உலகின் 80% பிரச்னைக்கு முதியவர்கள் தான் காரணம்; டிரம்பை கேலி செய்தாரா ஒபாமா!
உலகின் 80% பிரச்னைக்கு முதியவர்கள் தான் காரணம்; டிரம்பை கேலி செய்தாரா ஒபாமா!
UPDATED : செப் 27, 2025 05:17 PM
ADDED : செப் 27, 2025 05:02 PM

வாஷிங்டன்: உலகின் 80% பிரச்னைக்கு முதியவர்கள் தான் காரணம் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். டிரம்பை ஒபாமா கேலி செய்திருப்பார் என அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அமெரிக்காவில் 2008 முதல் 2017ம் ஆண்டு வரை அதிபராக பணியாற்றியவர் தான் பராக் ஒபாமா. 64 வயதான ஒபாமா வயதான தலைவர்களைப் பற்றி ஒரு கருத்தை முன் வைத்துள்ளார்.
உலகின் 80% பிரச்னைக்கு முதியவர்கள் தான் காரணம் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியது 77 வயதான அதிபர் டொனால்டு டிரம்பைக் குறை கூறும் விதமாக பரவலாகக் கருதப்பட்டன.
ஒபாமா அளித்த பேட்டி ஒன்றில், ''அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் முதியவர்களால் தான் உலகில் 80 சதவீதம் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவர்கள், தங்கள் சாவுக்கு பயப்படுகிறார்கள். முக்கியத்துவம் இல்லாமல் போவதை எண்ணி அஞ்சுகிறார்கள். அதனால் அவர்கள் எதையும் விட்டு விடத் தயாராக இல்லை.''அவர்கள் எல்லாவற்றிலும், தங்கள் பெயரை எழுதி வைக்கிறார்கள். அச்ச உணர்ச்சி அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது,'' என்று கூறியுள்ளார்.
அவர், 2019ம் ஆண்டிலும் ஒரு முறை இதேபோல் பேசியுள்ளார். ''ஒவ்வொரு பிரச்னையிலும் பாருங்கள். முதியவர்கள் தான் வழி விடாதவர்களாக, பிரச்னைக்கு காரணமானவர்களாக இருப்பர். நீங்கள் இந்த வேலையை செய்வதற்கு தான் வந்திருக்கிறீர்கள் என்று அரசியல் தலைவர்களுக்கு நினைவூட்டுவது முக்கியம். அதே வேளையில், நீங்கள் ஆயுள் காலத்துக்கும் அதே வேலையை செய்து கொண்டிருக்க முடியாது,'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் 'பாராசிட்டமால்' மருந்து சாப்பிட்டால், குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படும் என்று சில நாட்களுக்கு முன் டிரம்ப் கூறியிருந்தார்.
அது பற்றி கருத்து தெரிவித்த ஒபாமா, ''இத்தகைய கருத்துக்கள், பொது சுகாதாரத்தை பாதிக்கும். கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை பாதிக்கும். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோரை பதற்றம் அடையச் செய்யும்,'' என்றார்.
வயதான தலைவர்களை கடுமையாக சாடி, ஒபாமா பேசி இருப்பது அமெரிக்க அரசியலில் பேசும் பொருளாகியுள்ளது.