மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட அறநிலையத்துறை கோயில்களின் சொத்துக்களின் நிலை என்ன?
மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட அறநிலையத்துறை கோயில்களின் சொத்துக்களின் நிலை என்ன?
ADDED : செப் 04, 2025 06:03 AM

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் உட்பட அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் சொத்துக்கள் பல அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் ஆக்கிரமிப்பாளர்கள் அனுபவித்து வருகின்றனர். கோயில் சொத்துக்களை பாதுகாக்க நியமிக்கப்பட்டுள்ள 30 தாசில்தார்கள் முழு முயற்சி செய்து வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை, நீதித்துறை ஒத்துழைப்புடன் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயில்களுக்கு மன்னர்கள் காலம் முதல் பலரும் நிலங்களை தானமாக வழங்கினர். அதற்கு ஆதாரமாக செம்பு பட்டயம், கல்வெட்டு, ஓலைச்சுவடி, பத்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஆயிரக்கணக்கான நிலங்கள் தமிழகம் மட்டுமின்றி, சுதந்திரத்திற்கு முன் ஒருங்கிணைந்த சென்னை மாகாணமாக இருந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில பகுதிகளிலும் இன்றும் உள்ளன.
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்கள், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் உள்ளன. தவிர நுாறு ஆண்டுகளுக்கு முன் பக்தர் ஒருவர் இலங்கை யாழ்பாணத்தில் உள்ள தனது நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை மீனாட்சி கோயிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார். இதுபோல் ராமேஸ்வரம் கோயிலுக்கும் இலங்கையில் நிலங்கள் உள்ளன. இருநாட்களுக்கு முன் மீனாட்சி கோயில் சொத்துக்களை பாதுகாக்க கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, விளக்கம் கேட்டு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பக்தர்கள் கூறியதாவது:
கோயில் சொத்துக்களை பாதுகாக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை அறநிலையத்துறை அலுவலகத்தில் மட்டும் 4 பேர் இதற்காக உள்ளனர். மொத்தம் 30 தாசில்தார்கள் இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் நில ஆக்கிரமிப்பு வழக்கு விசாரணைக்கு ஆவணங்களை தயார் செய்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர். அந்தந்த மாவட்டங்களில் கோயில் இணை, துணைகமிஷனர் மற்றும் வருவாய்த்துறை, பத்திரப்பதிவு அடிப்படையில் நிலங்களை அடையாளம் கண்டு மீட்கும் பணி நடந்தாலும், அதை மீட்க அறநிலையத்துறை போராட வேண்டியுள்ளது. போதிய ஆவணங்கள் இல்லாதது, கண்காணிக்காதது, சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காதது போன்ற மெத்தனபோக்குதான் இதற்கு காரணம்.
இலங்கையில் உள்ள மீனாட்சி கோயில் சொத்துக்களை இதுவரை அதிகாரிகள் யாரும் நேரில் சென்று பார்க்கவில்லை. பக்கத்து மாவட்டங்களில் உள்ள சொத்துக்களையே பார்க்காதபோது இலங்கைக்கு சென்று பார்த்து அதை பாதுகாத்து குத்தகைக்கோ, வாடகைக்கோ விடுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. மொத்தனப்போக்கு தொடரும் பட்சத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து கோயில் சொத்துக்களை அனுபவிப்பதோடு, விற்கவும் செய்துவிடுவார்கள். அதற்கு அறநிலையத்துறை இடம் கொடுக்கக்கூடாது. இவ்வாறு கூறினர்.