த.வெ.க.,வுக்கு ஆதரவு ஏன்? காங்கிரஸ் கூறும் விளக்கம்
த.வெ.க.,வுக்கு ஆதரவு ஏன்? காங்கிரஸ் கூறும் விளக்கம்
ADDED : மே 07, 2026 06:35 PM

சென்னை: 'தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி, த.வெ.க.,வுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம்' என, காங்., -எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தை, காங்கிரஸ் ஆதரிப்பது குறித்து, சில விமர்சனங்கள் திட்டமிட்டு முன் வைக்கப்படுகின்றன. பதவி ஆசைக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், முதுகில் குத்தி விட்டதாகவும் கூறுவதை, காங்கிரஸ் முற்றிலுமாக மறுக்கிறது.
தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே, பல்வேறு அழைப்புகள் எங்களுக்கு வந்ததை நாடறியும். எனினும், மதவாத சக்திகளுக்கு எதிராக, 'இண்டி' கூட்டணியில் பயணிப்பதில், உறுதியாக இருந்தோம். ஜனநாயக நாட்டில், மக்களின் எண்ண ஓட்டம், சில நேரங்களில் எதிர்பாராத தேர்தல் முடிவுகளைத் தருகிறது.
அந்த வகையில், தமிழக மக்களின் ஜனநாயக முடிவுகளுக்கு தலைவணங்கி, மாநிலத்தின் எதிர்கால நலன் கருதி, இந்த முடிவை எடுத்துள்ளோம். வலிமையான மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே, எங்களின் ஒரே நோக்கம். இதில், தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கப்படுவதாகக் கூறுவது, அடிப்படை ஆதாரமற்றது.
தமிழக மக்கள் நலன், மாநில அமைதியை கருத்தில் கொண்டு, மதவாத சக்திகளை தனிமைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை கருத்தில் கொண்டே, த.வெ.க.,வுக்கு ஆதரவளிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
