அணு ஆயுத சோதனை செய்யவில்லை; அமெரிக்கா புகாருக்கு சீனா மறுப்பு
அணு ஆயுத சோதனை செய்யவில்லை; அமெரிக்கா புகாருக்கு சீனா மறுப்பு
ADDED : நவ 04, 2025 06:48 AM

பீஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டி ஒன்றில், சீனா உள்ளிட்ட நாடுகள் பூமிக்கடியில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.
இதுகுறித்து, சீன வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:
சீனா ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடாகும். அணு ஆயுதங்களை 'முதலில் பயன்படுத்த மாட்டேன்' என்ற தன் நீண்டகால கொள்கையில் சீனா உறுதியாக உள்ளது.
எந்த சூழ்நிலையிலும், எந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை முதலில் சீனா பயன்படுத்தப் போவதில்லை என்பதை இதன் வாயிலாக உறுதியளிக்கிறோம்.
சீனா ஒரு தற்காப்பு அணுசக்தி கொள்கையை கடைப்பிடித்து வருகிறது-. மேலும், அணு ஆயுத சோதனைகளுக்காக தானாக விதித்துக்கொண்ட தடையை பின்பற்றி வருகிறது.
இதேபோ ன்று, உலகளாவிய அணு ஆயுத சோதனைகள் மீதான தடையையும், அணு ஆயுத பரவல் தடுப்பு முறையையும் பாதுகாப்பதற்கான அதன் உறுதிமொழிகளை அமெரிக்கா உண்மையுடன் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அணு ஆயுத சோதனைகளை மீண்டும் துவங்க வேண்டும் என்று அமெரிக்க ராணுவத்துக்கு, அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்வதை இதற்கு காரணமாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா முதலில் முழுமையான அணு ஆயுத சோதனையை துவக்கினால், ரஷ்யாவும் பதிலுக்கு சோதனையை துவங்கும் என, ரஷ்யா வெளிப்படையாக எச்சரித்துள்ளது. அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் உறுதிப்பாட்டை அமெரிக்கா மதிக்க வேண்டும் என, தற்போது சீனாவும் வலியுறுத்தியுள்ளது.
டிரம்பின் இந்த அறிவி ப்பு, உலகளாவிய அணு ஆயுத கட்டுப்பாட்டு கட்டமைப்பை பாதிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக, பெரும்பாலான நாடுகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

