிக வசதிகளை வழங்கும்.
எச்1பி விசாவைப் போன்று இல்லாமல், இந்த கே விசா மிகவும் எளிமையான மற்றும் நெகிழ்வான நடைமுறைகளை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரருக்கு சீனாவில் உள்ள எந்த ஒரு நிறுவனத்தின் ஆதரவும் தேவையில்லை.
இதற்காக வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் வெளியேற்றத்திற்கான ஒழுங்குமுறைகளை திருத்துவதற்கான உத்தரவில் சீன பிரதமர் லி கியாங் கையெழுத்திட்டுள்ளார். இப்புதிய விதிகள் வரும், அக்டோபர், 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
அனுமதி
கே விசாவில் சீனாவிற்கு செல்பவர்கள் கல்வி, கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும், அது தொடர்புடைய தொழில்முனைவோர் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கான பரிமாற்றங்களிலும் ஈடுபட அனுமதிக்கப்படுவர்.
இந்த விசாவிற்கான விண்ணப்பதாரர்கள் சீன அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.