அபிஷேக் ஷர்மா அதிரடி; வங்கதேசத்திற்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்து இந்தியா
அபிஷேக் ஷர்மா அதிரடி; வங்கதேசத்திற்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்து இந்தியா
UPDATED : செப் 24, 2025 09:48 PM
ADDED : செப் 24, 2025 07:51 PM

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில், இதுவரையில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி எளிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து, இன்று நடக்கும் சூப்பர் 4 சுற்றின் இந்திய அணியின் 2வது லீக் போட்டியில், வங்கதேசத்தை எதிர்த்து விளையாடி வருகிறது.
துபாயில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா மற்றும் கில் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 6.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 77 ரன்களை எட்டிய போது, கில் (29) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து, துபே (2), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (5) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். அதிரடியாக ஆடிய அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் 75 ரன்கள் குவித்த போது, ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பிறகு ஹர்திக் பாண்டியா (38) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. வங்கதேச அணியை பொறுத்தவரையில் ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டும், ஷாகிப், முஷ்தபிஷூர் ரஹ்மான்,சைபூதின் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
சூப்பர் 4 சுற்றில் ஏற்கனவே பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால், பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறும். செப்., 26ம் தேதி இந்திய அணி இலங்கையை எதிர்த்து விளையாட இருக்கிறது.