கத்தாரில் ஹமாஸ் தலைவர்கள் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பு: பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்
கத்தாரில் ஹமாஸ் தலைவர்கள் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பு: பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்
ADDED : செப் 15, 2025 06:31 PM

டெல் அவிவ்: கத்தாரில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்கிறேன் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி உள்ளார்.
காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் இயக்கத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சண்டை 2 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. இஸ்ரேல், ஹமாஸ் போரில், ஹமாசுக்கு கத்தார் ஆதரவு அளித்து வருகிறது.
இதை ஏற்காத இஸ்ரேல் கத்தார் மீதும் அங்குள்ள ஹமாஸ் இயக்கத்தின் மீது தொடர் தாக்குதலை அரங்கேற்றி வருகிறது.மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் இந்த தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்க, இதற்கு கத்தார் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது.
இந் நிலையில், கத்தாரில் ஹமாஸ் தலைவர்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார். இஸ்ரேல் வந்துள்ள அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, நெதன்யாகுவை சந்தித்தார். இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களிடம் பேசியதாவது; அப்போது பேசிய நெதன்யாகு, இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது என்பது வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ வருகையில் இருந்து தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கத்தாரில் ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தியதற்கு பொறுப்பேற்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, காசா மக்களுக்கு நிச்சயம் சிறந்த எதிர்காலம் உள்ளது. இவை கிடைக்க வேண்டும் என்றால் ஹமாஸ் இயக்கத்தினர் அழித்தொழிக்கப்பட வேண்டும். அப்போது தான் சிறந்த எதிர்காலம் கத்தார் மக்களுக்கு கிடைக்கும் என்றார்.